Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-4

Written by Dr. Avvai N Arul

மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்ததே..!

மொழிக்கலப்பின் தொன்மை

 ஒரு மொழியின் கூறுகளான பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய இரண்டிலும் மொழிக்கலப்பு நேர்கின்றது. ‘மனிதன் தன் சிந்தனை’த் திறத்தால் புதியன கண்டு, கேட்டு, அமைத்துப் போற்றிடும் சிறந்த நாகரிகக் கூறாக மொழி உருவெடுக்கின்றது. எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆகிய எல்லாவற்றையும் கடந்து மொழியை மாந்தன் தன் சிந்தனையால், உறவுத்தொடர்பால் எப்படியோ வளர்த்துக் காத்து வந்திருக்கிறான் என்பது வியப்பைத் தருவதாகும். இவ்வாறு காக்கப்படும் மொழி யின் கண்ணும் மொழிக்கலப்பு நேர்வது இயல்பாகிறது. மனித வாழ்வின் வளர்ச்சியோடு இணைவதாகவே இதனை எண்ண வேண்டும். மக்களின் அறிவையும், ஆற்றலையும், வளத்தையும், வறுமையையும், பழக்கத்தையும், அடிப்படைகளாகக் கொண்டு, மொழிக்கு மொழி குறைந்தும் நிறைந்தும் புதிய சொற்கள் கலக்கின்றன.

 அறிவு வளமிக்க மக்கள் புதியனவாகத் தாம் காணும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உழைத்ததால், தம்முடைய மொழியில் அதிக எண்ணிக்கையில் சொற்களைப் பெருக்கியிருப்பர். தாமே அனைத்தையும் கண்டறிந்து நேர்ப்பழக்கம் கொண்ட நிலையினரானால் அம்மொழியாளரிடையே மொழிக்கலப்புக் குறைந்த அளவிலேயே அமைந்திருக்கலாம். வளங்குறைந்த நிலையில் தனித்து ஒதுங்கிய மக்களின் மொழியோ பிறமொழிச் சொற்களை அதிக அளவில் ஏற்கும் நிலை நேர்கிறது. பேச்சு மொழியிலும், எழுத்து மொழியிலும் இந்நிலை பொருந்துவதாக உள்ளது.

அறிவு வளர்ச்சி, உழைப்பு, தலைமைத் திறம் மிக்க மக்கள் பேசும் மொழி பல்வகைச் சொல் வளம், பொருள் வளம் பெற்று விளங்குவதையும், அத்தகைய வளர்ச்சி இல்லா மக்கள் பேசும் மொழி சொல் வளம், பொருள் வளம் குறைந்து சொற்களின் எண்ணிக்கையில் வறிய மொழியாக உள்ளது. ஆகவே, ஒரு மொழியின் சொற்பொருள் ஈட்டமும், அந்நாட்டார் வாழ்நிலையை, வாணிக நிலையைச் சுட்டிக் காட்டுகின்றன என்று கூறலாம். எவ்வாறேனும் மேம்பட்டு வாழும் ஒரு நாட்டினரின் நிலை தக்கதோ, தாழ்ந்ததோ அதுவே மொழிக் கலப்பிற்குரிய முதன்மைக் காரணமாகிறது.

 பேச்சுமொழி இயற்கையாக அமைவது: எழுத்துமொழி அறிவார்வத்தால் அமைவது. இவ்விரு நிலைகளும் மொழியை உருவாக்குகின்றன. மொழியை வளமாக்கும் இவ்விரு திறனும் மொழிக் கலப்பிற்குக் காரணங்களாக அமைந்து விடுகின்றன. பேச்சுமொழியில் பிற மொழி கலப்பது என்பது இருவர் தொடர்பாக – இயல்பாகத் தடையின்றி அமைகிறது.

 

ஒரு மொழியில் எழுதுவோன் தன் விருப்பதிற்கேற்பவே – காரணம் பற்றியே பிறமொழிக் கலப்புக்கு இசைகிறான். நடப்பைக் காட்டுவதே எழுத்து என்பாரும், நடப்பைக் காட்டி நல்லதை நிலை நாட்டுவதே எழுத்து என்பாரும் உண்டு. ஒருவர் எழுத்தைப் பயில்வோன் புத்துணர்வு பெறுவது போலவே, செழுமையான மொழியின் வனப்பைச் சிறப்புற அறியவைப்பதும் எழுது குலத்தாரின் கடமையாகும்.

 அயன் மொழிச் சொற்கள் அனைத்துமே தொடக்கத்தில் பேச்சு வழக்கில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டுப் பிறகே எழுத்து வழக்கில் ஏற்றுக் கொள்ளப்படுவனவாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எழுத்து வழக்கில் அயன்மொழிச் சொற்கள் முதலில் ஏற்கப்படுவதும், பிறகு பேச்சு வழக்கிலும் அவை இடம்பெற நேர்வதும் உண்டெனினும், அவற்றின் தொகை குறைவே.

 

பிற மொழிகளிலிருந்து கலைச் சொற்களை எழுத்து வழக்குதான் முதலில் கடன் வாங்குகிறது. ஆக்ஸிஜன், சைக்கிள், கார், ராக்கெட், சூப்பர்சானிக், ரேடியோ, டெலிவிஷன் போன்ற சொற்கள் முதலில் எழுத்து வழக்கில் இடம்பெற்றுப் பின்னரே பேச்சு வழக்கில் இடம் பெற்றன என்று பேச்சுவழக்கில் அயன்மொழிச் சொற்கள் கலத்தலைப் பற்றிப் பேராசிரியர் தெய்வசுந்தரம் ஒருமுறை குறிப்பிட்டார். மக்கள் பலர் ஒருவரோடு ஒருவர் கூடிப் பழகித் தம் உணர்வுகளைப் பரிமாறி மகிழ்வதற்காகவே மொழியைப் பயன்படுத்துகின்றனர். பேசும் மக்களை விட்டுத் தனியே பிரித்துப் பார்த்தால், மொழி என்பது இல்லை என்பார். மக்களின் அறிவில் அவ்வப்போது தோன்றும் புதுமைகள் அனைத்தும், மொழியில் படிந்துவிடுகின்றன. மொழிக் கலப்பின் தன்மையை மொழியறிஞர் ஆராயும்போது, மொழியின் தொன்மையை ஆராய்வதும் இணைந்த பணியாகிறது.

 ஒரு நாட்டு மக்களின் முன் விரிந்து பரந்த உலகப் பொருண்மைகள் பலவாக நிற்கின்றன. உலகத்தில் பலவகைப் பொருள்கள், அவற்றின் இயல்புகள், தன்மைகள், செயல்கள் உள்ளன. பேசும் மக்களோ தம் அறிவு ஆற்றல்களில் தனித்தனி வேறுபாடு உடையவர்கள். அந்தந்தக் கூட்டத்தார் – நாட்டார் – அவரவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் ஏற்ற அளவில் உலகத்துப் பொருள்களைத் தத்தம் மொழியால் உணர்த்த முற்பட்டார்கள். நுண்ணிய கருத்துகளை உணர்ந்து, சொற்களால் உணர்த்துவதற்குச் சில கூட்டத்தார்க்கு நெடுங்காலம் ஆகியிருக்கும். வேறு சிலர் குறுகிய காலத்திலேயே நுண்கருத்துகளையும் உணர்த்தத் தொடங்கியிருப்பர். அவரவர்களின் வாழ்வில் எவ்வெப்போது எந்தெந்தப் பொருள்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனவோ, அந்தந்தப் பொருள்களுக்குரிய சொற்கள் அவ்வப்போது விரைவில் ஏற்பட்டிருக்கும்.

பிரெஞ்சு மொழியில் உள்ள பாராளுமன்றம் தொடர்பான பல சொற்கள் ஆங்கிலத்திலிருந்து பெறப்பட்டவை. ஏனெனில், பாராளுமன்றத்தை முதன்முதலில் உருவாக்கியவர் ஆங்கிலேயர். பிறகு பிறமொழியாளர் வந்து கலந்தபோது, புதிய அல்லது நெருங்கிய தொடர்பில்லாத பொருள்களுக்கும் கருத்துகளுக்கும் உரிய சொற்கள் வந்து புகுந்திருக்கும். பிறர் கலப்பின் காரணமாக அல்லாமல், இயல்பாகவே தோன்றிய புதிய கருத்துகளுக்குத் தாமே அவ்வப்போது சொற்களைப் படைத்துக் கொண்டனர். இந்தநிலையில், மொழிக் கலப்பு இயல்பாகவும். தவிர்க்க இயலாத சூழல்களிலும் நிகழும் முறையை அறிஞர் மு.வ. சுட்டிக் காட்டியுள்ளார்.

மொழிக் கலப்பு நிகழ்வதற்குப் போலச் செய்தல் என்பதும் ஒரு காரணமாக விளங்குகிறது. பிறமொழியினர் பயன்படுத்தும் சொற்களையும், பொருட்பெயர்களையும் தன்மொழியில் எடுத்துரைக்க முயல்வதும் மனித மனத்தின் விழைவாகும். இம்முயற்சியில் தாய் மொழி கைவரப் பெறாதபோது, பிறமொழியை ஏற்கும் முறையில் மொழிக் கலப்பு நடைபெறும். மக்கள் எந்த எந்தத் துறையில் வளர்ச்சி எய்துகிறார்களோ அந்தந்தத் துறையில் பெற்ற வளர்ச்சிக்கெல்லாம் “போலச் செய்தல்” என்னும் இந்தத் தனிப்பண்பே காரணமாகும். இப்பண்பே மொழிக் கலப்பிற்கும் வழி வகுக்கிறது. எவ்வகையிலும் பிற மொழிகளிலிருந்து வந்து கலவாமல் எந்த மொழியிலும் சில சொற்கள் உருவாக முடியாது.

கலைச் சொற்களாக உள்ள பிறமொழிச் சொற்களை எந்த மொழியும் கடன் பெறவே வேண்டியுள்ளது. எனவே, மொழிக் கலப்பிற்குக் கடன் பெறுதல் முதன்மைக் காரணமாக அமைகிறது. இவ்வாறு சொற்களைக் கடன் பெறுவதற்கான காரணங்களை மொழியறிஞர் எஸ்பர்ஸன் மூன்று வகைப்படுத்துவர். அஃதாவது தம்மிடம் இல்லாத புதிய பொருள்களைப் பயன்படுத்தும்போது, அவற்றின் பிறமொழிப் பெயர்களைக் கடன் வாங்குதல், ஒரு மொழியாளரிடமிருந்து செல்வாக்கோ உயர்வோ பெற்றுள்ள ஒரு துறையைக் கற்கும்போது, அதற்குரிய அம்மொழிச் சொற்களையும் ஏற்றுக்கோடல். சோம்பலின் காரணமாகத் தம்மொழிச் சொற்களைத் தேடிக் காணாமல், பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டுவந்து கலந்து சேர்த்தல் என்று சுட்டியுள்ளார்.

 

சொல்வளமின்றி ஒரு மொழி வறுமையுற்றிருப்பதும், பேச்சு மொழிக்கு உந்தாற்றலான கலந்து பழகு உணர்ச்சியும், எழுதுவோன் விருப்பமும், போலச் செய்தலும், கடன் வாங்கலும் ஆகிய காரணங்கள் மொழிக் கலப்பை விளைவிக்கின்றன. இவையனைத்தும் மொழி முழு வடிவம் பெறப்பெறப் பேசப்பட்டதும், மொழியுடன் பிறந்து விடும் காரணங்களாகும். எனவே, மொழியின் தொன்மையைப் போன்றே மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்ததாகும் போலும், அனைத்து மொழிகளுக்கும் பொதுவாகக் காட்டப்பட்ட காரணங்களே தமிழில் ஏற்பட்ட பிறமொழிக் கலப்புக்கும் பொருந்துகின்றன. இக்கலப்பும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவதாகும்.

வேத காலத்திலேயே திராவிட மொழிக் குடும்பத்திற்கும், வட மொழிக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்ததைத் தமது ஆராய்ச்சியில் தெ.பொ.மீ. குறிப்பிட்டுள்ளார். மயில், களம், பழம் என்னும் வடிவங்கள் இன்றுகூடத் தமிழில் உள்ளன. Bala (பலம்) என்பது வல் என்னும் திராவிட வேரிலிருந்து வந்ததெனப் பேராசிரியர் ‘எமனோ’ சுட்டிக் காட்டுகிறார். மூலத் திராவிட மொழியின் காலத்திலேயே வகர மெய் ஒலிப்புடைப் பகர மெய்யாக (b) மாறிவிட்ட திராவிடக் கிளை மொழியிலிருந்து இச்சொல் கடன் வாங்கப்பட்டிருத்தல் வேண்டும். இந்தோ ஐரோப்பிய மொழியில் ஒலிப்புடைப் பகர மெய்யொலி அரிதாகவே வருகிறது. இதை இந்தோ ஐரோப்பிய மொழி ஒலியனாக ஒப்புக் கொள்ளாதவர்கள், திராவிடத்திலிருந்து இது வந்தது என்ற கொள்கையை ஒப்புக் கொள்வர் என்பதனை ‘ஏது நிகழ்ச்சி’ எனவும், நிருவாணத்தைப் ‘பெரும்பேறு’ எனவும் தமிழாக்கியுள்ளார்.

–  முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

 

 

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment