Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 46

Written by Dr. Avvai N Arul


“தமிழ்ப்பேச்சும் – தடந்தோள் வீச்சும்”


நீங்கள் முனைந்தால் ஊடகத் துறையிலோ, வேறு பிரிவிலோ நுழைவுத்தேர்வு எழுதி ஆட்சித்துறையிலோ, திரைப்படத் துறையிலோ பணியாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்று தொடர்ந்து சொல்லி வந்தார்கள்.
என்னை அரிமாக் குருளையர் இயக்கத்தில் இணைத்த நண்பர் சிவகுமாரை நான் என்றும் மறவேன்.
அவருடைய அறிமுகத்தால் எனக்குப் பல்வேறு வாய்ப்புகள் குவிந்து, அனுபவங்களில் தோய்ந்து, தலைமையை நோக்கி விரைந்து முன்னேறுவதற்கு அடித்தளம் கிடைக்கப் பெற்றது எந்தையார், சிவகுமாரை அப்பொழுதே பெருமிதமாக நீ ஒரு ‘Lateral Thinker’ என்று விளித்து மகிழ்வார்.
நுணுக்கமாகப் பல கருத்துகளைச் சொல்லும் ஆற்றல் வாய்ந்த சிவகுமார் ஆங்கிலப் பேராசிரியராக மாறுவார் என்று தான் நான் நினைத்தேன். பாதை மாறி, வழக்கறிஞராக இப்பொழுது மிளிர்கிறார்.
அரிமாக் குருளையர் இயக்கத்தால் தான் செல்வி வித்யா சடகோபனின் நட்பினைப் பெற்று ‘கிளியா’ விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பெருவாய்ப்புக் கிடைக்கப்பெற்றது.
அரிமாக் குருளையர்களாக நாங்கள் அப்பொழுது அதிகம் பெருமை தெரியாத ஏலகிரியில் தலைமைப்பண்புப் பயிற்சி செய்யகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அமைந்தது.
அங்குத்தான் பெரும் திரைத்தயாரிப்பாளர், கவிஞர் பஞ்சு அருணாசலத்தின் மகனார் சுப்பு பஞ்சுவை அறிந்து பழகினேன்.
அதேபோல் சித்ரா திரையரங்க உரிமையாளரின் திருமகன் விஜயானந்த் நட்பும் கிடைத்தது. விடியற்காலைகளில் மெரினா கடற்கரையில் அவர் நீந்தும் ஆற்றல் பெற்றவர்.
அதேபோல், பாரிமுனையில் ஆண்டர்சன் தெருவிலுள்ள பெரும் காகித நிறுவனத்தின் திரு. அண்ணாமலையின் மகனார், வெங்கட் அண்ணாமலையின் அறிமுகமும் கிடைக்கப் பெற்றது.
வெங்கட்டின் ஆங்கில உரைகளைக் கேட்பது இனிமையாக
இருக்கும். அவரை லியோ கிளப்பின் டெமாஸ்தினஸ் என்று பாராட்டுவார்கள்.
அவரும், அவர் தங்கை சிவகாமியும் என்னுடன் நீண்ட நேரம் பேசி மகிழ்வார்கள். அவர்களின் இல்லத்தின் தவசிப்பிள்ளை சமைக்கும் உணவு தனிச்சுவை வாய்ந்தது.
வழக்கறிஞர் மணிநாராயணன் மைந்தர் அரிமாக் குருளை சிதம்பர குமாரின் நட்பு ஏற்பட்டு, வளர்நிலைகள் பல எய்தியுள்ளது.
அரிமாக் குருளையர்களான தேவன் தேவே, ஜினேஷ் ஷா, இராஜீவ் ஓரா, பிரக்னேஷ், பாலகுமார் போன்றோரும் நண்பர்களானார்கள்.
அந்நாட்களில், கலைஞானி கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு நல்கியதைக் கவிஞர் சதீஷ் இன்றும் சொல்லி மகிழ்வார்.
கவியரசு கண்ணதாசன் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி, கவிஞரின் நினைவாக ‘மியூசிக் அகாதமி’ அரங்கத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இன்னிசை நிகழ்வினை ஒருங்கு செய்ய நண்பர் ஜோதி இராமலிங்கம் முயன்றார்.
அம்முயற்சி வெற்றிபெறச் செய்வதற்கு நன்கொடைகளை வாங்கித் தருவதற்கு வழக்கறிஞர் கண்ணனும், வழக்கறிஞர் சுமதியும் நானும் முனைந்தோம்.
வழக்கறிஞர் சுமதியின் நன்முயற்சியினால் பல நிறுவனங்களிலிருந்து நன்கொடைகள் பெற்று, விழா வெற்றிகரமாக நடைபெற்றது.
பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், பேச்சுப் போட்டிகள் என்ற பல நிகழ்வுகளுக்கு வழக்கறிஞர் சுமதி, கவிஞர் சதீஷையும், சர்வேசன், அபுபக்கர், பா.ரா.சண்முகம் போன்றோரையும் என்னையும் அழைத்துச் செல்வார்கள்.
காயிதே மில்லத்து மகளிர் அரசுக் கல்லூரியின் குருதிக்கொடை நிகழ்வின்போது இளங்கலைத் தமிழிலக்கியம் பயின்று வந்த மாணவிதான் இன்று புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர் ஜெய்ஸ்ரீ சுந்தர் ஆவார்.
அவரை அப்போது நான் கல்லூரியில் சந்தித்தபோது ஒதுங்கி அஞ்சும் இயல்பு கொண்டவராகத்தான் காட்சியளித்தார்.
அவரைப் பார்த்தவுடன் அவருடைய பெற்றோர்கள் திரு கண்ணன், திருமதி மணிமேகலை கண்ணன் அவரின் பாட்டனார் முத்தமிழ்க் காவலர்தான் நினைவில் சுழன்றார்கள்.
முத்தமிழ்க் காவலர் (10.11.1899-19.12.1994) எங்கள் குடும்பத்துக்குப் பெரிதும் வேண்டியவர்.
தமக்கையார் மணிமேகலையும், மாமா கண்ணனும் இன்றுவரை அந்த பாசமழையைப் பொழிந்து வருகின்றனர்.
கல்லூரியில் வகுப்புக்குத் திடுமென்று வருகை தரும் முதல்வர் போல முத்தமிழ்க் காவலர் எங்கள் வீட்டுக்கு வருவார்.
‘டாக்டர் மருமகளே’ என்று என் அன்னையாரைப் பரிவுடன் அழைப்பார்.
தமிழ், கணக்கு, கல்வி, ஆங்கிலம், உடற்பயிற்சி, சிக்கனம், உடையொழுங்கு என்றெல்லாம் எங்களுக்கு வேடிக்கையாக அறிவுறுத்துவார்.
அடிக்கடி என் அம்மா சொல்வது: ‘முத்தமிழ்காவலர்தான் என் தாய் தந்தை திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.
அவர் சொல்லிய நல்லுரை, “அரவணைத்து நட. அதிலே பயனில்லையென்றால் அடக்கிப் பார். அதிலும் பயனில்லையென்றால் அடங்கிப் போ என்பது நகைச்சுவைக்காக நான் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கையை வடிவாக்க வேண்டும்” என்று கூறினாராம்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய முதற்கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிய தலையாய தமிழ்ப் பெருமகனார் முத்தமிழ்க் காவலர் ஆவார்.
அதில் அவர் சொல்வது, “பாடலுக்காக ஒருமுறை படித்தேன், பாட்டிலே உள்ள பகுத்தறிவு மணத்திற்காக மீண்டும் ஒருமுறை படித்தேன், கவிதைக்காக மறுமுறை படித்தேன், பிறகு, கருத்துக்காக பலமுறை படித்தேன். ஒவ்வொரு முறையும் படித்தேனாகவே பாடல்களைச் சுவைத்தேன்.”
நாங்கள் அவருடைய திருச்சி இல்லத்திற்கு அவ்வப்போது சென்று வருவோம்.
அவர் வளர்த்த நான்கு கால் நாயகர்கள் எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளி விளையாட வைக்கும்.
காலை 11 மணிக்கு இரு காக்கைகள் வரும். அவற்றிற்கு உணவிடுவார். இது காக்கைக்குன்றம் என்பார்.அவரிடம் ஒருமுறை ‘இது என்ன கைப்பை?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர் ‘இதில் 40 பொருள்கள் இருக்கின்றன. மாற்றுடை, போர்வை, துண்டு, கணக்கேடு, நாட்குறிப்பு, பேனா, பென்சில், விபூதி, சந்தனம், குங்குமம், எழுதாத அஞ்சலட்டைகள், ரெவின்யூ அஞ்சல் தலை, திருக்குறள், ஏலக்காய், சிறு கத்தி, எண்ணெய், சிறு பணப்பை, வெள்ளைத் தாள், பதிவு செய்த டிக்கட், மூக்குக்கண்ணாடி (மாற்று) என்று எடுத்து வைத்து எண்ணச் சொன்னார். பெட்டியை மூடிக் காட்டி இது என் தலையணை’ என்றார்.
எதிலும் ஒழுங்கு, நேர்மை, நாணயம், தெளிவு, துணிவு கொண்ட வேந்தராகச் சிவந்த மேனி, செம்மாந்த நடையோடு கைவீசி அவர் நடக்கும் அழகே தனி!
பேரறிஞர் அண்ணா ஒருமுறை ‘சிலருடைய நகைச்சுவைகள் தடுக்கி விழுந்து அதைப் பார்த்துச் சிரிக்க வைக்கும். மற்ற சிலரின் நகைச்சுவை ஒருவரைக் குப்புறத் தள்ளிவிட்டு விழுந்ததைப் பார்த்துக் கைதட்டிச் சிரிக்கின்ற நகைச்சுவையாக இருக்கும். ஆனால், முத்தமிழ்க் காவலருடைய நகைச்சுவை மட்டும் நினைத்து நினைத்துப் பின்பற்றக்கூடிய அறிவுரை பொதிந்த நகைச்சுவையாக இருக்கும்’. என்று குறிப்பிட்டார்.
எங்கள் மூவரிடமும் ‘எண்ணூறு பெரிதா, தொண்ணூறு’ பெரிதா என்று கேட்பார். அதற்கு ‘தொண்ணூறு பெரிது’ என்று நான் சொல்லியதைத் திருத்திக் காட்டினார்.
தொழிலாளர் என்ற அழகான சொல்லில் ழ, ல, ள மூன்றும் உள்ளது என்றும், இசையில் குழல், முழவு, யாழ் என்ற தமிழின் சிறப்பைப் பாடமாகவே எனக்கு நடத்திக் காட்டினார்.
ஆங்கிலத்தில் A, B, C, D இல்லாத 100 சொற்களை நொடியில் சொல் என்பார். One முதல் Ninety Nine வரை சொல்லச் சொல்லி எதிலும் ஏ, பி, சி, டி இல்லை என்பார்.
அவர் 11.11.1958-இல் தமிழகப் புலவர் குழுவினை அமைத்தார். அதன் தலைவராக எந்தையார் இப்போது அணி செய்கிறார்.மாமா கண்ணன் இந்தி மொழியில் பெரும்புலமை படைத்தவர்.
அவர் செய்கின்ற சப்பாத்திகளைப் பூரிப்பாக உண்போம். கோதுமை மாவைப் பிசைந்து குறைந்தது 8 வகை பூரி, சப்பாத்தி செய்து, தானே சுட்டு அளிப்பார்.
மணிமேகலை அக்கா சுழலும் பம்பரமாகத் தமிழ்ப்பணிகளைச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர். அக்காவிற்கு அண்மையில் தமிழக அரசு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விருது வழங்கிப் பெருமையளித்தது.
அவர்களின் திருமகன் ஸ்ரீகாந்த் கவிஞராகவும், தொழில் அதிபராகவும், தேசியக் கட்சி பாஜக-வில் பொறுப்பு வாய்ந்த ஒருங்கிணைப்பாளராகவும் மிளிர்கிறார்.ஒருமுறை என்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதற்குக் குரல்பதிவு செய்ய அழைத்தார்.
என் பதிவைக் கேட்ட பிறகு, ‘உன் குரல் செய்தி வாசிக்கும் குரல் அல்ல. மேடையில் முழங்கும் குரல் இது. இதை விடுத்து உன் மனைவி, என் தங்கை வாணியைக் குரல் பதிவுக்கு அழைத்து வா. இன்னிசை பாடும் குரல் உன் மனைவியுடையது. பொருத்தமாய் அமையும்’ என்றார். ஆனால், வாணிக்கு அதில் விருப்பமில்லை.
தங்கை வெற்றிச் செல்வி தனித்தமிழ்ப் பற்றாளராகவும், திருச்சி மேற்குத் தொகுதியில், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் ‘மக்கள் பாதை’ பேரியக்கம் சார்பாகப் போட்டியிடத் துணிந்திருக்கிறார்.

