Videos

“மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில்.

“மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில்.

கதை சுருக்கம்:காலையில் பெரியவர் ஒருவர் நாயுடன் நடைபயிற்சி செய்யும் பொழுது, இருசக்கர வாகன ஓட்டி இடித்து தள்ளி நிற்காமல் ஓடிவிட, மயங்கி சரிகிறார் பெரியவர், அவ்வேளை அங்கு குப்பைப் பொறுக்கி பிழைக்கும் ஏழை இளைஞன் இதைக்கண்டு பதறி, தன் சட்டையைக் கழற்றி ரத்தம் துடைத்து செய்வதறியாது உதவிக்கு அழைக்கிறான். அச்சமயம் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கிறான். வாகன விபத்து என்பதனால் காவல் துறை கண்காணிப்பில். காவலர் மருத்துவமனை வந்து மருத்துவரை விசாரிக்க இளைஞன் கொண்டு சேர்த்த விவரம் அறிகிறார் கூடவே அடிபட்டவரின் செயின் காணவில்லை என குடும்பத்தார் தெரிவித்ததாக கூறுகிறார். காவலர் உடனே இளைஞனிடம் சந்தேகம் கொண்டு அடித்து துவைத்து விசாரணை செய்கிறார். அவன் எடுக்கவில்லை என்று கூறினாலும் எடுபடவில்லை. கடைசியில் செயின் தொலையவில்லை வீட்டிலேயே இருக்கிறது என்று பெரியவரின் மகள் தொலைபேசியில் கூற, இளைஞனை விடுவிக்கிறார் துளியும் குற்ற உணர்வின்றி. இடையில் போகும் போது கழிப்பறையை சுத்தம் செய்துவிட்டு போக உத்தரவிடுகிறார். தளர்ச்சியில் வெளியே வரும் போது, கையிருப்பு மருத்துவமனைக்கு அழைத்துவர செலவானதால், டீ குடிக்க கூட பண மில்லாமல் வெற்று பையை துழாவுகிறான், மீண்டும் பழையபடி குப்பை சேகரிக்கச் செல்லும் சமயம் பெரியவர் வளர்ப்பு நாய் இவனைக் கண்டதும் விசுவாசமாய் துள்ளிக்குதித்து அவனைத் தேடி வெளியே ஓடிவந்து காலருகே குழையவும்,கதவில் மாட்டியிருந்த நாய்கள் ஜாக்கிரதை அட்டை கீழே விழுவதாகவும் படம் நிறைவடைகிறது.
எளியவரிடமே தன் வலிமையைக்காட்டும் சமுதாயப்போக்கே கதையின் கரு.
நம் வீட்டிலே கூட ஒரு பொருள் காணவில்லை என்றால் சட்டென்று முதலில் சந்தேகத்திற்கு உள்ளாவது நம் வீட்டுப் பணியாளர்களாகத்தான் இருக்கும்.
தன்பங்கு நியாயத்தை கூறக்கூட இங்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பதே நிஜம்.
உருவத்தை, செய்யும் தொழிலை, படிப்பை, அந்தஸ்த்தை வைத்தே இங்கு மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள், அவ்வாறில்லாமல் இருந்தால் சந்தேகிக்கவும் தண்டிக்கவும் தயங்குவதில்லை. அவர்கள் நல்லவர்கள் என நிரூபிக்கப்பட்டாலும் மன்னிப்புக் கோர மனம் வருவதில்லை என்பதே நிஜம்.
படத்தின் ஆரம்பமே ஆம்புலன்ஸ் அலறலும், மருத்துவமனை சூழலும் பின்னே ஃப்ளாஷ்பேக்காக நடைபயிற்சி களமும்,பறவைகள் க்றீச் க்றீச் ஒலியுடனான காலைப்பொழுதும், விபத்துநிகழ்வும் படமாக்கியது சிறப்பு.
போலீஸ்காரராக நடித்தவர் நல்ல தேர்வு, உடல் மொழியிலும், அதிகார தோரணையிலும் போலீஸ்காரராகவே கண்முன். அவன் மீது தப்பில்லை என்று தெரிந்த பின்னும் வெளிக்காட்டாத அந்த ஈகோ வெளிப்பாடு எதார்த்தம்.காட்சியமைப்பும் பின்னணி இசையும் அருமை, ஐந்தறிவு நாய்க்கு இருக்கும் நன்றி உணர்வுகூட ஆறறிவு மனிதர்க்கு இல்லை என்பதனை விளக்கும் விதமாய் நாய்கள் ஜாக்கிரதை அட்டை விழுவதான காட்சிஅமைப்பு அருமை. மொத்தத்தில் “மனிதர்கள் ஜாக்கிரதை” சமுதாயத்தில் கீழ்நிலை மக்களைப்பற்றிய தவறான கண்ணோட்டத்தை பற்றியதான கசப்பான உண்மையை குறும்படமாக்கியதற்கு பாராட்டு.

About the author

Ayyasami Balasubramanian

Leave a Comment