“ஊடகவேதம்” குறும்படம், வசதியற்ற அந்தணர் நல்ல மதிப்பெண் பெற்ற தன் மகளின் மருத்துவ படிப்பின் சிபாரிசுக்காக எம். எல். ஏ இடம் செல்கிறார், அதிகார வர்க்கத்தின் அநியாயத்திற்கு பலியான அப்பாவிப்பெண் அவமானத்தில் தன்னையே மாய்த்துக் கொள்கிறாள், அதிர்ச்சியில் இவள் அம்மாவும் மரணிக்க தனிமரமாய் தேற்ற ஆளின்றி, நியாயம் கேட்க வழியின்றி போகிறார் ஏழை அந்தணர். சில வருடம் கழித்து அமைச்சராக பதவியில் எம். எல். ஏ, தந்தையின் திதிக்காக அழைக்க, சென்ற இடத்தில் ஏச்சையும் பேச்சையும் கேட்டு அவமானம் தங்காமல் தனிமையை பயன்படுத்தி பழிவாங்க திட்டமிட்டு, நிராயுதபாணியாய் நின்றபோது, ஸம்ஸ்காரம் பண்ண உதவும் தர்ப்பை புல்லால் கழுத்தை நெறித்து ஸம்ஹாரம் செய்கிறார், அங்கிருந்து தப்பித்து சமுத்திரத்தில் முங்கி பாவம் கழித்த பின்னே, நீதிபதிமுன் சரணடைகிறார்,காவல்நிலையம் செல்லும் வழியில் செய்தித்தாள்களில் கொலைவழக்கின் ஜோடனைகள் கற்பனையுடன் பரபர விற்பனையில் நடுவில் ஊடகவேதம் செய்தித்தாள் மட்டும் நடுநிலையாக, இப்படியாக நிறைவடைகிறது குறும்படம்.
இன்றைய ஊடகத்தின் கோரமுகத்தை துணிந்து உணர்த்தியதற்கு முதலில் ஒரு ஷொட்டு.அடுத்து நடிகர்கள் தேர்வும் யதார்த்த நடிப்பும் அருமை, பாத்திரங்களாக ஒன்றிய நடிப்பு. அப்பாவாக நடித்தவர் நல்ல தேர்வு. அப்பா பாத்திரத்தின் கையாளாகாத்தனமும், கொடுமை செய்தவரிடமே வேலைக்கு செல்வதும், அநியாயம் நடந்தபின்னே வராத ஆத்திரம் வருடங்கள் கழிந்து உதவியாளர்களின் ஏளன பேச்சின் பின்னே வரும் பழிதீர்க்கும் கொலை முயற்சியும்,கொலைசெய்தபின்னே வருந்துவதும், காவல் ஆட்கள் நிறைந்த இடத்திலிருந்து யாரும் அறியா வண்ணம் எளிதில் தப்பிச்செல்வது போன்றவை சற்றே நாடத்தன்மையாய் என் பார்வையில். இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் மொத்தத்தில் நல்ல கதையமைப்பும் படமாக்கும் முயற்சியும் அருமை. ஊடகங்கள் தான் மக்களிடம் உண்மையை எடுத்துச் செல்கின்றன, அவையே பரபரப்பான வியாபார உத்தியினால் உண்மைகளை திரித்து மக்களை திசை திருப்பகின்றன, நிரபராதிகள் தண்டிக்கபடுகின்றனர், ஒழிய வேண்டும் இப்படியான ஊடக ஓநாய்கள்.
உள்ளதை உள்ளபடி உரக்க சொல்ல இங்கே தேவை ஊடக வேதம் ஸ்வரம் மாறாமல், மொத்தத்தில் நல்ல முயற்சி.
கருத்து – ஸ்ரீ வி
Leave a Comment
You must be logged in to post a comment.