தமிழ்ப்பண்பாட்டின் முழுவடிவமாகவும் அன்பின் நிறைகுடமாகவும் பெருமிதத்தின் உறைவிடமாகவும் முத்தமிழ்க் காவலர் குடும்பத்தினை எண்ணிப் பாராட்டுகிறேன்.

திருமுருகாற்றுப்படை…
திருமுருகாற்றுப்படை மூலபாடம் மட்டும் 1834-இல் சென்னப்பட்டணம் விவேகக் கல்விச்சாலைத் தமிழ்த்தலைமைப் புலவராக இருந்த சரவணப்பெருமாலையரால் கல்வி விளக்க அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்பதிப்பு நச்சினார்க்கினியர் உரையை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப்பட்ட மூலபாடப் பதிப்பாகும்.
பிறகு 1839-இல் பதவுரையுடன் கூடிய பதிப்பாக நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி இலக்குமணன் பதிப்பு வெளிவந்தது.
ஆறுமுக நாவலர் 1853-இல் திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி புத்துரையொன்றை வெளியிட்டார். இதன் பத்தாம் பதிப்பு 1930-யிலும் 16-ஆம் பதிப்பு 1947-லும் வெளிவந்தது. 20-ஆம் பதிப்பு 2011 மார்ச்சில் கனடாவிலுள்ள வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம் மூலம் அச்சிடப்பட்டது.
1881-இல் திருமுருகாற்றுப்படையின் அடுத்த பதிப்பான சதாசிவம் பிள்ளையால் ஆறுமுக நாவலர் உரையுடன் சென்னப்பட்டணத்தில் வித்யானுபாலன அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.
1917-இல் பொன்னம்பலப்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது.
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் பத்துப்பாட்டின் மூலம் நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றோடு 1889-இல் முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
பத்துப் பாட்டை 1946-இல் அறிஞர் J.V. செல்லையா ஆங்கிலத்தில் வெளியிட்டார். இது அரிய மொழியாக்கம். இது தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மீளச்சில் வந்துள்ளது.
ஆ.திருச்சீரலைவாய்
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப, வால்வளை ஞெரல,
உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ,
விசும்பா றாக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்குயிர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே!’
‘திரைச்சீரலைவாய்’ என்பது திருச்செந்தூர்.

