“வாழ்வுச் சாரலும் வண்டமிழ் தேறலும்!”
கவியரசியார் சௌந்திரா கைலாசம் அம்மையார் என்னை அழைத்துத் தன் இல்லத்திலுள்ள நூலகத்தில் பழைய நூல்களையெல்லாம் சீர்பெற அடுக்கவும், கிழிந்த தாள்களில் உள்ள கவிதைகளை மீளச் செம்மையாக எழுதித் தருவதற்கும் நல்ல தமிழார்வமுள்ள ஓர் இளைஞரை எனக்கு அறிமுகம் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க என்னுடைய எம்.ஏ. வகுப்புத் தோழரான மகாதேவ ராவினை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். காரணம், அவருடைய கையெழுத்து முத்து முத்தாக இருப்பதால் அப்பணியை அவர் செவ்வனே செய்வார் என்ற உறுதியுடன் அழைத்துச் சென்றேன்.
அத்தொடர்பணி தொய்வின்றி நடைபெற்றாலும் ஓரிரு முறை மகாதேவன் சுணக்கம் காட்டினார். நான்தான் அவரை ஆற்றுப்படுத்திப் பொறுமை காத்தால் அகிலத்தை வெல்வாய் என்று கூறினேன்.
அப்பொறுமைக்குப் பரிசாகப் பணி முடிந்தவுடன் குமுதம் இதழின் தலைமை நிருபர் திரு. பால்யூவை அழைத்து இவர் பெயர் மகாதேவன், ஔவை அருளின் வகுப்புத் தோழர். நாளை முதல் இவரைப் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ குமுதம் இதழில் பணியமர்த்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தியாவிலேயே இணையற்ற செல்வாக்கையும் செலாவணியையும் பெற்றுள்ள குமுதம் இதழில் மகாதேவனுக்கு நிருபர் பணி கிடைத்தது.
அம்மையாரின் சிறப்பு அளவிடற்கு முடியாது.
எனக்கு இன்னும் பசுமையாக நினைவுள்ளது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த வேளையில் என்னையும் என் தம்பி பரதனையும் அவர்கள் தலைமையில் இந்தியன் ஏர்லைன் வானூர்தியில் சென்னை-மதுரை தொடக்கப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது பெருமையாகும். இதுவே எனக்குத் தொடக்கமான வான்வழிப் பயணமாகும்.
1989-இல் நான் லியோ கிளப்பில் உறுப்பினராக இருந்தபோது பேச்சுப் போட்டிகளிலெல்லாம் கலந்து கொள்வது வழக்கம்.
அப்போது, இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த செல்வி வித்யா அற்புதமாகப் பாடும் கலைஞராக இருந்தார்.
பிறகு, பம்பாயில் கிளியா நிறுவனத்தில் உதவித் துணைத் தலைவராகப் பணிபுரிந்துகொண்டிருந்த வேளையில், என்னிடம் தொலைபேசியில் அழைத்து, பல பேச்சுப் போட்டிகளில் ஈடுபட்டு வரும் நீங்கள் ஏன் மக்கள் தொடர்புக் கலையில் ஈடுபட்டு உங்கள் பேச்சினைப் பணமாக்கக்கூடாது என்று கேட்டார்.
இந்தக் கேள்வி எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்த எம்.ஏ. படிப்பைத் தொடர்ந்து கொண்டே சென்னையிலேயே கிளியா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன். விளம்பரத் துறைக்கு நான் உள்ளே வரக் காரணமாயிருந்தது செல்வி வித்யா.
மேலும் உந்துசக்தியாய் விளங்கிப் பெருமக்கள் பலரிடம் பழகுவதற்கும் பல செய்தியாளர்களைச் சந்தித்து நண்பர்களாக்கிக் கொள்வதற்கும் பல வெற்றி நிலைகளுக்கு என் வாழ்வை மாற்றியமைத்தவரும் திருமதி வித்யா சீனிவாசன் என்றால் மிகையாகாது.
முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒவ்வொரு ஞாயிறு இரவும் பத்தே முக்கால் முதல் பதினைந்து மணித்துளிகளுக்கு ‘மேலும் நாணயம்’ (Few Rupees More) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இரண்டாவது அலைவரிசையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியபோது,
முதலாம் நிலைச் சந்தை பற்றியும், இரண்டாம் நிலைச் சந்தை பற்றியும், பரஸ்பர நிதியம் பற்றித் தொடக்க நிலையிலிருந்து நேயர்களுக்கு விளக்கிக் காண்பித்து இத்துறையில் முன்னோடியாய் விளங்கும் பலரை அழைத்து அவர்களைத் தனித்துக் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளையும் பாங்குற நடத்திய என் இனிய நண்பர் பம்பாய்த் தமிழர் திரு.சீனிவாசன் பல ஆர்வலர்களை வென்றார்.
அவ்வரிசையில் என்னை விளம்பர வானில் ஒளிவீச வைத்த கிளியா நிறுவனத்தின் துணைத் தலைவர் செல்வி வித்யாவின் கருத்தையும், சிந்தனையையும் கொள்ளை கொண்டு தன்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அமைத்துக் கொள்வதற்கு இந்நிகழ்ச்சியே விதையூன்றியது.
வித்யாவின் தந்தை திரு சடகோபன் அவர்களின் நல்லாசியில் மிகச் சிறப்பாக வித்யா சீனிவாசனின் திருமணம் நடைபெற்றது. –
குறுந்தொகை அறிமுகம்:
நான்கடிச் சிற்றெல்லை எட்டடி பேரெல்லை கொண்டது நல்ல குறுந்தொகை. ஆனால், 307ஆம் பாடல், 391ஆம் பாடல் ஆகிய இரண்டும் ஒன்பதடிப் பேரெல்லைகளைக் கொண்டவை. இரண்டுமே தலைவி கூற்றுகள்.
401 பாடல்கள் கொண்ட குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ.
சாரல்: 2- தூறல்: 1
ஔவையார் பாடல். 23ஆம் பாடல்.
‘அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே! இன்னும் பாடுகபாட் டே அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!’
தலைவியின் தாயை நற்றாயென்பர்; தாயின் தோழியைச் செவிலித்தாயென்பர்.
கொண்ட காதல் நோயால், தலைவியோ உடல் மெலிவுற்றாள்- நலிவுற்றாள். குறிகேட்கச் செல்கின்றாள் தாய். தோழி, குறி சொல்பவளிடம் தலைவியின் தாய் கேட்குமாறு மலைவளத்தைப் பாடுமாறு சொல்வாள்.
தலைவியின் மெலிவுக்கும், நலிவுக்கும் காரணம் குறிஞ்சித் தலைவனே என்பதைக் குறிப்பாக உணர்த்தச் செய்வாள். இதற்கு ‘அறத்தொடு நிற்றல்’ என்பது பெயர். இந்த ஐந்தடிப் பாடலில், குறிசொல்பவளை மும்முறை விளிப்பதாகவும், பாடலைப் பாடவேண்டி இருமுறை வியங்கோள் வினையாகவும் அமைத்துள்ளமை, எண்ணி மகிழ்தற்குரியது.
மேலும் ஈற்றடி, முன்னரே நன்னெடுங்குன்றம் பாடிய பாடலெனவும் தெரிகின்றது.
சாரல்: 2 – தூறல்: 2
இன்னோர் ஐந்தடிப் பாடலையும் காண்போம்.
இப்பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. முன் சொன்னது போலவே பாடலில் இடம்பெறும் உவமைத் தொடராலேயே அவர் பெயர் அமைந்துள்ளது. ‘
செம்புலப் பெயல் நீரார்’ என்பதே அஃது. 40-ஆம் பாடல். ‘
யாயும் ஞாயும் யாரா கியரோ? என்தையு நுந்தையும் எம்முறை கேளிர்? யானும் நீயும் எவ்வழி யறிதும்? செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே!’
இஃது, தலைவன் கூற்றாக அமைந்த பாடல்.
‘உன்தாயும் யாரோ? என்தாயும் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவின் முறையினரோ?
அவ்வளவு ஏன்? நீயும் நானுமேகூட, எவ்வகையில் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம்? ஆனால், செம்மண் நிலத்தில் பெய்யும் மழைநீர் போல, நம்முடைய அன்புகெழுமிய இரண்டு உள்ளங்களும் ஒன்றுபட்டனவே! என்கின்றான் தலைவன்.
எங்கோ இருக்கின்ற விண்ணின் மழைத் துளியும், இங்கே இருக்கின்ற மண்ணாகிய நிலமும் இணைந்து நிறம் மாறுவதால், இரண்டறக் கலந்துவிடுகின்றன என்பது, எண்ணி மகிழக்கூடிய ஈடிலா உவமை.
ஐங்குறுநூறு அறிமுகம்:
ஐந்து + குறுமை + நூறு – ஐந்குறுநூறு, திணைக்கு நூறு குறும்பாடல்களாக, ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு குறும்பாடல்களைக் கொண்டது ஐங்குறுநூறு.
மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களை உடையது.
மருதத்திணையைப் பாடியவர் ஓரம்போகியார்;
நெய்தல் திணையைப் பாடியவர் அம்மூவனார்;
குறிஞ்சித் திணையைப் பாடியவர் கபிலர்;
பாலைத் திணையைப் பாடியவர் ஓதலாந்தையார்;
முல்லைத் திணையைப் பாடியவர் பேயனார்.
இதனைத் தொகுத்தவர், புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்;
தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணைப்பாடல்கள் ஒவ்வொன்றும், பத்துப்பத்துகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைந்த அகநூல், ‘ஐங்குறுநூறு
ஒன்றே!
சாரல்: 3 – தூறல்: 1
மருதத்திணையில் இரண்டாம் பத்தாகிய வேழப்பத்தின் 14ஆம் பாடல்-
தலைவிகூற்றாக அமைந்தது.
‘வேழம்’ என்பது, நாணல் என்றும் புல்வகை. அதைக் கொறுக்கச்சி, கொறுக்காந்தட்டை என்றும் கூறுவர்.
‘கொடிப்பூ வேழம் தீண்டி யயல வடிகொள் மாஅத்து வண்டளிர் நுடங்கும் அணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யு மின்சா யற்றே!’
தலைமகளின் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினால் உணர்ந்த தோழி,
‘அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைத்து ஆற்றாயாகின்றது என்ன?’ என்றாட்குத் தலைவி, ‘அவன் கொடியனே ஆயினும், அவன் மாப்பு, குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து ஈதலாற் காணெனச் சொல்லியது.
சாரல்: 3 – தூறல்: 2
முல்லைத் திணையின் நான்காம் பத்தாகிய புறவணிப் பத்தின் முதற்பாடல் –
தோழி கூற்றாக அமைந்தது.
சிற்றெல்லையாகிய மூன்றடிப் பாடல். ‘
நன்றே காதல் சென்ற வாறே அணிநிற வரும்பொறை மீமிசை மணிநிற வுருவின தோகையு முடைத்தே!’ ‘பிரிவுடன் பட்டும் ஆற்றயாகின்றது என்ன?
என்று வினவிய வழி, ‘அவர் போன சுரம், போகற்கரியது என்று ஆற்றேனாகின்றேன்’ என்ற தலைமகட்கு, ‘வேனிற்காலம் கழிந்தது; கார்ப்பருவத் தோற்றத்திலே பிரிந்தாராகலான், அச்சுரம் நன்று’ எனத்தோழி சொல்லி ஆற்றுவித்தது.
பதிற்றுப்பத்து அறிமுகம்:
பது+இற்று+பத்து – பதிற்றுப்பத்து. பத்து x பத்து-நூறு.
இடையிலுள்ள ‘இற்று’ என்பது சாரியை. எனவே, நூறு பாடல்களைக் கொண்டது.
பதிற்றுப்பத்து, புறத்திணைநூல். இது, சேரமன்னரை மட்டும் பாடுவது. முதல்பத்தும், இறுதிப்பத்தும் கிடைக்காமற் போயின. எட்டுப்பத்துகளையும் எட்டுப்புலவர் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் தெரியவில்லை.
எல்லாப் பாடல்களும் பாடாண் திணைப் பாடல்களே. பாடல்கள், ஐந்தடிச் சிற்றெல்லையும், ஐம்பதேழடிப் பேரெல்லையும் கொண்டவை.
சாரல்: 4-தூறல்: 1
பரணரின் ஐந்தாம் பத்தாம் பாடல். மன்னனை ‘நீடு வாழ்க! என வாழ்த்துவதாக அமைந்துள்ளது.
‘பேரெழில் வாழ்க்கை’ என்பது பாடலின் தலைப்பு.
துறை – இயன்மொழி வாழ்த்து. 18 அடிகளைக் கொண்டது. எட்டாம் பாடலாக உள்ளது. ‘
பைம்பொன் தாமரை பாணர் சூட்டி! ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி, கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்கு, கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ! ஆண்டுநீர்ப் பெற்ற தாரம், ‘ஈண்டிவர் கொள்ளாப் பாடற்கு எளிதினி னீயும் கல்லா வாய்மைய னிவனெனத் தத்தம் கைவ லிளையர் நேர்கை நிரப்ப, வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை முனைசுடு கனையெரி யெரித்தலின் பெரிதும் இதழ்கவி னழிந்த மாலையொடு சாந்தபுலர் பல்பொறி மார்ப! நின் பெயர்வா ழியரோ- நின்மலப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தீம்நீர்விழவின், பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை, மேவரு சுற்றமோ டுண்டினிது நுகரும், தீம்புன லாய மாடும், காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே!’
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர், பலபடப் பாராட்டுகிறார்.
சேரநாட்டு மக்களின் வாழ்வு, சிறந்திருப்பதாகக் கூறுகிறார். அதனை ‘பேரெழில் வாழ்க்கை என்று போற்றுகிறார்.
பாடற்பொருள்: குட்டுவன், பொற்றாமரைப் பூவினைப் பாணர்க்குச் சூட்டுகிறான். பொன்னரி மாலையை விறலியர்க்குப் பூட்டுகிறான். புகழ்பலவும் பெற்றுள்ளான்.
கடற்போரில் பெற்ற பொருட்களை, அவன் பிறந்தநாளில் புலவர்தம் பாடல்களுக்குப் பரிசளிப்பதைத் தவிர, வேறொன்றையும் அறியான்.
பகைவர் நாட்டை வென்று, தீ மூட்டியதால் கரிந்த மாலையினை அணிந்துள்ளான்.
சந்தனம் பூசிய புலர்ந்த மார்பினன். ஆறுகளில் நீர்விழாச் செய்து, புனலாடியவன். நீர்விழாவையும் வேனிற்காலத்தின் வெம்மையைப் போக்குமாறு நிகழ்த்தியவன். சோலைகளில் பேரழகு வாய்ந்த இல்வாழ்க்கையை விரும்பிச் சுற்றஞ்சூழ உண்டு வாழ்ந்தனர் குடிமக்கள். ‘
பேரெழில் வாழ்க்கையே’ அவர்தம் வாழ்க்கை. ‘உன் புகழானது காஞ்சியாற்றின் பெருந்துறையில் உள்ள மணலைக்காட்டிலும் பலவாக, உன் பெயரும் அதுவாக வாழ்வதாக!’ என்று பாடலை நிறைவு செய்கிறார் பரணர்
.வளரும்…
முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.