பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்கு தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்து கொண்டனர்.
போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தி தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்த கலசத்தை கொண்டுவந்து தந்தால் அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாக சொன்னாள்.
கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே… என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கி தேவலோகம் சென்றான். தேவலோகத்தில், காவல் புரிந்து கொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில் கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்த கலசத்தை பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்த கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுசரிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியாகவும், புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய திருமணமான பெண்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள். அவர்கள் செய்த சூழ்ச்சியினால்தானே வினதை அடிமையாக இருக்க நேர்ந்தது. அன்னையின் அடிமைத்தனம் களைய கருடன் தேவலோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது. அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது. பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது. எனவே கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. கருட பஞ்சமியன்று கௌரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.
விரதம் இருக்கும் முறை :
கருட பஞ்சமியன்று வீட்டை தூய்மை செய்து, மாவிலை தோரணம் கட்டி, அன்னை கௌரியை பூஜிக்க வேண்டும். கௌரி அம்மன் நாகத்தின் உருக்கொண்டு வருவதாக ஐதீகம். நம்முடைய சக்திக்கு தகுந்தாற்போல வெண்கலம், செம்பு அல்லது வெள்ளி உலோகத்தில் சிறு நாக உருவத்தை வைத்து வணங்கலாம்.
முதலில் முழுமுதற் கடவுள் விநாயகருக்கு பூஜை செய்தபின் ஒரு சிறிய தட்டில் நாக உருவத்தை வைத்து, மஞ்சள், குங்குமம் தரித்து, பூக்களால் அஷ்டோத்திரங்களைக் கூறி பூஜிப்பர். பின்பு பசும் பால் ஊற்றி வணங்க வேண்டும். நைவேத்தியமாக பால் கொழுக்கட்டை, பாயாசம் செய்து வைத்து, தூபம், தீபம், கற்பூர ஆரத்தி ஏற்றி வணங்குதல் நல்லது.
மாலையில் அம்மன் கோவிலில் உள்ள புற்றுகளுக்கு பசும்பாலும், நைவேத்தியமாக பால் கொழுக்கட்டையும், பாயாசமும் படைத்து வணங்க வேண்டும். கருட பஞ்சமி பூஜை செய்த பின்பு, நாக உருவத்திற்கு நோன்பு கயிறு சாற்றிவிட்டு, வீட்டில் உள்ள பெண்கள் நோன்புக்கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.
Leave a Comment
You must be logged in to post a comment.