Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-21

Written by Dr. Avvai N Arul

தெலுங்கு, மலையாள
மொழிச் சொற்களின் வந்த வரலாறு

………………………………………..
சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி சிவம் அவர்களுடைய “மிக அருமையான
, ஆழமான, சிந்திக்கத் தூண்டும் கட்டுரை அருள்.” என்னும் பாராட்டுரை குறிப்பிடத்தக்கது. அவ்வண்ணமே மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடுகின்ற தனியிதழான ‘திசையெட்டும்’ ஆசிரியர் பெருந்தகை திரு. குறிஞ்சிவேலன் அவர்களின் “இத்தனை சொற்களும் பிறமொழிகளிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளோம் அல்லது பயன்படுத்துகிறோம் என்று தமிழறிஞர்கள் சொன்னதை முனைவர் அருள் பட்டியலிட்டுள்ளார். இவற்றை விடுவிப்பதோ பயன்படுத்துவதோ என்பதை முடிவு செய்வது மக்களின் பேச்சிலும் எழுத்திலும்தான் உள்ளது. அவ்வளவு ஏன் படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மாலேயே இவற்றை விடுவிக்க முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்…” என்ற குறிப்புரை சிந்திக்கத் தூண்டுகிறது.
தெலுங்கு மொழிச்சொற்கள் வந்த வரலாறு
தமிழ் தெலுங்குத் தொடர்பு, சங்க காலத்திலிருந்தே பழைமையானது. சங்க இலக்கியங்களில் திருப்பதிக் குன்றுகளை ஆண்ட சிற்றரசர்கள் தொடர்பான குறிப்புகள் வருகின்றன. பிற்காலச் சோழப் பேரரசர்கள் வெளியுறவுக் கொள்கையின் நிமித்தமாகத் தெலுங்கு மொழிபேசும் வேங்கியர்களுடன் திருமண உறவு கொண்டனர். தெலுங்குக் காப்பியப் புலவர்களில் முதல்வரான நன்னயப்பட்டரை ஆதரித்த மன்னர் இராசராசேந்திரன் முதலாம் இராசேந்திரனின் மருமகனாவார். பின்னர் இவர் குடும்பத்தில் தோன்றிய முதலாம் குலோத்துங்கன் பதினோராம் நூற்றாண்டில் சோழப் பேரரசனாகின்றான். இம்மன்னர்கள் அளித்த வாய்ப்பால் தெலுங்குச் சொற்கள் தமிழிற் கலந்தன. ‘அக்கடா’ முதலிய தெலுங்குச் சொற்கள் கம்பராமாயணத்தில் வருவதாகக் கூறுவர்.

தெலுங்கு மொழியில் வழங்கிய ஆபரணங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள், வேலைக்குப் பயன்படும் கருவிகள், சாதிப்பெயர்கள் ஆகியவை தொடர்பான சொற்கள் இவற்றின் தொடர்பால் தமிழில் கலக்கத் தொடங்கின. ‘இரளி’, ‘உப்புசம்’, ‘சளிப்பு’, ‘கலிங்கம்’, ‘கண்டி’, ‘கத்திரி’, ‘கடப்பாரை’, ‘ராயசம்’, ‘தரகரி, ‘சேந்திரவர்’, ‘கம்பத்துக்காரர்’, ‘குப்பம்’, ‘ரெட்டியார்’, ‘பத்தர்’, ‘கோமட்டி’, ‘ராஜா’, ‘கரிசை’, ‘அளவு’ முதலிய சொற்கள் தெலுங்கிலிருந்து வந்தவை. ‘அந்தரங்க வைபவம்’, ‘அட்டி’, ‘அண்ணு’, ‘இண்டிமாமா’, ‘ரவிக்கை’, ‘ராவடம்’, ‘ரேக்கு’, ‘லஞ்சம்’, ‘லாகிரி’, ‘உத்தி’, ‘உம்மச்சு’, ‘ஒட்டாரம்’, ‘கட்டடம்’, ‘கந்தை’, ‘கண்ணாவி’, ‘கபோதி’, ‘கம்பத்தம்’, ‘கம்பல்’, ‘கலப்படம்’, ‘கவுனி’, ‘காட்டம்’, ‘குப்பு’, ‘கெடுவு’, ‘கொப்பி’ (கும்பி), ‘கொலுசு’, ‘சந்தடி’, ‘சலவை’, ‘ஜயிப்பு’, ‘சிட்டிகை’, ‘சிமிளி’, ‘உருண்டை’, ‘சுங்கு’, ‘தெண்மை’, ‘சதை’, ‘சொக்கா’, ‘சொட்டு’, ‘சவுத்தி’, ‘த்ராபை’, ‘தடவை’, ‘திப்பி’, ‘திமிசு’, ‘தும்பு’, ‘தெப்பல்’ (அடி), ‘தெலுங்கு’, ‘தெட்ட’, ‘தேவாத்தி’ (வேட்டி), ‘நீச்சு’ (மீன்நாற்றம்), ‘பட்டறை’, ‘பண்டைப்பேச்சு’, ‘பலப்பம்’, ‘பவிசு’, ‘வாணலி’, ‘பால்மாறுதல்’, ‘பிருடை’, ‘பூஞ்சைக்காளம்’, ‘போல்’, ‘ஜப்பை’, ‘ஜாஸ்தி’, ‘சந்து’, ‘சுளுவு’ முதலிய சொற்களும் தெலுங்கில் இருந்து வந்தனவென்று கூறுகிறார் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். தெலுங்கு அதிகாரிகள் தம் ஆட்சியின் போது, அங்கெல்லாம் தெலுங்கு மட்டுமே விளங்குமாறு செய்தனர். அவர்கள் தாய்மொழிப் பற்று மிகுந்தவர்கள். தமிழர்கள் கடமையுணர்ச்சி குறைந்தவர்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கிற்று, சித்தூர் மாவட்டத்தில் பெருந்தொகையான மக்கள் தமிழ் பேசுவோராக இருந்தபோதே, மாவட்ட அரசியல் மொழி தெலுங்கு ஆயிற்று என பேராசிரியர் மு.வரதராசனார் குறிப்பிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

தெலுங்கின் வரவால் தமிழகத்தின் ஊர்ப்பெயர்களிலும் தெலுங்குச் சொற்கள் இடம்பற்றின. பச்சூர், பழையனூர், புதூர், கட்காவூர், பழைய பேட்டை, கோமுட்டியூர், வாலாரிப்பட்டி – என வழங்கப்பட்ட பழைய தமிழ்ப் பெயர்கள் மாற்றம் பெற்றுப் பந்தார பள்ளி, அதனகவுணி, பல்லிகொண்ட, சிந்தனபல்லி, கொத்துரர், ஜயந்திபுரம், பய்யப்ப நாயனுபேட்டெ, நல்ல கதிரணபல்லி எனத் தெலுங்கு மொழியிலே ஊர்ப் பெயர்கள் மாற்றம் பெற்றுத் தமிழர்களால் பொருள் விளங்கிக் கொள்ளாமலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழில் கலந்துள்ள தெலுங்குச் சொற்களைக் காண்போம்.
செகண்டி – கோன்மணி, சேட்டை, சேனை, சோலி – கருமம், சொரு – உவர்ப்பு, டக்கு (வார்) – பதிப்படை, டமாரம் – முரசு, டேவணி – முன்பணம், தக்கழ – பொய், ததி – தகுந்த நேரம், தம்பி – தாமரை, தரகரி – தரகன், தறிபடுகு – நெட்டிழை, துண்டரிக்கம் – முகக்களை, துண்டை – துடுக்கன், துருசு – விரைவு, துலாபி – பகட்டுச் செலாவணி, தேலிக்கை – மென்மை, தொம்பரம் – பலருக்குச் சமைத்த ஊன், நவாது – வெண் சர்க்கரை, பவனி – உலாவரல், பிகுவு – இருக்கம், வலிவு பேட்டு – பட்டைக்கரை, சூடு மைதா – கள்மயக்கம், ரெப்பை – இரப்பை, லத்தி – சாணம், வெட்டை லாகிரி – மதுக்களிப்பு, ஜட்டி – மல்லர் அணியும் கவ்வுரி வகையுள் ஒன்று, சேகரம் – கூட்டம், சேதாரம், சோம்பு – பெருஞ்சீரகம், செளக்கம் – பண்டமலிவு, டக்கு – விகு, பிகு, டப்பை – மூங்கிற் பிளாச்சி, டாப்பு – பட்டி, டொங்கு – பொந்து, தபலை – மாழைக்குடம், தனை – ஆசை, தருசு – நெருங்கிய இழை, திப்பை – மேடு, துண்டன் – கொலைஞன், துத்து – பொய், துருதை – தினவு, துப்பிரதண்டி – சொற்படிகேளாள், தொடக்கம் – மிதித்துத் துவைக்கை, தோசிளி – இருவகைத்தவசம், பங்காரு – பொன், மலுவு – எடைக்கனம், பிசினாறி – கருமி, கஞ்சன், பொக்கிஷம் – பொருளறை, ரம்பம் – அரிவாள், லச்சி – குப்பைக்காரி, லம்பாடி – இலம்பாடியினம், திரிநன், வெளித்தி – ஒல்லி, ஜண்டை – இணை, ஜோடி, ஜல்லடை – சலிதட்டு, ஜலுப்பு, ஜாஸ்தி – மிகுதி.
மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு
தமிழும் மலையாளமும் தாயும் மகளும் என்ற தொடர்புடையன. மலையாளத்தைத் தமிழின் உடன்பிறந்த தங்கை என்றே கருதுகிறார்கள் மொழியியலாளர்கள். மலையாள மொழியில் தொடக்க நிலையில் கருத்தறியாத் தமிழ்ச்சொற்கள் பலவும், உருத்திரிந்தன. சிலவும் வழங்கி வந்தன. இன்றும் மலையாள மொழி தமிழர்க்கும், தமிழ்மொழி மலையாளிகட்கும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடியனவாகவே உள்ளன என்பார் அறிஞர் வையாபுரிப் பிள்ளை. நாஞ்சில் நாடு (கன்னியாகுமரி மாவட்டம்) திருவாங்கூர் அரசின் கீழ் நீண்டகாலம் இருந்தமையும் இதற்குக் காரணம் எனலாம். தமிழில் கலந்த மலையாளச் சொற்கள் தமிழாகவே மாறிவிட்டவை என்பதால், அவற்றை வேறுபடுத்தி அறிவது சிக்கலானதாகும் என்றும், ‘சக்கை’, ‘சாயா’, ‘கஞ்சி’, ‘வஞ்சி’, ‘வெள்ளம்’, ‘அவியல்’, ‘கச்சவடம்’, ‘காலன்’, ‘கொச்சி’, ‘சொக்கன்’, ‘குரங்கு’, ‘தளவாய்’, ‘தேநீர்’, ‘நெரியல்’ போன்றவை மலையாளச் சொற்களே என்றும் பேராசிரியர் தெ.பொ.மீ. கருதுகின்றார்.

திராவிட மொழிகளுள் இடம் பற்றியும் இயல்பு பற்றியும் தமிழுக்கு மிக நெருக்கமாவது மலையாளமாகும். அதில் வடசொற்கள் அளவிறந்து கலந்துள்ளன என்று ஒப்பியலறிஞர் கால்டுவெல் கூறியுள்ள கருத்து, அதன் நூல்வழக்கைச் சார்ந்ததேயன்றி, உலக வழக்கைச் சார்ந்ததன்று. இன்றும் மலையாளப் பேச்சு வழக்கை நோக்கின், அது பெரிதும் வடசொற் கலப்பற்றதென்பது புலனாம். இற்றைத் தமிழில் வழங்கும் சில வடசொற்களும் ஆங்கிலச்சொற்களுக்கும் நேர் மலையாள மொழியில்தான் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில சொற்களைக் காண்போம்.
மைத்துனன் – அணியன், மத்தியானம் – மதியம், உச்சி, வருஷம் – ஆண்டு, கொல்லம் (ஏகர்), ஆரம்பம் – தொடக்கம், உபாத்தியாயர் – வாத்தியார், எழுத்தச்சன், அமாவாசை – காருவா, பூரணை – பவுர்மணி, வெளுத்தாவு, கறுத்தாவு – வெள்ளுவா
சோழ, பாண்டி நாடுகளில் வழக்கற்றுப் போன ஒரு சில சொல்வினைகள், சேர நாடாகிய மலையாள நாட்டிலேயே இன்று வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டு:
மலையாளம் (ஒருசொல்வினை) இற்றைத்தமிழ் (இருசொல்வினை)
கட்குன்னு, கக்குன்னு களவு செய்கிறான்
குலெக்குன்னு குலை தள்ளுகிறது
முருடுன்னு முருடாகின்றது
குழிக்குன்னு குழிதோண்டுகின்றான்
சேரநாட்டுத் தமிழின் சிறந்த சொல்வளம், மலையாளம் மொழியின் வாயிலாகவே இன்று அறியக் கிடக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஆழ்ச்ச – கிழமை, ஆழ்ச்சவட்டம் – வாரம், பகர்க்குக – படியெடுக்க, பையாணி – தசையைக் கொத்திப் பிடுங்கும் ஒருவகைப்பாம்பு, நொண்ணு – உள்வாய், முத்தாழம் (முற்றாலம்) – காலையுண்டி, அத்தாழம் (அற்றாலம்) – இராவுண்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இதேபோல், ஆங்கிலச்சொல்லுக்கு நேரான சில தமிழ்ச்சொற்கள் (சேரநாடு) வருமாறு:-
பென் – தூவல், பாத்ரூம் – குளமுறி, டிராயர் (மேசை) – வலிப்பு, காம்பவுண்டு – பரம்பு, வேக்கன்சி – ஒழிவு, நோட்டு – குப்பாயம், வெராந்தா – கோலாயி.
உச்சி, ஆண்டு, தொடக்கம் முதலிய தென்சொற்கள் தமிழ்நாட்டு வழக்கிலும், மலையாள நாட்டிற்போல அத்துணைப் பெருவழக்காகவும் நாடு முழுமையும் வழங்குகின்றன. இற்றைத் தமிழ்நாட்டில் வழங்கும் சில தென்சொற்கட்டு எதிர்பாற்சொற்கள் இன்று மலையாள நாட்டு வழக்கிலேயே உள்ளன. எடுத்துக்காட்டு,
அச்சி(தாய் தமக்கை) – அச்சன்(தந்தை), சிறுக்கி – செறுக்கன்(சிறுக்கன்), தம்பிரான் – தம்பிராட்டி,
தொன்றுதொட்டுச் சேரநாட்டில் வழங்கி வரும் மீன் பெயர்கள், திசைச்சொல் முறையில் மலையாளத்தில் வழங்கும் தென் சொற்கள் மாபெருந்தொகையின,
எடுத்துக்காட்டாக, கயறு – ஏறு (ஏவல் வினை), கரிச்சல் – குடலை, குறுக்கன் – நரி (குள்ளநரி), கோளாம்பி – படிக்கம், பகரம் – பதில், பதிலாக, மேடி – வாங்கு, வெடிப்பாக்கு – துப்புரவாக்கு, வெளுத்தோடன் – அலக்குரான், வண்ணான், குட்ட – தீவட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மலையாளத்தில் வழங்கும் திசைச்சொற்களும் பெரும்பாலன சற்றே பொருள் திரிந்த தமிழ்ச்சொற்களே.
எடுத்துக்காட்டு
அதே – ஆம்
அடுக்கல் – பக்கம், கிட்ட இடம்
என்ற அடுக்கல் – என்னிடம்
ஒடுக்கம் – முடிவு, முடிவில்
களி – விளையாட்டு, களித்தாடு
குட்டி – பிள்ளை
தெற்று – தப்பு, பிழை
நேராக்க – செப்பனிடுக
செருமன் – கள்மன், களத்தடிமை
செறு – வயல்
வலிய – பெரிய,
வளரே – மிக
விடக்கு – கெட்ட
விடக்குகுட்டி – கெட்டபிள்ளை
கழியும் – முடியும்
செய்வான் கழியும் – செய்ய முடியும்
கள, களை – விடு,
வன்னுகள – வந்துவிடு
மதி – போதும் (போதிய அளவு)
சில தென்சொற்கள் பழம்பொருளிலேயே இன்றும் மலையாள நாட்டில் வழங்கி வருகின்றன.
எ.டு. கோயிலகம் – அரண்மனை
அம்பலம் – கோயில்
பொன்னம்பலம், வெள்ளியம்பலம், சிற்றம்பலம், பேரம்பலம் என்னும் வழக்குகளை நோக்குக.
‘வெயில் என் கிளவி மழையியல் நிலையும் என்னும் தொல்காப் பிய நூற்பாப்படி, வெயில் என்னும் நிலைமொழி அத்துச் சாரியை பெற்றுப் புணரும் புணர்ச்சியை, இன்று வெயிலத்துச் சென்று, ‘வெயிலகத்து போகருது’ என மலையாள நாட்டு வழக்கில்தான் காண்கின்றோம்.
‘பதிற்றுப்பத்து’ என்னும் புணர்மொழி பெயரோடொத்த முப்பத்திற்றுப்பத்து அம்பதிற்று நாலு முதலிய இற்றுச்சாரியைப் புணர்ச்சித் தொடர்மொழிகளும் இன்று மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன.
இவ்வாறு தமிழின் வேர்ச்சொற்களையும், வழக்குச் சொற்களையும் கொண்ட மொழியாக மலையாளம் விளங்குகின்றது. இதன் விளைவாக மலையாள வழக்குச் சொற்கள் தமிழில் கலக்கும் காலத்தில் அவை தமிழெனவே கருதும் நிலை ஏற்பட்டு, அச்சொற்கள் தமிழினின்றும் பிரித்தறிய முடியாதனவாகியுள்ளன.

முனைவர் ஔவை ந. அருள்,

தொடர்புக்கு dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment