யாதும் ஊரே; யாவரும் கேளிர் !
கலைஞரின் பிறந்த பொன்னாள் நமக்கெல்லாம் நலிவு தீர்த்த நன்னாள் .
சிகரத்தை இழந்து சிந்தை நிலைகுலைந்து வாடினாலும் பிறந்தநாள் வலம் வருகிறது .
வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தோடி வந்து நான் காப்பேன் என்ற புதிய விடியலோடு நம் முதலமைச்சர் நமக்கு ஆறுதல் வழங்க அரியணையில் அமர்ந்துள்ளார் .
கொடுந்தொற்றின் அடாத கொடுமையை நீக்க நாளும் அரசு கண் துஞ்சாது பணியாற்றுகின்றது .
கலைஞரின் நினைவு நாள் என்றும் நமக்கு உரம் .நம் வாழ்வுக்கு வரம் .
புறநானூறு கலைஞரின் போர்வாள் !
பொழுதெல்லாம் புறநானூற்றுப் புதையலில் ஒளிர்மணிகளை எப்படியாவது எந்நிலையிலாவது எடுத்துச் சொல்வதில் இன்பம் கண்டவர் .
பழம்பாடலைப் சொல்லும்போதே புதிய விளக்கம் பொலபொலவென உதிரும் .
உலக நாடுகளில் எல்லாம் உலகத்தமிழ் ஆய்வு மாநாடுகள் நடந்தன .
உலகத்தமிழ் ஆய்வு முதல் மாநாடு மலேசியத் திருநாட்டில் தொடங்கியது .
அப்போது கலைஞர் ஆட்சிக்கு வரவில்லை .
1965 ஆம் ஆண்டில் உலகத்தமிழ் என்பதைப் பொறிப்பதற்கு
” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற பொன்மொழிக்கு நிகரான நன்மொழி எதுவும் இல்லை அதுதான் பொருத்தம் என்று கூறினார் .
எண்ணியது அப்படியே நடந்தது .
அன்றுமுதல் எந்த மாநாட்டிலும் இந்தச் செம்மொழிதான் பொறிப்பு மொழியாக நிலைபெற்று விட்டது .
உள்ளத்தில் ஊர்ப்பற்று ஊறியிருந்தாலும் தமிழ்மனம் எப்போதும் உலகம் தழுவியது .
எந்த நூலைத் தொடங்கினாலும் வையகத்தை அரவணைக்கும் போக்கிலேயே பாடியுள்ளனர் .
பாருங்கள் யாதும் ஊரே என்று தொடங்கினாலும் தன் ஊர்ப்பற்று ஒளிரப் பூங்குன்றன் என்றே கணியன் அழைக்கப்பட்டார் என்று ஒருமுறை குறிப்பிட்டதை எண்ணிப்பார்த்தேன் .
இப்படி உரையாசிரியர்கள் சிந்திக்கவில்லை என்றேன் .
கணியனைத் துறவி என்பர் .
கணிப்பது ஆருடக் கணிப்பு என்ற ஊழ்வினையை வலியுறுத்தும் பாடல் என்று டாக்டர் ஜி யு போப்பும் கருதினார் .
முத்தமிழறிஞர் கலைஞர் ஒருமுறை ” ஆற்று நீர் வழிப்படுஉம் புணை போல் ” என்றார்களே ,
நீரில் தன் போக்கின் புணை போல மிதப்பது வாழ்வா !
இறந்த மீன்தான் மிதக்கும் .உயிருள்ள மீன் ஓடி ஓடி நீரைக் கிழிக்கும் ,எதிர்க்கும் .
தன் போக்கில் தடைகளை உடைத்தெறிந்து எதிர்நீச்சல் போடுவது தான் வாழ்க்கை .
அதுதான் பகுத்தறிவாகும் .
நான் புன்முறுவலோடு எனக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கவில்லையே என்று திகைத்து நின்றேன்
.சொல்லியறிவது வேறு,சுயமாக நினைப்பது தான் பிழிந்த சாறு என்றார் .
புறநானூற்றை மறைக்க வந்த புழுதிக்காற்றே ஓடு ! ,
கலிங்கத்துப்பரணியை மறைக்கவந்த காரிருளே ஓடு ,ஓடு ,பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடு
என்ற மனோகராவில் முழக்க வரிகள் தாம் என் நினைவில் நின்றன .
யாதும் நாடு யாதும் ஊர் கற்பதற்கு எல்லையில்லை .
கடல் கடந்தும் செல்லலாம் என்ற திருக்குறளைச் சொல்லிக் காட்டலாம் .
” திரைகடல் ஓடி திரவியம் தேடி ” என்பதைக் காட்டி பிழைப்புக்காக அயல்நாடுகளுக்குக் குடியேறி அல்லற்பட்டார்கள் .
அங்கென்ன திரவியம் கொட்டியா கிடக்கிறது .
இக்கரைக்கு அக்கரை பச்சையென்று ஏக்கத்தில் வாழ்கிறார்கள் என்று தொடர்ந்து பேசினார்
.கிடைத்த ஆறு மணித்துளிகளில் இப்படிக் கருத்து முத்துக்களை உதிர்த்தார் ,
எங்கே எப்போதும் எந்நிலையில் இருந்தாலும் தாதிமனம் நீர்க்குடத்தே தான் என்ற தொடரின்படி தொட்ட இடம் எல்லாம் – கண்ணில் பட்ட இடமெல்லாம் தமிழ் தான் அவருக்குத் தட்டுப்பட்டது . .
கலைஞரின் கைவண்ணத்தில் புறநானூற்றுப் பொலிவடைவதைக் காணலாம் .
மூன்று கூறாக ஆவதற்கு முன்பிருந்த
முகவைப் பெரு மாவட்டத்தில் மூதறிஞர் பண்டிதமணி
கதிரேசன் செட்டியார் பிறந்தார் எனக் கேள்வியுற்றுக்
களிப்புடனே மகிபாலன்பட்டிக்குச் சென்றிருந்தபோது
பூங்குன்றமெனப் பழைய நாள் இலக்கியமாம்
புறநானூற்றுக் குறிப்பில் இருந்த ஊரின் பெயர்தான்
மகிபாலன் பட்டியாக
மாறிற்றென்று, பெரும்புலவர்
மாணிக்கனார் உரைக்கக் கேட்டு
மகிழ்ச்சியிலே திளைத்துப் போனேன்.
கணியன் பூங்குன்றனார் எனும் அவ்வூர்க் கவிஞன்
கற்குகை யொன்றில் செதுக்கியுள்ள கவிதையினைக்
காண வாரீர் என அழைத்திடவே; சென்று கண்டேன் ! – அந்தப்
பழம்புலவன் கரங்கொண்டு செதுக்கியதோ – அன்றி
பார்புகழும் அப்பாட்டைப் பின்வந்தோர் செதுக்கியதோ ?
யார் செயலாய் இருந்திடினும் அப்பாட்டில்
“ யாதும் ஊரே யாவரும் கேளிர் ” எனும்
அறைகூவல்தனை அற்றைநாளில் ஒரு தமிழன்
நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்துகாட்டி
விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும்
விழியும் ஒளியும் போல் மக்கள் எலாம் நம் உறவே என்றும் – புதிய
வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து
வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான் !
பூந்தமிழில் வண்டாகப் புணர்ந்து கலந்து – இந்தப்
பூமிக்கே பொதுக்கவிதைக் கனியொன்றைத் தந்த கவிஞன்
பூங்குன்றந்தனில் பிறந்த புலவன் கணியன்தான் என்கின்றபோது
புல்லரித்துப் பூரித்துப் போகுதம்மா; நம் எண்சாண் உடம்பு !
அந்நாளில் புலவரெல்லாம் அகிலத்தை ஆளுகின்ற
அரசர்களின் அவைக்களத்தில் அரிய தமிழ்க் கவிகள்பாடி
ஆனையென்றும் சேனையென்றும் ஆயிரம் பொற்கிழிகள் என்றும்
மானியங்கள் மற்றும் பல பரிசில் என்றும் மலைமலையாய்ப் பெற்றிடுவர் !