முதல் 125 முடியவுள்ள அடிகள்.
ஆகாயத்தில் பல்வேறு வாத்தியங்கள் முழங்கவும், வலிமைகொண்ட ஊது கொம்பானது இசையெழுப்பவும், வெண்சங்கு ஊதவும், பேராற்றலுடன் ஓசையிடும் இடியெனும் முரசமொடு பல்வேறு வண்ணப்புள்ளிகளையுடைய தோகைமயில் அகவலோசை எழுப்பவும், விண்ணகமே வழியாக விரைந்து செல்ல முற்பட்டு, உலகமக்கள் புகழ்ந்தேத்தும் மிக்குயர்ந்த சீர்புகழூராம் திருச்சீரலைவாயென்னும் திருச்செந்தூர் அடைதலும், செவ்வேளாகிய குமரவேளின் நிலைத்த பண்பே!
இ.திருவாவினன்குடி
‘திருவாவினன்குடி’ என்பது பழனித் தலமாகும். 170 முதல் 176 முடிய உள்ள அடிகள்.
வளிகிளர்ந் தன்ன செலவினர், வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர், தீப்பட
உருமிடித் தன்ன குரலினர், விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்,
அந்தரக் கொட்பினர், வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவி னன்குடி யசைதலு முரியன்!’

செவ்வேளை வணங்கி வழிபட, முனிவரெலாம் முந்திச் செல்வர்.
அவர், துவராடையுடனும், நரைமுடியுடனும், இளைத்த உடலுடனும், சினமற்ற உள்ளத்துடனும், ஆசையறுத்த நிலையினர்.
அவர்க்குப்பின் தெய்வமங்கையரும், மாலவனும், உருத்திரனும், இந்திரனும், தேவரும் கணங்களும் தத்தம் மனக்குறைகளைப் போக்கிக்கொள்ள, ஆகாய வழியாக வந்து, வணங்குவர்.
அங்குத் தீதிலாக் கோட்பாட்டுத் திருவினாள் தெய்வயானை அம்மையொடு, சிலநாள்கள் இருத்தலும் உரியவன்.
ஈ.திருவேரகம்
திருவேரகம் என்பது சுவாமிமலை என்பர். 177 முதல் 189 முடியவுள்ள அடிகள். இது, முழுமையான பகுதி.
இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅது,
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி,
அறுநான் கிரட்டி யிளமை நல்யாண்டு
ஆறினில் கழிப்பிய, அறன்நவில் கொள்கை,
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து,
இருபிறப் பாளர், பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்,
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியல் மறருங்கின் நவிலப் பாடி,
விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்து,
ஏர கத்து உறைதலு முரியன்!

படைவீடு தங்கிய திருக்கோயில் என்று பொருள்.
படுத்தல், படை விடுத்தல், விடை கொடுத்தல், கொடை போல ஆற்றுப்படுத்தும் இடம் ஆறுபடை என ஆயிற்று.
முந்தைய மூன்று படைவீடுகளைப் போலவே, நான்காம் படைவீடாகிய ‘சுவாமிமலை’ என்னும் திருவாவினன்குடியிலும் அவன் வீற்றிருப்பான்.
அறவோராகிய அந்தணர், தமக்கே உரிய ஓதல் முதலிய அறுவகைச் செயல்களையும் செய்கின்ற சிறந்த குடிப்பிறப்பாளர்.
அவர், நாற்பத்தெட்டு அகவை வரை மாணவ நோன்பைக் கடைப்பிடிப்பவர்.அவ்வாறு நோன்பைக் கடைப்பிடிப்பதன் மூலம், முத்திச்செல்வத்தை உடையவராவர்.
குளிர்ந்த நீரில் நீராடி, ஈர ஆடையுடன் ஏரகச் செவ்வேளை வணங்கி வழிபடுவதற்காக, மணம் மிகுந்த நாண்மலர்களை ஏந்திக்கொண்டு வருவர்.அவனும் பெரிதாக அதைக்கண்டு மகிழ்வுற்று, ஏரகத்தில் வாழ்தலும் உரியவன்.
வளரும்…

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment