Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

Written by Dr. Avvai N Arul

மொழியே இணைப்புப் பாலம்..!

மொழிக் கலப்பு

 

மொழித் திறன் என்பது நாட்டு மக்கள் வளர்த்துக் காக்கும் திறனுடைமையின் பயனாகும். ஒருவருக்கொருவர் உரையாடி மகிழும் மொழியே மக்களின் அறிவுப் பெருக்கத்தால் செழுமையான மொழியாக மாறும் பல இன, மொழி மக்களின் இயக்கமாக உலகம் உள்ளது. மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முதலில் உணர்வைச் சிறுசிறு சொற்கள் கொண்ட மொழியாகத் தன்னைப் போல் அவற்றை அறிந்தவரிடம் உரையாடுகிறான்.

தனி ஒரு மனிதனின் தேவை என்ற நிலையிலிருந்து அவன் சார்ந்த சமுதாயத்தின் விருப்பம், நோக்கம், தேவை எனும் நிலைக்கு வளர்ச்சி உருவாகின்றது. இக்கட்டத்தில் மொழியின் பயன்பாடு செறிவடைகின்றது. தன்னைச் சார்ந்தும், தன்னைச் சுற்றியும் குறுகிய எல்லையில் நிகழ்ந்த மொழிப் பயன், வேறு ஒரு குடும்பத்தில் ஊடாட்டம் நிகழ்த்தும் அளவிற்கு விரிவடைகிறது. இந்நிலையில், உலகின் பல்வேறு மொழிக் குடும்பங்கள் ஒன்றையொன்று நெருங்கியும் நேயங்கொண்டும் கருத்துகளையும், பொருள்களையும் கொண்டும் கொடுத்தும் தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன.

 

இவ்வாறு சமுதாய வாழ்வுக்கு மொழியே இணைப்புப் பாலமாக அமைகிறது. இத்தகைய சமுதாயச் சந்திப்புகளால் நாகரிகம், பண்பாடு, கலை, பழக்க வழக்கங்கள் ஆகியவை நாளும் புதிய மாற்றங்களைப் பெறுகின்றன. நிகழ்ந்த மாற்றங்களால், மொழி இழப்பு, மொழிக் கலப்பு என இரண்டும் விளைகின்றன. இவற்றுள் மொழிக் கலப்பு என்பதே வன்மை மிக்கது. மொழிக்கலப்பு நிகழத் தொடங்கிய நிலையில் மொழிக்குப் பழஞ்சொற்களை மறப்பது, உரிய சொற்களை விலக்குவது என்ற அளவில் இழப்புகள் நேரும் இழப்பும் கலப்பும் இரு வேறு சொற்களாக அமைந்தாலும், இழப்பின்றிக் கலப்பில்லை; கலப்பின்றி இழப்பில்லை என்றே கருதலாம்.

 ஒரு மொழியில் உள்ள சமுதாயத் தேவை கருதியும், சமுதாயத் தொடர்பை விரிவாக்கும் காரணங்களாலும் ஒரு மொழியில் வேறு சொற்கள் புகுந்து இடம் பெறுவதையே மொழிக்கலப்பு என்கிறோம். மொழி இழப்பு என்பது, மொழிக் கலப்பால் ஒரு மொழி தன்னிடமிருந்த சொற்களைப் பயன் குறைந்ததாக இழந்துநிற்கும் அவல நிலையாகும்.

 மொழிக் கலப்பு நிகழ்வதற்குப் பல்வேறு காரணங்கள் கூறுவர். இயல்பான சந்திப்புகள், பொருள்களைக் கொடுத்தலும், வாங்குதலும், இனங்களுக்குள் நிகழும் போரினால் ஓரினம் தன் மொழி, கலை, பண் பாட்டுக் கூறுகளை அறவே கை நெகிழ விடுதல் என்பன சில. இருப்பினும் மொழிக் கலப்பு என்பது எளிதில் நிகழக் கூடியது என்னும் கருத்து, ஒவ்வொரு மொழியிலும் வேறு மொழிச் சொற்கள் கலந்து கிடப்பதைக் காணும்போது புலப்படும்.

