தமிழியற் கல்வியும் – கற்பித்தலும்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பது பாரதியார் கனவுகளில் ஒன்று .பாரதியாரின் நினைவு நூற்றாண்டும் – கப்பலோட்டிய தமிழர் வ உ சி யின் 150 ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் இத்திங்களிலேயே அமைகின்றன .காலப்போக்கில் சான்றோர் பெருமக்கள் கண்ட கனவுகள் எல்லாம் மெல்ல மெல்ல நிறைவேறுகின்றன .
எங்கும் தமிழ் உணர்ச்சி
எதிலும் தமிழ் வளர்ச்சி
என்ற எழுச்சிப் போக்கை நாம் வரவேற்று மகிழலாம் .
நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வதிந்து வருவதோடு அங்கெல்லாம் தமிழ் மன்றங்களைப் போலத் தமிழியற் கல்வியையும் கற்பித்தலையும் கடைப்பிடித்து வருகின்றனர் .
நேற்றுக்கூடத் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பதிப்பு ,படைப்பு ,தொகுப்பு ,மொழியாக்கம் என்ற நான்கு வகையிலும் தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாக்கும் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள் .
இந்த நிலையில் அயல்நாடுகளில் தமிழ்க்கல்வி எவ்வாறு அமைந்தது என்பது பற்றி நாற்பதாண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் அ தாமோதரன் ஜெர்மனி நாட்டில் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய நிறுவனத்தில் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றியவர் .
அண்மையில் ஓராண்டுக்கு முன்னர் தான் அவர் ஓய்வு பெற்றிருந்த நிலையில் தமிழ்நாட்டில் மறைந்தார் அப்பெருமகனார் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நிகழ்ந்த போது எழுதிய கட்டுரை சிந்தனைக்குரியதாகும் .
1965 க்குப் பின்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் விளைந்த
மொழி வேட்கை ,
இலக்கிய ஆர்வம் ,
இளைஞர்கள் பேசிய உரை வீச்சு இவை மங்கிவருவன போலத் தோன்றுகிறது .அயல்நாட்டுத்தமிழ்மக்கள் காட்டும் ஆர்வம் இங்கே இருப்பதை விடப் பெரிதாக இருக்கிறது .ஒருவேளை தமிழ்நாட்டை விட்டு அயல்நாட்டில் வாழ்வதால் கூட இருக்கலாம் .
ஏனிங்கு இந்த வறட்சி என்று முத்தமிழறிஞர் கலைஞர் ஒரு முறை கேட்டது நினைவுக்கு வருகிறது,மாணவர்களின் ஆர்வம் – பேராசிரியர்களின் கற்பிக்கும் திறன் இன்றைய நிலைக்கேற்ப இலக்கிய இலக்கணக் கோட்பாடுகளில் மாற்றம் அறிவியற் கல்வியில் தேர்ந்தால் தான் வாழ்வில் உயர்வு பெற முடியும் என்ற எண்ணம் .
இவை ஆராய்தற்குரியன .மக்களும் அரசும் ஒருங்கிணைந்து தமிழ்க்கல்விக்கும் – பணி வாய்ப்புக்கும் தொடர்ந்து தோள் கொடுக்க வேண்டும் .கருத்து வேறுபடுவதற்குரிய குறிப்புக்கள் இக்கட்டுரையில் உள்ளன .மொழியியல் அறிஞர் , இலக்கிய அறிஞர் இருவேறுபட்ட நிலையில் உள்ளனர் ..
எண்னென்ப ஏனை எழுத்தென்ப என்ற அமைப்பில் எண்ணோடு எழுத்து இன்றைய எண்மியச் சூழலில் எழுத்து வடிவங்கள் கரைந்துவிடும் போலத் தெரிகிறது .இது பற்றிச் சிந்திக்கத் தூண்டுவதற்குத் தான் இக்கட்டுரையை அவர் நினைவாக இங்கே வழங்கியிருக்கிறேன் .
தமிழ் மண்ணுக்குச் சமயத் தொண்டாற்ற வந்த மேலைப் புலப் பாதிரிமார்கள், ஏறக் குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழியலுக்கு ஊன்றிய வித்து.பிரொயன்சா, சீகன்பால்கு. வீரமாமுனிவர், பெப்ரிசியஸ், கிரவுல், முசே. துய்புய்
போன்ற அருட்தந்தையர் உரமூட்டியும், கால்டுவெல், திரு போப். ரோட்லர், வின்சுலோ பைத்தான், ப்ளாக் போன்ற மூதறிஞர்கள் நீரூற்றியும், இந்தியவியல் போலப் பெருமைப்படும் அளவிற்குத் தமிழியல் வளர்ந்தோங்கவில்லை .
நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டாலும் தமிழியல் போதிய அளவு பரவவும் இல்லை; செல்வாக்குப் பெறவும் இல்லை.கசப்பான, ஆனால் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதோர் உண்மை இது.வெறும் மிகைப்படுத்துதல் இல்லை.
தேக்க நிலை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தமிழியலுக்கு ஒரு புதுத் திருப்பம் ஏற்பட்டது.இதனால் வளரத்தொடங்கிய தமிழியல் ஆர்வம் 1950க்குப் பிறகு விறுவிறுப்பாக மாறியது.
தமிழக அரசும் தனிநாயக அடிகளும் 1964 இல் உருவாக்கிய உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் இந்த நிலைமையை மேலும் வலுப்படுத்தியது.
இதன் விளைவாக ‘ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பதினைந்து பல்கலைக்கழகங்களில் இன்று ( 1995 – 2000 ) தமிழ் கற்பிக்கப்படுகிறது.
வேறு சில கல்வி நிலையங்களில் தமிழியல் ஆராய்ச்சிக்கு, வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இப்படி முப்பது ஆண்டுகளாக விரைந்து வளர்ந்த தமிழியல், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேங்கத் தொடங்கியது.இந்தத் தேக்க நிலைக்குப் பல்வேறு பொதுக் காரணங்கள் இருந்தாலும். தமிழியலுக்கு மட்டுமே பொருந்தும் சிறப்புக் காரணங்கள் சிலவும் உண்டு.
அவற்றை எடுத்துக்காட்டி இந்த நிலையை மாற்றிச் சீர்படுத்துதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காரணங்கள் வடமொழியைக் கற்பிப்பதே இந்தியவியல் என்ற தவறான கொள்கையை மேலை நாட்டு அறிஞர்கள் பலர் இன்றும் விடாப் பிடியாகக் கொண்டிருப்பது, விடுதலைக்குப் பிறகு தேசிய மொழிப் பிரச்சனையில் இந்திய அரசு தெளிவற்ற போக்கைக் கடைப் பிடிப்பது, தமிழ்மொழியின் இயல்பு களைத் தாய்மொழி என்பதனால் இனங் கண்டுகொள்ளாதது முதலியவற்றை இப் போதைய தேக்க நிலைக்குச் சிறப்புக் காரணங்களாக் குறிப்பிடலாம்.
இவற்றுள்ளும் முன்னைய இரண்டைக்காட்டிலும், மூன்றாவதே தமிழறிஞர்களின் கவனத்திற்கு உரியதாகும். மொழியின் இயல்பு
தமிழ் இனியது; ஆனால் நாம் நம்புவது போல எளியது அல்ல. தாய்மொழி என்பதால் இந்த உண்மை நமக்கு எளிதாகப் புலப்படுவதில்லை .
இதனைப் பிறமொழியாளர்கள் சுட்டிக்காட்டினாலும், உடனடியாக நாம் ஏற்றுக்கொள்வதும் இல்லை.
பிறமொழியாளர் கண்ணோட்டத்திலிருந்து இந்த உண்மையை நுணுகி நோக்கி அந்தக் கடினப் பாங்குக்கு ஈடாகும் வகையில் தமிழைக் கற்க முயலும் பிறமொழியாளர்களுக்கு உதவும் வகையில் – பணியாற்றித் தமிழியலுக்குப் புதியதொரு – கடைதிறப்பு விழா நடத்த வேண்டும்.
அப்படிச் செய்தாலன்றித் தமிழியல் மீது ஆர்வம் மிகாது.
ஆர்வம் மேலோங்கிவிட்டால் மற்றைய காரணங்கள் தமிழியலின் வளர்ச்சியை நெடுங்காலம் தேக்கி நிறுத்திவிட முடியாது.எனவே இன்றைய தேக்க நிலையைப் போக்கத் தமிழியல் துறையில் அடிப்படைப் பணிகள் சிலவற்றை நாம் உடனடியாக நிறை வேற்ற வேண்டும்.
இன்றேல் இந்தியவியல் ஆராய்ச்சியில் தமிழியல் வெறும் பிற்சேர்க்கையாக அல்லது அடிக்குறிப்பாக நின்றுவிடும்.
நூலடங்கல் எந்தவொரு ஆராய்ச்சித் துறைக்கும் செம்மையான பாதையை அமைத்துத் திறமான புலமையை வளர்க்க உதவுவது நூலடங்கல் ( Bibliography ) ஆகும்.
ஆய்வு தெறியில் நிகழும் தவறான போக்குகளை மாற்றிப் பிழைக் கோட்பாட்டுகளைத் திருத்தி இரட்டிப்புப் பணிகள் தொடராமல் தடுத்துப் புத்தம் புதிய அறிதுறைகளை உருவாக்கத் துணை செய்வதும் நூலடங்கலேயாகும்.
ஒரு துறையில் நிறைவேறிய ஆய்வுப் பணிகளைத் தொகுத்துக் காட்டும் பட்டியலாக மட்டுமே நூலடங்கலைக் கருதக் கூடாது.மாறாக ஒரு துறையில் நிகழும் ஆராய்ச்சியின் வளர்ச்சியை அதன் பரப்பு, எல்லை உள்ளிட்ட அதன் வரலாற்றையே தெற்றென எடுத்துக்காட்டும் கையேடு அது,என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இத்தகைய நூலடங்கல் ஒன்று தமிழியலுக்கு இன்றுவரை இல்லை.இனிமேல்தான் அது உருவாக வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.பாட நூல்கள் 1716 இல் சீகன் பால்கு வெளியிடத் தொடங்கியது முதல், பிறமொழியாளர்கள் தமிழைப் பயில்வதற்கென இருமொழி இலக்கணங்கள் ‘தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
அதன் விளைவே எண்பதுக்கு மேற்பட்ட தமிழ் இலக்கணங்கள், வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.என்றாலும் விரல் விட்டு எண்ணும் சிலவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் குறைபாடு உடையவைகளே ஆகும்.
இலக்கிய நடையும் பேச்சு நடையும் ஒருங்கிணைத்துக் காலந்தோறும் ‘மாற்றமும் வளர்ச்சியும் பெற்றுக்கொண்டி ருக்கும் தமிழைப் போன்றதொரு தொன்மொழிக்கு இந்த இலக்கண நூல்கள் போதா.
இன்னும் தோன்ற வேண்டும்.
இலக்கணம் ‘களைத் தவிரவும் உரைநடைக் கோவைகள், செய்யுட்கோவைகள், கதை மஞ்சரிகள், பயிற்சி நூல்கள், இலக்கண அட்டவணைகள் ‘உச்சரிப்பு நூல்கள், வாக்கியப் பயிற்சி நூல்கள் என்று பல திறப்பட்ட பாடநூல்கள் வெளிவர வேண்டும்.
வடமொழியைப் பயில்வோருக்குக் கிடைக்கும் பாடநூல்களின் அளவில் பத்தில் ஒரு பங்குகூடத் தமிழ் பயிலும் மாணவர்கட்குப் பாடநூல்கள் கிடைப்பதில்லை;
கிடைப்பவையும் தரமானவைகளாக இல்லையென்ற உண்மையை அறியாத தமிழியல் அறிஞர்கள் இருக்க முடியாது.
அகராதிகள் அயல் மொழியைக் கற்பவர்களுக்குப் பாட நூல்களை அடுத்துத் தேவைப்படுவது நல்ல அகராதிகள் ஆகும்.17-ஆம் தும் நாண்டின் இடைப் பகுதியில் பிரொயன்சா என்னும் பெருமகனால் தோற்றுவிக்கப்பட்ட இருமொழி அகராதித் தொகுப்புப் பணி அகராதியியலில், கடந்த முந்நூறு ஆண்டுகளில் நன்றாக வேரூன்றி விட்டது.எனவே தான் இருமொழி அகராதிகள்,பன்மொழி அகராதிகள், சொற்களஞ்சியங்கள், சொல்லடைவுகள்,கலைச் சொல்லகராதிகள் என்று பல்கிப் பெருகும் இன்று ஐந்நூற்றுக்கு மேற் பட்ட பன்மொழி அகராதிகள் தமிழில் காணப்படுகின்றன.
ஆயினும் இவற்றுள் ‘நான்கைத்தைத் தவிர மற்றவை எல்லாம் ஏதாவது ஒரு வகையில் குறைபாடு உடை யவையே.நல்ல அகராதிகனாகக் கருதப்படும், நான்கைந்தும் மிகப் பழமை யானவை.
அகராதியியலில் புதிய கோட் பாடுகளும் நெறிமுறைகளும் வளர்த்துள்ள தற்கால நிலைமைக்கு மிகவும் பிற்பட்டவையாகும்.
பிறமொழியாளர்கள் இன்றைய தமிழைத் தெளிவாகப் பயிலவும் தமிழில் விளைந்துள்ள பொருள் மாற்றங்கள் எல்லாவற்றையும் அவர்களுக்குப் பிழையறப் பயிற்றுவிக்கவும் பயன்படக்கூடிய அகராதிகள் இல்லவே இல்லை.
இத்தகைய அகராதிகள் இனிமேல் தான் திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும்.மொழி பெயர்ப்புகள் தமிழிலக்கியப் போக்கையும் வளத்தையும் இலக்கிய நயத்தையும் மேம்பாட்டையும் பிறமொழியாளர்கள் எடுத்த எடுப்பில் இளகிய மூலத்திலிருந்தே நேராகப் படித்தறிவது என்பது ஒரு விழைவாகலாமேயன்றி நடைமுறைக்கு ஒத்துவராது.
அற நூல்களின் கருத்தாழம், பக்திப்பாக்கங்களின் சுவை, பெருங்காப்பியங்களின் காவிய நலம், புராணங்களின் பெருமை என்பவற்றோடு பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற இக்காலக் கவிஞர்களின் கவி தடை கல்கி , மு வ.. அகிலன், ஜெயகாந்தன், நீல பத்மநாபன், இலட்சுமி முதலியோரின் உரை நடை ஆகியவற்றை நாம் பிறமொழியாளர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்றால், இவற்றின் சுவையை அவர்களுக்கும் உணர்த்த வேண்டுமென்றால் இவற்றில் கணிசமானவற்றை நாம் மொழிபெயர்த்தாக வேண்டும்.
இது வரையில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகளைத் தமிழிலக்கியப் பரப்போடு ஒப்பிடும் போது இத்துறையை நாம் வளர்க்ககவில்லை என்ற உண்மை தெளிவாகாமல் போகாது.
நம்முடைய இலக்கியச் செல்வங்களைப் புறவுலகுக்கு வழங்காமல் வெளிநாடுகளில் தமிழியலை வளர்ப்பது முடியாதல்லதா ?மொழிநிலையில் தமிழைக் கற்பிப்ப தோடன்றியும் தொடர்புள்ள பல துறைகளை அதனோடு இணைத்தும் அதன் பரப்பை ‘விரிவாக்கவேண்டும்.
தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், வரலாறு, சமயம்; காதல், வீரம், அறம் பற்றிய தமிழ்க் கோட்பாடுகள், தமிழ் மக்களின் அரசியல் அமைப்பு, சமுதாய போக்கு, ஆன்மிகக் கொள்கை; தமிழர்களின் நம்பிக்கைகள், சடங்கு முறைகள் போன்ற நாட்டுப்புறக் கலைகள்; தமிழரின் குடும்ப அமைப்பு, மணவினை முறைகள், சொத்துரிமைகள் ஆகிய எல்லாக் கோணங்களைப் பற்றியும் ஆராய்ச்சி அமையும் வகையில் ‘தமிழியலை விரிவுபடுத்த வேண்டும்.
இல்லையானால் நாளடைவில் தமிழியல் குறுகிச் ‘சுருங்கி வெறும் மொழிக் கல்வியோடு நின்று விடும்.தகவல் தொடர்புகள் வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் உயர் கல்வி நிலையங்களிலும், பல தாப்பட்ட நிலைகளில் தமிழ் கற்பித்தலும் தமிழியல் ஆராய்ச்சியும் நடைபெறுகின்றன.
அறிஞர்கள் நாம் கண்ட ஆய்வு முடிவுகளை வெளியிடுவதற்குரிய தரமான செய்தியேடுகள் இருக்க வேண்டும்.தமிழியலைப் பொறுத்தவரையில் மேற்கறிய எல்லாமே ஒட்டு மொத்தமாகத் தேவைப்படுகின்றன அவ்வப்போது ஓரிரு முயற்சிகள் செய்யப் பட்டாலும் அவை பெயரளவில் தொடங்கப்பட்டுக் காலப்போக்கில் நின்று விடுகின்றன , இந்த நிலை மாறவேண்டும்.
ஒரு நிலைப்போக்கு தமிழ்மொழியின் சிற்சில பகுதிகள் இயல்பாகவே கடினமானவையெனப் பிறமொழி யாளர்களால் கருதப்படுகின்றன.தமிழ் தெரியாதவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் இக்கூற்றை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்தப் போக்கை மாற்றுவதற்கு நாம் சிறிது கூட முயலவில்லை உதாரணமாகத் தமிழ் அகராதி வெளிவந்து நாற்பதாண்டுகள் ஆகியும் தமிழ்ச் சொற்களின் அகரவரிசை முறையில் ஒரு நிலையோட்டத்தைக் காண முடியவில்லை.
தமிழை ஒலிபெயர்ப்பதிலும் பிறமொழிச் சொற்களை ஒலிபெயர்த்து எழுதுவதிலும் மனம்போன போக்கைக் கடைப்பிடிக்கிறோம் கலைச் சொற்களை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் நாம் திட்டமிட்டுச் செயற்படுவதே இல்லை .
ஒரே வகையான குறுக்க விளக்கங்களையும் குறியீட்டு முறையையும் பின்பற்றுவதில்லை.சொற்களைச் சேர்ப்பதிலும் பிரிப்பதிலும் ஒரே முறையைக் கையாள்வதில்லை.சில எழுத்துக்களுக்கு இரு வரிவடிவங்களைக் கூடப் பயன்படுத்துகிறோம்.
டாக்டர் பட்டப் பேற்றுக்கான கட்டுரை எழுதுவதில் கூட முறையியலை மேற்கொள்வதில்லை.மேல் மட்ட நிலையிலுங்கூட எந்த வித நூல் நடையையும் ( Style Sheet ) பின் பற்றாமல் மனம் போன போக்கில் கட்டுரை எழுதும் முறை மேற்கொள்ளப்படுகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், அச்சுப் பிரதி திருத்துபவர்கள், தட்டெழுத்தாளர்கள், செய்தி இதழ்களின் ஆசிரியர்கள் , வெளியீட்டாளர்கள் ஆகிய அனைவரும் ஒத்துழைத்தால் தமிழில் ஒருவகைச் சீர் நிலையை (Uniformity) விரைந்து கொண்டு வந்துவிடலாம்.
இந்தச் சீர்நிலையை ஆரம்பப் பள்ளி முதலே முறையாகச் செயல்படுத்தி முரண்பாடுகளைத் தவிர்த்தால் ஒழுங்குமுறை, ஓரியல் போக்கு என்ற எல்லாமே தமிழுக்கு உரியதாகிவிடும்.
தமிழ் தெரியாத பிறமொழியாளர்களுக்குத் தமிழை எளிமைப் படுத்துவதற்காக இவற்றைச்செய்வதாக நாம் கருதிவிடக் கூடாது.வளரும் கலைகளுக்கும் அறிவியல் துறைகளுக்கும் ஏற்ப நமதுமொழியைத் தரப்படுத்துவதாகும்.இப்பணிகளை நெடுங்காலமாகப் புறக்கணிப்பது தமிழியலின் வளர்ச்சியைத் தடைப்படுத்துவதாகவே முடியும்.
வேண்டுகோள் பன்னிரண்டு ஆண்டுகளாகப் பிறமொழியாளர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிக்கும் அனுபவத்திலிருந்தும் தமிழ் பயிலும் வெளி நாட்டு மாணவர்களின் முறையீடுகளிலிருந் தும் தமிழைப் பயிற்றுவிக்கும் பிறமொழி பேராசிரியர்களிடம் உரையாடியதிலிருந்தும் உருவான கருத்துக்களில் சிலவற்றை மட்டும் பொது நிலையில் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
இந்தக் கருத்துக்களிலுள்ள நேரிய போக்கை உணர்ந்துகொண்டு குறைபாடு களைக் கண்டறிந்து அவற்றை விரைந்து களைவதற்குரிய நல்ல திட்டங்களை மேற்கொள்ளவேண்டியது தமிழறிஞர்களின் தலையாய பணிகள் மட்டுமல்ல; தலைமுறைக் கடமைகளுமாகும்.
கடல்கடந்த நாடுகளில் தமிழியலை வளர்க்க விழையும் ஒவ்வொரு தமிழ் மகனும், ஒவ்வொரு கல்விக் கழகமும் ஒவ்வொரு தமிழ் இயக்கமும், இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….
ஒளவை நடராசன்
Leave a Comment
You must be logged in to post a comment.