இந்நாளில் சில புலவர்போல் வாழ்வார்க்கு வாழ்த்துரைத்து
இன்னலுற்று அவர் தாழ்வாராயின் அக்கணமே சிறகடித்து
அற்றகுளத்துப் பறவைபோல அடுத்தகுளம் பார்க்கின்ற
இயல்புடையார் அப்போதும் சிலர் இருந்திடத்தான் செய்தார்கள் !
கணியூர்ப் பூங்குன்றனோ; அவர்கண்டு கவலைமிகக் கொண்டதனால்
அணிமணிகள் தமிழில் செய்து அரசர்க்கும் வள்ளல்கட்கும்
பூட்டி மகிழ்வதிலே ஆர்வமொரு கடுகளவும் காட்டாமல் இருந்திடவே,
நீட்டி முழக்கிச் சிலபேர்; “அரசை அணுகிப் பரிசு பெறப்
பாடல்களை இயற்றிடுக !” எனக் கேட்டபோது – கணியன்;
பக்குவமாய் விடையளித்து அவர் விருப்பத்தைத் தட்டிக் கழித்தான் !
“ நாடு பற்றிப் பாடுகின்றீர் – நன்று ! நன்று !
நாடாளும் மன்னர் பற்றிப் பாடுகின்றீர் – அதுவும் நன்று !
நாடுதனை மீட்பதற்கும் புதிதாகப் பறிப்பதற்கும்
கேடுகளைச் சுமந்து விழுப்புண்கள் ஏந்துகின்ற
பீடுநடை வீரர் பற்றிப் பாடுகின்றீர் – மிகவும் நன்று !
ஏடுகொள்ளா இலக்கியங்கள் காதலையும் களம்புகுவோர் காதையையும்
எடுத்தியம்பும் காரணத்தால் என்வழியைத் தனிவழியாய் ஆக்கிக்கொண்டு
எல்லா ஊரும் எமது ஊரே
எல்லா மனிதரும் எமது உறவே – எனஎழுதத் தொடங்குகின்றேன் ” என்றான் !
நற்றிணையில் வருகின்ற காதல் பாட்டொன்றைக் கூடக்
கற்றறிவாளன் கணியன் பூங்குன்றன் எழுதுங்கால்
“மருந்துக்கு உதவுகின்ற மரத்தின் பட்டைகளை மட்டுமன்றி – அந்த
மரத்தையே வேரோடு பிடுங்குவதோ ?” எனக்கேட்டு,
பயன்படுவன எதனையும் பாதுகாக்க வேண்டுமெனப்
பாங்காக அறிவுரையைப் பகருகின்றான் உலகிற்கு!
‘ஒரே உலகம்’ எனும் கொள்கைதனை – மனிதரெல்லாம்
‘ஒரே குலம்’ எனும் தத்துவத்தைப் புவியில்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு
முன் தோன்றிய மூத்த குடிப் பிறந்த தமிழ்க்
கணியன் பூங்குன்றன், கவிதை நடைச்
சொல்லூன்றி நிலைநாட்டுகின்றான்!
விதிப்பயனே எல்லாம் என்றுரைத்துச் சோர்ந்து
கதியற்றுக் கன்னத்தில் கைவைப்போர்தனைப் பார்த்து,
“நன்மைக்கும் தீமைக்கும் காரணங்கள்
நமது செயல்களேயன்றிப் பிறரல்லர்’ என்று
நயம்பட உரைக்கின்றான் அந்த நற்றமிழ்ப் புலவன்!
அம்மட்டோ ?
வேதனைகள் விரைந்து தொடர்வதும் – அவை
விலகித் தொலைந்து போவதும் கூட
நாம் ஏற்றிடும் செயல்களால் என்றே
நன்கு கணித்து நவில்கின்றான் கணியன்!
‘பிறந்த உயிர்கள் இந்த மண்ணில்
இறந்து மறைதல் புதிதுமல்ல;
இன்பமொன்றுக்காகவே வாழ்க்கை என்பதும்
துன்பம் வந்திடின் வாழ்வை வெறுப்பதும்
உறுதி கொண்ட மாந்தர்தம்
உளத்திற்கேற்ற உயரிய செயலுமல்ல!
ஆற்றொடு போகும் தெப்பம் போல்
ஆடியும் அசைந்தும் அமைதி கண்டும்
ஆருயிர்ப் பயணம் அவனியில் நடக்கும்! எனவே
ஆன்றோர் காட்டிய அரிய வினைகளைத் தொடர்க!
செழிப்பில் திளைத்தோர்க்குச் சிரம் தாழ்த்தலு மில்லை;
சிறியோர் எனப்படுவோரை இகழ்ந்துரைத்தலு மில்லை!!
இவ்வாறு;
உலக ஒற்றுமை, ஒரு குலக் கொள்கை,
உயிரின் தன்மை, உயரிய வினைகள் – வாழ்வில்
உற்ற துன்பமும் உவகையின்பமும் ஒன்றெனக் கருதுதல்,
உயர்ந்துள்ள செல்வர்க்குப் பணியாமை – வீணில்
உழன்றிடும் சிறியோரை இகழாமை, எனப் பல
வண்ணமிகு மலர்கள் கொண்டு – உயர்
எண்ணங்களைத் தொடுத்தளிக்கும் பெரும்
உள்ளம் காணுகின்றோம் இந்தக் கவிதையினில்; புது
வெள்ளம் போல் இக்கருத்துப் பரவட்டும் காசினியில்!
ஆனால் ஒன்று;
ஊரெல்லாம் இணைந்து ஓருலகாய் ஆவதென்பதும்
உறவுகொண்டே மனித குலம் ஒன்றே எனத் திகழ்வதும்
உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன் கூடத்
தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே
கணியன் பூங்குன்றன் எனும்
கவிஞனாய் உலவியதைக் கவனத்துடன்
எண்ணிப் பார்த்தால் – அந்த மாமனிதனையும்
மண்ணின் பற்று விடவில்லை என்பதுதான் உண்மையன்றோ?
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே;
‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”
( புறநானூறு – பாடல் : 192 பாடியவர் : கணியன் பூங்குன்றன் )
பொருள் விளக்கம்:
கேளிர் = உறவினர். புதுவதன்று = புதியதல்ல.
முனிவின் = வெறுப்பின் காரணமாக
புணை = தெப்பம். திறவோர் = ஆன்றோர்
இலம் = இல்லாமை. ( இல்லையென்ற பொருளில் இங்கு வரும் )
கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாவட்டத்தில் மகிபாலன்பட்டியென இப்போது வழங்கும் ஊரினர்.
இது பூங்குன்றமெனப் பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில் கல்வெட்டால் அறியலாம் .
இப்போது குடகு மலையென வழங்குகிறது .
முது பெரும் புலவர் மகா மகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரார் இவ்வூரினராவர்.
இவ்வூர் பண்டே போல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.
பூங்குன்றனார் இடரினும் தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும் எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையவராக ஒளிர்ந்தார் .
நலஞ் செய்தாரென ஒருவரைப் பாராட்டலும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும். இல்லாதவர் இவ்வாறே பெரியோரைப் புகழ்தலும் சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர்.
உயிர்கள் அனைத்தும் தாந்தம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களாலும் நடைமுறையானும் நன்கறிந்தவர் .
இப்பண்பினால் நல்லிசைப்புலமை மிக்க இவர் எத்தகைய வேந்தரையும் – வள்ளல்களையும் பாடிற்றிலர் .
தலை வணங்காத இவரைக் கண்ட அக்காலச் சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று .
சிலர் முன் வந்து “ சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ ? ” என்றாராக, மேலே கூறிய தம் கருத்துகளையமைத்து இப்பாட்டைப் பாடியுள்ளார் என்று பழைய உரைக்கு இடஞ்சுட்டிப் பொருளுரைத்தார் உரைவேந்தர் .
செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….
Leave a Comment
You must be logged in to post a comment.