 ஒருவர் பேசும் மொழியில் இன்னொரு மொழியின் சொற்கள் கலந்திருக்கும் காரணத்தாலேயே அவ்வினத்தார் அம்மொழிகளை அறிந்தவர் என்று கருதுவதற்கில்லை. இன்னொரு மொழியைப் பற்றி ஒன்றும் அறியாமலே அந்த மொழியின் சொற்கள் சிலவற்றைக் கேட்டுத் தம் மொழியில் கலந்து பேசுவது எளிது. ஆகவே, சொற்களின் கலப்புக்குப் பெரியதொரு தனிக்காரணம் அமைய வேண்டியதில்லை. இரு வேறு மொழி பேசும் மக்கள் நாட்டின் ஒரு மூலையில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிச் சிறிது கலந்து பழகினால் போதும் சொற்கலப்புக்கு அஃது இடம் தந்து விடும். நாளும் ‘புதுவோர் மேவலின்’ என்றும், ‘புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் எனவும் வரும் பொருண்மொழிகள் மக்கள் இயல்பை நன்குணர்த்தும்.

 பொதுவாக எந்தச் சொல்லையும் பொருள் தெரிந்து கூறுவது நல்லது. சொல்லின் பயனும் அதுவேயாகும். இதனாலேயே எந்தச் சொல்லுக்கும் பொருள் தெரிந்து கொள்ள முயல வேண்டும். எல்லாச் சொற்களுக்கும் பொருள் உண்டு. அப்படியே பொருள் தெரியவில்லையென்றால், மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றவாறு முயன்று காண முற்பட்டால் பொருளை அறியலாம் என்பது தொல்காப்பியர் கருத்து. பிறமொழிச் சொற்களின் கலப்புத் தொடங்கவே பொருளறியாத தன்மையால் இடுகுறிப் பெயருக்கு நன்னூலார் இடம் தந்தார். ‘ஆசிரியர் தொல்காப்பியர் யாதானுமோர் காரணம் பற்றியே குறியிட்டு ஆளுதலல்லது. வடநூலார் போலக் காரணம் பற்றாதும் குறியிட்டு ஆளுதல் யாண்டும் இல்லை என்று தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் சிவஞான முனிவர் குறிப்பிட்டதைப் பலரும் எடுத்துக் காட்டுவர்.

 

பன்னெடுங்காலமாகப் பிறமொழி பேசும் மக்களோடு ஏற்பட்ட தொடர்பினால், பல சொற்கள் தமிழிலே புகுந்து இன்றைய வழக்கிலும் நிலைபெற்றன. இம்மொழிக் கலப்பு ஒரு குறிப்பிட்ட மொழியால் மட்டுமே நிகழ்வதன்று. ஒரு மொழியினர், பல மொழியினரோடும் பழக நேர்வதால், பல மொழிகளும் ஆங்காங்கே கலப்பதும் இதற்குக் காரணமாகும். தமிழ்மக்கள் வடநாட்டாரோடு மட்டுந்தான் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்று கூற முடியாது. பிற நாட்டாரோடும் உறவு கொண்டிருந்தார்கள். இவ்வகைத் தொடர்பின் அறிகுறியாகப் பிற நாட்டுச் சொற்களும் தமிழில் புகுந்துதான் இருக்க வேண்டும். எனவே, உலகின் மொழிகளனைத்தும் ஏதேனும் ஒரு காரணத்தால், ஓரினத்தோடு இணைந்த மொழிக்கலப்புடையனவாகவே இருக்கும்.

வழக்குச் சொற்களின் வலிமை

 ஒரு மொழியின் எழுத்து வழக்கினைக் காட்டிலும் பேச்சு வழக்கே பரந்தும் விரிந்தும் செயற்படுவது. இப்பேச்சு வழக்கில் மொழிக்குரிய சொற்களும், பிறமொழிகளிலிருந்து வந்தினைந்த சொற்களும், மக்களுக்குப் பயன்படும் சூழலுக்கேற்ப இடம் பெறுகின்றன. இப்பேச்சு வழக்குப் பலகாலம் நீடிக்கும் நிலை உண்டு. இவ்வாறு நிலைத்திருந்த பேச்சு வழக்கில், கலந்த பிறமொழிச் சொற்கள் சில அம்மொழியில் பின்னாளில் நிலைத்துவிடும் வல்லமை பெற்று விடுகின்றன. இவ்வாறு வல்லமை பெற்று நின்ற பிறமொழிச் சொற்கள், காலத்திற்கேற்ப இலக்கியங்களில் இயற்கையாக இடம்பெறக் கூடியனவாகும்.

எனவே, ஒரு மொழியின் பேச்சு வழக்கும், அதனால் வழங்கும் சொற்களும் வலிமை கொண்டவை என்பதை அறிய முடிகின்றன. இவ்வாறு வழங்கப்பெற்ற சொற்களே பல்வேறு உரையாசிரியர்களால் சமுதாய நிகழ்வுச் சான்றுகளாகக் காட்டப்பட்டன. தொல் காப்பியத்தை இயல்பாகவும் எளிமையாகவும் மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு எழுதிய உரைநெறிகளுள் சமுதாய வழக்கோடுபட்ட எடுத்துக்காட்டுகளும் ஒரு வகைப்பாடாகும்.

இயற்கை, காதல், வீரம், கலைகள், அறங்கள், உழவு, வாணிகம், பழக்க வழக்கங்கள் முதலான பிரிவுகளிலிருந்து தத்தம் காலத்தில் பயின்ற சொற்களையும் தொடர்களையும் மேற்கோள்களாகக் காட்டிய விளக்கங்கள் பல. எடுத்துக்காட்டாக ‘இன்று இவ்வூர்ப் பெற்ற மெல்லாம் உழவொழிந்தன’, ‘ஆன்கன்றுக்கு நீருட்டுக’, ‘இலைநட்டு வாரும்’’, ‘பூநட்டு வாரும்’, ‘நம் எருது ஐந்தனுள் யாது கெட்டது’, ‘எருது வந்தது அதற்குப் புல்கொடுக்க’, ‘எவருங்குழி’ என்னும் உழவுத்துறை வழக்குகளும், ‘கால்மேல் நீர்பெய்து வருதும்’, ‘வாய் பூசி வருதும்’, ‘இன்று இவ்வூரெல்லாம் தைந்நீராடுப’, ‘நாயாற் கோட்பட்டான்’, ‘பேய்கோட்பட்டான்’, ‘நாகர்பலி’, ‘இல்லம் மெழுகிற்று’, ‘சோறு அட்டது’ எனப் பழக்கவழக்கச் சொற்களும், ‘மலை நிற்கும்’, ‘ஞாயிறு இயங்கும்’, ‘பண்டு இப்பொழிலகத்து விளையாடும்’, ‘வேங்கைப்பூ’, ‘கருப்புவேலி’, ‘வரை வீழருவி’, ‘குன்றக்கூகை’ என இயற்கைத் தொடர்பான வழக்குகளும், ‘மனைவியைக் காதலிக்கும்’, ‘உற்றார்க்குரியர்’, ‘நங்கை வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க’, ‘ஒக்குமோ இவள்கண்’, ‘இந்நங்கைகண் நல்லவோ இக்கயல் நல்லவோ’ என வரும் காதல் வழக்குகளும், ‘இன்று இவ்வூர் மக்கள் தாவடிபோயினார்’, ‘வடுகரசர் ஆயிரவர் மக்களை உடையர்’ என வரும் வீரங்காட்டும் வழக்குகளும், ‘யாழ்கேட்டான்’ ‘குழல் கேட்டான்’, ‘வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான்’, ‘ஆடரங்கு’, ‘செய்குன்று’, ‘கபிலரது பாட்டு’, ‘பண்ணுக்குத்தக்கது பாடல்’ என்ற கலைத்துறை வழக்குகளும், ‘ஆசையைக் குறைக்கும்’, ‘அறத்தைக் காதலிக்கும்’, ‘சூதிரைக் கன்றும்’, ‘மனை வாழ்க்கைக்குப் பற்றுவிட்டான்’, ‘பழி யஞ்சும்’ என்று அறம் குறித்த வழக்குகளும், இவ்வாறே அரசியல், சமயம், ஊர், நாடு முதலான வழக்குச் சொற்களும் இவ்வுரைகளில் பல்கிக் கிடக்கின்றன.

 வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் என்று பாயிரம் கூறிய தற்கேற்பச் செய்யுட் காட்டுகள் உரைகளில் இடம் பெற்ற வழக்குக் காட்டுகளாகும். இவ்வழக்குச் சொற்கள், தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலத்தில் வழக்கில் இருந்தனவாதலால், இவை சான்றுகளாகக் காட்டப்பெற்றன என்பதை நாம் அறிய முடிகிறது. இவற்றில் பலவற்றை இன்றைய தமிழ் வழக்கில் காண இயலாது. ஆயினும் வழக்குச் சொற்கள் வலிமை மிக்கனவாகவும், அப்போதைக்குப் பெருகிப் பின்னர் இலக்கியத்தில் இடம்பெறத் தக்கனவாகவும் அமைந்தன. எனவே, வழக்குச் சொற்களில் பிறமொழிச் சொற்கள் மெல்லப் பெருகவே, அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களிலும் பிறமொழிக் கலப்பு இடம்பெறுவது இயல்பாயிற்று.

 

–  முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

 

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment