சீனுவாசன் என்பது இயற்பெயர்... ஆனால் பையாச்சு என்ற இந்தப்பெயர் எப்படி வந்திருக்கும் எனத்தெரியல,(ஒரு வேளை தெருவில் நிறைய பாலுவும்,சீனுவாசன்களும் அதிகம் இருந்திருக்கலாம்.(Eb பாலு, டிரசரி பாலு,வாத்யார் பாலு, குஞ்சுபிள்ளை பாலு,இப்படி சீனுவாசன்களில் PNB மாமா, ரமேஷ்@சீனு,பைத்தியம் சீனு,ரேடியோசீனு,இப்படி நீளும்)
இந்த மாதிரி பெயர் வைப்பதற்கே எங்கள் தெருவில் ஐந்துபேர் கொண்டக் குழு உண்டு அவற்றில்
சாம்பிள் சில…
கோயிலாம்,அர்பன் பேங் கண்ணன்,குடுகுடு ரங்கநாதன், போஸ்டாபீஸ் வீடு,பாம்பேஆம்,டன்சு பாட்டி, மாடியாம்,வக்கீலாம்,ஏழு புள்ளையாம்,அப்பளம்வீடு,சிங்கப்பூர் வீடு,சிமெண்ட் அய்யாங்கார் வீடு,புருடாத் வீடு, சின்னப்பட்டுவாம்,வாழைக்கொல்லை ஆம்,
ஆலஞ்சேரி, LIC ஆம். இப்படிதான் அடையாளம் வைத்து அழைத்தோம்)
அதில் இந்த பையாச்சு மாமாதான் அந்த ஹாஸ்டலுக்கு வார்டன்.
வடக்குப் புறச்சந்தில் ஐந்து வீடுகள் இருக்கும் அதில் இரண்டாவது வீடு. செக்கச்செவேல் நிறம்,கழுத்தில் நவரத்னமாலை,கோல்ட் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, மெலிதான பின் குடுமி,வாய் மணமணக்க வெற்றிலைப்பாக்கு, கக்கத்தில் சில்வர் வெற்றிலைப்பெட்டி, அதில் வெற்றிலை மட்டும் எப்போதும் இருக்காது. ஜூபிடர் டாக்கீஸ் தஞ்சை,குடந்தை,சீர்காழி மூன்று ஊர்களின் சினிமா கொட்டகை மேனேஜர், சீர்காழி மாணவர் விடுதி ஒன்றின் நிர்வாகம் இவரிடமிருந்தது. அப்போது ஐம்பது மாணவர்களுக்கு குறையாமல் ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயின்றார்கள்.
இதில்தான் தற்போதைய 27ஆவது தருமபுர மடாதிபதி சுவாமிகள் சில ஆண்டுகள் பயின்றார்கள். அவர்களின் இளம் பிராயத்தில் நானும் அவர்களோடு உரையாடி விளையாடியிருக்கிறேன் என்பதே பெரிய ஆசீர்வாதமாய் நினைக்கின்றேன்.
மாணவர்கள் காலை எழுந்ததும் பல்வேறு தோட்டங்களுக்குச் சென்று பூக்கள் பவழமல்லி,நந்தியாவட்டை சங்குப் பூ,மந்தாரை)பறித்து வரவேண்டும்,அதனைச் சில மாணவர்கள் தொடுத்துச்சுற்றிலும் உள்ள ஆலயங்களுக்கு வழங்குவார்கள்,(புஷ்ப கைங்கர்யம்) பின்னர் விடுதியில் போடும் பழையமுதைச் சாப்பிட்டுவிட்டு அவரவர்கள் பள்ளிக்குக் கிளம்புவார்கள், இதில் அத்தனையிலும் நானும் எங்கள் தெரு நண்பர்களும் பங்கு பெற்றதன் விளைவுதான் மனத்தில் இன்றும் ஆலயச்சேவை மற்றும் மனிதச்சேவை செய்யும் எண்ணம் தோன்றுவதற்கான அடிப்படையாக காரணமாக இருந்திருக்கலாம்.

அக்ரஹாரத்தில் நடைபெறும் எந்த விசேஷங்களும் பையாச்சு மாமா இல்லாமல் நடக்காது.
ஆலயத்தில் சாமி புறப்பாடே மாமா வந்தபின்தான் நடக்கும்..
பணம் கிளம்பினாலும் மாமா வந்தால்தான்..
விடுதி மாணவர்கள் அவரின் கண் அசைவில் தங்களது பணிகளைச் செய்வர்.
திராவிடர் கழக கூட்டங்களில் எல்லாம் இவருக்கும் தங்குடு மாமாவிற்கும் வசவுகள் விழும்.
அப்படித் திட்டுபவர்கள், இவரிடம் வேலை செய்பவர்களாகவோ அல்லது நில குத்தகைத் தாரர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள் வீட்டு நல்லவை மற்றும் கெட்ட நிகழ்வு அனைத்தையும் முன்னின்று கலந்து கொண்டு முடித்துக் கொடுத்துவிட்டு தாம்பூலங்களை எடுத்துத் தனது வெற்றிலைப் பெட்டிகளில் திணித்துக்கொண்டு கிளம்பி விடுவார். அப்படி ஒரு பழக்கம் அவருக்கு,ஆனால் இதை கேலி செய்பவர்கள் செய்து கொண்டேயிருக்க சிரித்தபடி கடந்து போய்விடுவார். பணியிடத்தில் நிர்வாகத்தில் நல்ல பெயர் அவருக்கு உண்டு. நாங்கள் எந்தச்சினிமாவிற்கும் டிக்கெட் எடுத்ததில்லை. மாமாவின் பெயர் சொல்லி அவரின் மகன் ரவியோடு சென்றுவிடுவோம். பின்னாளில் சினிமா கொட்டகைகள் கை மாறியதோடு,மாணவர் விடுதிகள் மூடப்பட்டு நிர்வாகம் மாறி முழுநேர ஆன்மிக வேலைகளைச் செய்துவந்தார்.
பிரதோசம் என்ற ஒன்றை யாரும் அறிந்திராதபோது இவரும் என்னில் மூத்தவன் கோபியும்தான் இணைந்து அந்தக் காலகட்டத்தில் சிவ ஆலயத்தில் அதனைச் செய்து வந்தனர்.
சீர்காழி திருமுலைப்பால் உற்சவத்தில் ஆண்டுதோறும் பங்கு கொள்பவர்,அந்த ஆண்டும் பங்கு பெற்று சங்கர மடத்தில் வழங்கிய நெய்ப்பொங்கலைக் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டதன் விளைவாக நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார் என்று கேள்விப்பட்டபோது மனசு சங்கடப்பட்டது.
பாவம் பையாச்சு மாமா! ஆசையாய் அதிகம் சாப்பிட்டதினாலே போயிருக்கவேண்டாம்.
தொடரும்..