காலப்பேழையைத் திறந்த கலைஞர் திறம் !
பச்சையப்பர் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த நிறைவாண்டில் 1957-58 இல் நாள் நிகழ்ச்சிக்குறிப்பில் வரலாற்றுப்பண்பாட்டுப் பேரறிஞர் தாயன்பி உரையாற்றுவார் என்றிருந்தது .மயிலையில் சாஸ்திரி அரங்கில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. எண்ணினால் எழுபதுபேர்வந்திருப்பார்கள்.அவ்வளவுபேருமவரலாற்றுத்துறைப்பேராசிரியர்கள் ,அறிஞர்கள் ,இதழாளர்கள் என்று அவை நிரம்பி வழிந்தது .
அணிந்தபடி ஒருவர் விரைந்து வந்தார் .அவர் தான் அறிஞர் தெ பொ மீ ,அறிஞர் பெ நா அப்புசாமி எழுந்து நின்று அவருக்கு இடம் தந்து விட்டு அடுத்த இருக்கைக்கு நகர்ந்தார் .நான் என்னோடு படித்த மாணவர் நண்பர் சதாசிவத்தோடு கூட்டத்திற்குச் சென்றிருந்ததாக நினைவு .
பெரிய அதிசயம் என்னவென்றால் மூதறிஞர் இராஜாஜி தன்னுடைய நூல் ஒன்றை எடுத்துக்காட்டி அறிஞர் தாயன்பியின் கையொப்பம் பெற்றார் ,அவையினர் கரவொலி எழுப்பினர் .அது இருவருக்கும் பெருமையூட்டுவதாக அமைந்தது .உலக நாகரிகங்களில் பெரிதும் சீர் குலையாத உயர்ந்த நாகரிகம் உருவான பகுதி இது என்று அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார் .
அவர் பேசிய ஆங்கிலம் எனக்கு விளங்கவில்லை என்றாலும் இந்தக் குறிப்பை நான் எழுதி வைத்திருந்தேன் ,
பிறகு பல ஆண்டுகள் கழித்து அறிஞர் கே கே பிள்ளை ,பேராசிரியர் ஆரோக்கியசாமி முதலியோர் சில கூட்டங்களில் அறிஞர் தாயன்பியின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பெரிதும் பாராட்டினார்கள்
,அந்த நிலையில் பல்லாண்டுகள் கழித்து வரலாற்று அறிஞர் பேராசிரியர் கிருஷ்ணசாமி எழுதிப் படித்த குறிப்புரை என்றும் போற்றத்தக்கதாகும் .
அதனை அப்படியே வழங்குகிறேன் .
அர்னால்டு தாயின்பீ என்ற வரலாற்றுப் பேரறிஞர் 31 பகுதிகளாகப் பிரித்து 8000 பக்கங்களுக்கு மேல் எழுதிய
” நாகரிகங்களின் வரலாறு ” என்னும் அரிய நூலில் இதுகாறும் தோன்றி, மறைந்து, இன்றும் நிலைபெற்றுள்ள நாகரிகங்களை ஏறத்தாழ 30 நாகரிகங்களாகக் கணக்கிட்டு அவற்றை
(1) முதல் தலை முறை நாகரிகங்கள்
(2) இரண்டாவது தலை முறை நாகரிகங்கள்
(3) மூன்றாவது தலைமுறை நாகரிகங்கள் எனப் பாகுபாடு செய்துள்ளார்.
அவற்றுள் முதல் தலைமுறையைச் சேர்ந்த நாகரிகங்கள்
(1) எகிப்திய,
(2) சுமேரிய,
(3) கீரீட்,
(4) கிரேக்க,
(5) சிரியா,
(6) சிந்து சமவெளி,
(7) ஷாங்கல்சர், (சீனா)
(? மாயன்,
(9) ஆந்திய நாகரிகங்களாகும்.
இந்த நாகரிகங்களிலிருந்து இரண்டாவது தலைமுறையாக
(1) மேலை நாட்டு நாகரிகம்
(2) வைதீக கிறித்தவ நாகரிகம்
(3) இரானிக்
4) அராபிக்
(5) இந்திக்
(6) சைனிக்
(7) பாபிலோனியன்
(? ஹிட்டைட் என்ற எட்டு நாகரிகங்கள் தோன்றின.
இந்த இரண்டாவது தலைமுறை நாகரிகங்களிலிருந்து மூன்றாவது தலைமுறை நாகரிகங்களான
1) மேலைக் கிறித்தவ நாகரிகம்
(2) ருசிய நாட்டு நாகரிகம்
3) இசுலாமிய நாகரிகம்
(4) இந்து சமூக நாகரிகம்
(5) சீன நாட்டு நாகரிகம்
(6) தூரக் கிழக்கு நாகரிகம்
(7) வட, தென் அமெரிக்க சமூக நாகரிகங்கள் தோன்றின என்றும் தாயன்பி குறிப்பிட்டுள்ளார் .
மேற்கூறப்பெற்ற 23 நாகரிகங்களில், சிந்து சமவெளி நாகரிகம் முதல் தலைமுறை நாகரிகமாகக் கருதப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து இந்திக் நாகரிகம் தோன்றியது.
இந்திய நாகரிகம் மூன்றாவது தலைமுறை நாகரிகம் எனக் கூறுவார்.
சிந்து சமவெளி நாகரிகத்தை அங்குக் கிடைத்துள்ள பொருள்களிலிருந்தும், எழுத்துக்கள், கட்டடங்கள் முதலியவற்றிலிருந்தும் திராவிட நாகரிகம் என்று பல நாட்டு வரலாற்று அறிஞர்கள் தங்களுடைய ஆராய்ச்சியின் பயனாக அறுதியிட்டுள்ளார்கள்.
இந்தத் திராவிட அல்லது தமிழக நாகரிகம்,வடமேற்கே சிந்து நதி தீரத்திலுள்ள அரப்பா, மொகஞ்சோதரோ முதற்கொண்டு தெற்கே ஆதிச்சநல்லூர் வரையில் பரவி பிருந்ததெனப் பழம் பொருள் அகம்வு ஆராய்ச்சியாளர்களால் கருதப்பெறுகிறது.
அக்காலத்தில் பரவியிருந்த திராவிட நாகரிகம் குமரிமுனையைக் கடந்து இப்பொழுது இந்துப் பேராழி என்று கூறப்பெறும் பெருங்கடலில் ஆப்பிரிக்காவோடும், மடகாசுகர் தீவோடும், ஆஸ்திரேலியா கண்டத்தோடும் இணைந்து நின்ற இலெமூரியாக் கண்டம், அல்லது குமரிக்கண்டம் என்ற மிகப் பெரிய நாடாக விளங்கியது.
அதுவே வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழகமாகும்.
ஆசியாக் கண்டத்திலுள்ள சந்தா தீவுகளிலிருந்து, ஆப்பிரிக்காக் கண்டத்தின் கிழக்குக் கடற்கரை வரையிலும் மடகாசுகார் தீவு வரை பரவியுள்ள இந்துப் பேராழி பல ஊழிகளுக்கு முன் மிகப் பெரியதொரு நிலப்பரப்பாகப் பரவியிருந்தது.
இந்தக் கண்ட மே இலெமூரியாக் கண்டம் அல்லது குமரிக் கண்டம் என்று அழைக்கப்பட்டது.
இது தென்னிந்திய திராவிட மக்களின் பிறப்பிடமும் திராவிட நாகரிகத்தின் தொட்டிலுமாகும்.
(1) விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள நாவலந்தீவு என்ற நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயருடன் விளங்கியது. இக்கண்டம் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாக் கண்டங்களுடன் இணைந்து தூரக்கிழக்கில் காம்சட்கா வரையிலும் பரவியிருந்ததெனவும் கூறுவர்
(2) காம் சட்காவில் உள்ள மக்களும், நியூசிலாந்தில் உள்ள மயோரியர் களும் பேசும் மொழியிலும் பல தமிழ்ச்சொற்கள் விரவியுள்ளன என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.
குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களுடைய மொழியும் பண்பாடும், சுமேரியா, அப்ஸிரியா, பாபிலோனியா, எகிப்து முதலிய நாடுகளிலும் பரவியுள்ளன என்று வீரத்துறவி விவேகானந்தர் கூறுவர்.
இவ்வாறு பரவியிருந்த குமரிக் கண்டத்திற்குப் பெரியதொரு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இக்கண்டம் இந்துப் பேராழியாக மாறுவதற்கு முன் முதலாம் நிலந்தரு திருவிற்பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன், பஃறுளியாற்றின் கரையில் இருந்த தென் மதுரையில் முதற்சங்கத்தை கி.மு.16500 ஆண்டிற்கு முன் அமைத்திருந்தான் என்று புராணக் கதைக்குறிப்பு உள்ளது .
முத்தமிழறிஞர் கலைஞர் இந்தக் குமரிக்கடல் அழிவு பற்றி எழுதியுள்ளார் .
இயற்கையின் வெறிக்கூத்து கவாட புரத்தில் ஆரம்பமாயிற்று
! பேய் பிடித்த இயற்கை தன் கொடுமையான இரும்புக்கரம் கொண்டு பெருங்கடல் அலைகளின் மீது கடுந்தாக்குதல் நடத்த எங்கும் இருள் காடாயிற்று அந்தப் பகுதி முழுதும்;
இடியாக ஒலித்து, மின்னல்களாக இறங்கி, பூகம்பமாகக் குலுக்கி, கடலுக்குள் நில நடுக்கமாகப் புகுந்து குமரியாறு, பஃறுளியாறு இரண்டும் ஒன்றாகி எங்கே போயின என்று தடம் மாறி இடம் பெயர்ந்து ,இல்லாமலே மறைந்து விட்டன எனில் இயற்கைச் சீற்ற விளைவை யார் தான் கணிக்க இயலும் ?
அழிவு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு கடற்கோள் “ பைசாசம் “ஆடி அடங்கிய பிறகுதான் அமைதி தலை காட்டியது.
( ப.267 )
இயற்கையின் சீற்றத்தைப் படம் பிடித்துக்காட்ட, கூத்தும் பேயும் இருளும், காடும், இடியும், மின்னலும், நிலநடுக்கமும் பைசாசமும் உவமைகளாகக் கலந்து மயங்கிக் கலைஞர் எழுத்தில் மின்னல்களாகப் பளிச்சிடுகின்றன .
கதை ,கவிதை ,உரையாடல் ,நாடகம் என்றெழுதிக் குவித்த முத்தமிழறிஞர் கலைஞர் பழம்பண்பாட்டின் செழுமையைத் தமிழ் வாழ்வின் பெருமிதத்தை எப்போதும் எங்கும் எழுதுவது இயல்பு .
அந்த வகையின் தமிழர் தொல் வரலாற்றின் சிறப்பைக் காலப்பேழையும் – கருத்துச் சாவியும் என்ற நுட்பமான தொகுதியாக அமைந்த உரையிடையிட்ட செய்யுளாகப் படைத்த சிறப்புடையது அந்த நூல் .
வரலாற்று வைரமணிகளைக் கொட்டிக்குவித்த அந்த நூலில் முத்தமிழ்க்கலைஞரின் அறிவாழத்தை அளந்ததில் கலைஞர் அத்தொகுதியில் எண்ணித்தீராத குறிப்புக்களை வழங்கினார் .
பேராசிரியர் ப மருதநாயகம் இந்த மேற்கோள்கள் கற்று அளந்தறிய முடியாதென்று பட்டியலிட்டு வியக்கின்றார் .
இந்த தொகுதிக்குத் தமிழுலகம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது .
கலைஞர் கையாண்டுள்ள துணை நூல்கள் மிகப்பல .
தொல்காப்பியமும் ,திருக்குறளும் ,சங்க இலக்கியங்களும் அவர் மூழ்கித்திளைத்த இலக்கியங்கள் ,சங்க இலக்கியங்களுள் புறநானூறு, அகநானூறு , நெடுநல்வாடை ,பதிற்றுப்பத்து ஆகியவை இங்கே சிறப்பிடம் பெறுகின்றன.சங்கத் சான்றோருள் பரணர், நக்கீரர், கல்லாடனார். இடைக்குன்றூர்கிழார் ,பிசிராந்தையார் , கழாத்தலையார். வெண்ணிக்குயத்தியார். நக்கண்ணையார் ,மாமூலனார். ஆதிமந்தியார். சாத்தகந்தையார், ஆலத்தூர் கிழார் ,இடைக்காடனார், எருக்காட்டூர்க்தாயங் கண்ணனார், அய்யூர் முடவனார். மூலங்கிழார், குடபுலவியனார். மாங்குடி மருதனார், காரிக்கிழார், நெட்டிமையார். நெடும்பல்லி யத்தனார்.
தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோர் பாடல்களெல்லாம் உரையோடும் விளக்கத்தோடும் சான்றுகளாக முன்னிறுத்தப் பெறுகின்றன.
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவற்றைச் சார்ந்த சில காட்சிகள் நாடகக் கவிதைகளாக மாற்றம் பெறுகின்றன.
தமிழ் மன்னர்களின் வெற்றிகளைச் சொல்லும் போது சேக்கிழார். ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார் ஆகியோருடைய நூல்களும் மாந்த இனம் பற்றிப் பொதுவாகப் பேசும்போது மணிவாசகரின் திருவாசகமும் காஞ்சி பற்றிய சிக்கலைத் தீர்க்கும் போது அப்பர் தேவாரமும் பல்லவர் வெற்றிக்கு ஆதாரமாகச் சுந்தரரின் தேவாரமும் சுட்டப்பெறுகின்றன.
பாரதியார் , பாரதிதாசன் பாடல்களும் பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகளும் கையாண்ட சொற்களும் தொடர்களும் ஆங்காங்கே ஊடுருவி நிற்கின்றன.
இலக்கியங்களைத் தவிர இந்நூலுக்காகக் கலைஞர் படித்த வரலாற்று நூல்கள் ஏராளம் என்பது வெள்ளிடை மலை.
சீனயாத்திரிகர் யுவான் சுவாங்கின் குறிப்புகள்,
இராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வரலாற்றுப் பின்னணிச் சிறுகதைத் தொகுப்பு, வால்காவிலிருந்து கங்கை வரையில்,
பண்டிதர் நேருவின் உலக சரித்திரம், இராமச்சந்திர தீட்சிதரின் தமிழர் தோற்றமும் பரவலும், அப்பாதுரையாரின் தென்னாட்டுப் போர்கள்,
பி.டி.சீனிவாச அய்யங்காரின் தமிழர் வரலாறு,
மயிலை சீனி வேங்கடசாமியின் மகேந்திரன் வரலாறு,
இலங்கை பௌத்த வரலாறாகிய இராஜாவளி,
மகாவம்சம்,
ஐயம் பெருமாள் கோனாரின் பாண்டியர் வரலாறு,
பேராசிரியர் மங்கள முருகேசனின் பல்லவர் வரலாறு,
சோவியத்து அறிஞர் கோந்தராவின் மூன்று கடல் சார்ந்த புதிர்கள்
ஆகிய நூல்களைத் தவிர,
பரிதிமாற் கலைஞர்,
பேராசிரியர் சுந்தரனார்,
சதாசிவப் பண்டாரத்தார்,
ஒளவை துரைசாமி,
இராகவ அய்யங்கார்,
நீலகண்ட சாத்திரியார்,
மா. இராசமாணிக்கனார்,
சுனிதி குமார் சாட்டர்ஜி,
சோவியத் அறிஞர் சாகிரப் போன்றோருடைய நூல்களும் கட்டுரைகளும் பயன்படுத்தப் பெற்றுள்ளன.
இவற்றோடு அல்லாமல் கலைஞர் பாண்டியரின் சின்னமனூர்ச் செப்பேடு, கூரம்பட்டயம், சாளுக்கியரின் கேந்தூர்ப் பட்டயம் போன்ற வரலாற்று ஆவணங்களையும் விட்டு வைக்கவில்லை.
சான்றுக்கு ஒரு பகுதி கனல் கக்கிக் கலைஞர் பெருந்தகை எழுதியதைக் காணலாம் .
விந்தியத்திற்குத் தெற்கே 57 இடங்களில் அகழ்ந்து கண்டு பிடிக்கப்பெற்ற ரோமாபுரித் தங்க நாணயங்கள் போன்ற அக்கால
வரலாற்றுச் சான்றுகள் இகழ்ந்து தள்ளுதற்கு உரியவையாய் இருட்டடிப்புச் செய்வோர்க்குத் தெரியலாம்;
அவை புகழ்ந்து போற்றுதற்கும் மகிழ்ந்து உலக அரங்கில் ஏற்றுதற்கும் உரியவை ” (ப.85) என்பது அவர் நம்பிக்கை. ”
எதிர்காலத் தமிழ் இளைஞர் சிறந்து விளங்க வேண்டுமானால் எருவாக நம் வரலாறு பயன்படும்.
எனவே கல்லான பூமியில் கடப்பாறை போட்டுக் கெல்லி நம்மவர் வரலாற்றை வெளிப்படுத்துவதில் நாட்டம் செலுத்த வேண்டும்.
திரும்பத் திரும்ப இராவிட இனத் தொன்மை பற்றிச் சொன்னால் தான் தென்னங் கன்றுகள் தேக்கு மரங்களாக உயரும்; வாழைக்கன்றுகள் வாகை மரங்களாக வளரும் ” ( ப.135 ) என்று தம் பேரவாவினைத் தெரிவிப்பார்.
இதுவரை எழுதப்பெற்ற இந்திய வரலாறுகள் எல்லாம் தமிழகத் இல் தொடங்காததால் ஏற்பட்ட விளைவுகளும் நூலில் ஆங்காங்கே எடுத்துச் சொல்லப்பெறுகின்றன.
இந்திய நாட்டு வரலாற்றைக் கங்கைக்கரையிலிருந்து எழுதாமல் காவிரிக் கரையில் தொடங்குவதே பொருத்தமென வின்சென்ட் ஸ்மித் சொல்லியிருந்தும் வரலாற்றாசிரியர்கள் தமிழகத்துக்கு உரிய இடம் தராமலேயே தங்கள் நூல்களை எழுதிக் கொண்டிருந்தனர்.
இதனால் ” தண்டிலும் வேரிலும் படாமல், மரத்தின் கிளை நுனியில் தண்ணீர் ஊற்றி வளர்த்திடக் கருதிய கதையாய்ப் போயிற்று அல்லது வெந்நீர் விட்டு வேரினை வேக வைத்த நிகழ்வாகவும் ஆயிற்று ” ( ப.158 ) என்பார் கலைஞர்.
தமிழகத்துச் சேர, சோழ, பாண்டியர் வரலாற்றை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்ற உள்ளக்குமுறலை அவர் 1945 ஆம் ஆண்டிலேயே ஒரு கவிதையில் வெளிப்படுத்தினார்.
காவிரியின் கரையினிலே
பெண்ணையின் பாய்ச்சலிலே
சரிதமில்லை ; சரிதமில்லை !
அய்யகோ தமிழ் நாடே ;
ஆரம்பம் கங்கையிலாம் ! பாண்டியர்
ஆண்டதை யார் கண்டார் ?
சேரர் செழிப்பைச் செதுக்கிய தெவர் ?
சோழர் வளப்பம் சொன்னதும் உண்டோ
சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே ?
வீரர் பாண்டியர் அரசேன் கவிழ்ந்தது ?
சோழர் உலாவிய சோர்விலா நாட்டில்
கோழைக் கொள்கை குவிந்தது எவ்விதம் ?
வெடித்தன வினாக்கள்
—-வெதும்பிய மனத்தில் ——-
நாட்டுவெறி பிடித்த காளைகளே !
கிலி பிடித்த மனிதர்களைக் கீழே தள்ளுங்கள் !
புலிவாழ்வின் உச்சியிலே புதுமைதனைப்
பொறித்திடுவோம் !
( பக் 256 – 57 ).
இவ்வளவு நூல்களையும் ,கட்டுரைகளையும் ஆவணங்களையும் ஆழ்ந்து படித்துத் தகவல்களைத் திரட்டித் தமது நூலுக்கான கவிதைகளைக் கலைஞர் படைத்துள்ளமை பெரும் பாராட்டுக்கும் தமிழினத்தின் ஒட்டுமொத்த நன்றிக்கும் உரிய செயலாகும் .
Leave a Comment
You must be logged in to post a comment.