Spiritual

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி -018

Written by Mannai RVS
18. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி


================================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்


ஆயிரமாயிரம் கண்கள் இந்தப் பிரபஞ்சப் படைப்பின் ஒரேயொரு பிரகாசமான மையமான ஸ்ரீ மஹாஸ்வாமியினால் வசீகரிக்கப்பட்டிருந்தன. எண்ணெய் ஊற்றி எரிந்துகொண்டிருந்த அந்த இரவு விளக்கு ஸ்ரீ மஹாஸ்வாமியைக் காட்டிலும் பிரகாசமாக முயற்சித்து தோற்றது. உண்மையில் சொல்லப்போனால் அவர்தான் தன்னுடைய வெளிச்சத்தை அந்த விளக்கின் திரிக்கு இரவலாகக் கொடுத்திருக்கிறார். தலைக்கு முக்காடிட்டிருந்த அவரது காவி வஸ்திரத்தை வேகமாக அவ்வப்போது இழுத்துவிட்டுக்கொள்ளும் போது கெட்டிப்பட்ட முக்கோண விளக்கு போல ஜொலித்தார்.


அவர் மூலமாக பார்க்கும் திறன் பெற்றவர்களுடன் நானும் சேர்ந்து அவரை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவரே எல்லா சக்திகளின் தோற்றுவாய்! உலகம் சுற்றும் முனியாக இருக்கும் பொழுது எங்களை அவரது பெரும் தேஜஸினால் திகிலடையவைக்காமல் அவரது சக்தியினால் எங்களை கசக்கிவிடாமல் தன்னைத் தானே திரையிட்டுக்கொள்வார். அதை கொஞ்ச நேரத்துக்கு இங்கே விலக்கிக்கொண்டுள்ளார். குரு ஸ்தானத்தை அடைந்து ராஜாதிராஜனாக தனது கட்டளைகளை செலுத்திக்கொண்டிருக்கிறார்.


ஆயிரக்கணக்கான பார்வைகள் தன் மீது பதிந்த ஸ்ரீ மஹாஸ்வாமிகள் சில கணங்கள் அமைதியாக இருந்தார். அவரைச் சுற்றி இருந்தவர்கள் போல நானும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் மூன்று முறை தனது மெய்யான குரலில் தேனிசையாகப் பாடுவதை நான் தெளிவாகக் கேட்டேன். அப்படியான அவரது உச்சரிப்புகள் எனக்கு அவரது கண்களிலிருந்து சில சமயம் வெளிப்படும் சிறு சிறு வெளிச்ச சிதறல்கள் மற்றும் அலையலையான வெளிச்சக் கம்பிகள் போல எனக்குத் தோன்றியது.


அசைவன அசையாமல் நிற்பன என்று அங்கிருந்த எல்லாம் அதைக் கேட்டன. அவரில்லாமல், அவரது சந்நிதானமில்லாமல், அவரது சத்யவாக்கில்லாமல் இருந்தால் உருவமில்லாமல் சிதைந்து அழிந்து போயிருப்போம் என்றும் அவரது அனுக்ரஹத்தினால் மட்டுமே உயிர் பெற்றிருக்கிறோம் என்பதும் அவைகள் எல்லாவற்றிற்கும் தெரியும்.


சிறிது நேரத்திற்குப் பிறகு அவரது கட்டளைகள் எல்லோருக்கும் புரிந்துவிட்டது என்பதுபோல அவர் திருப்தியாக இருப்பது தெரிந்தது.


இருந்தாலும் அழைத்தவர்களையெல்லாம் அவர் திருப்பி அனுப்புவதற்கு முன் நிறைவான ஒரு சம்பிரதாயத்தை அவர் செய்யவேண்டும். இம்முறை அவரது உள்ளங்கைகளையும் விரல்களையும் முன்னைவிட இறுக்கமாக இணைத்துக்கொண்டார். அந்தக் கரங்களை மேலே நீட்டி வானவெளியை நோக்கி எல்லா திசைகளிலும் பெரிய பெரிய வட்டங்கள் வரைந்தார். அவரது வலதுபுற சைகைகளும் இடதுபுற சைகைகளும் ஒன்றல்ல. கைகளை அஞ்சலி பந்தம் செய்துகொண்டு நானிருக்கும் வலதுபுறம் நோக்கி நிறையநேரம் செய்தார். நான் என்று அறியப்படும் “இது”வை அவர் வரையும் வட்டங்களுக்குள் இணைப்பதே அவரது நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. இன்னமும் விடுதலையடையாமல் தேவையான சுத்தமில்லாமல் இருக்கும் இந்த உருப்படி அந்த நுட்பமான தொடர் அசைவுகளினால் கொஞ்சம் கொஞ்சமாக பற்றற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது என்று உணர்ந்தேன்.


சட்டென்று நான் அந்த சூழ்நிலையிலிருந்து பிரிக்கப்படுகிறேன் என்று தெளிவாகத் தெரிந்தது. இந்த உலகத்திலிருந்து நான் ஏதோ ஒரு மாய வாளால் அறுக்கப்பட்டு அவர் வரைந்த வட்டங்களுக்குள் தள்ளப்பட்டது போல அந்த வட்டங்களுக்குள்ளிருந்தே நான் சாட்சியங்களுடன் அதைப் பார்க்கிறேன் என்று புரிந்தது. அவர் எல்லாவற்றையும் பூர்த்தி செய்த பின்னர் நான் “நானாக” இருந்ததை விட “அவராக” ஆகிவிட்டேன் என்பதே உண்மை. தன்னாலேயே எனது இருதயத்தினுள் ஒரு வைரம் போன்றது அதன் அளவில் சுடர்விடத் துவங்கியது. அவரது திட்டங்களில் என்னைச் சேர்த்து ஒரு உறுதியான இடத்தில் என்னை நிறுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம். இப்போது இதற்கு அப்புறம் என்ன என்பதை நான் பார்க்கவேண்டும்.


May be a black-and-white image of one or more people and outdoors


அவரால் அங்கே அழைக்கப்பட்டு மௌனமாகக் காத்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத பார்வையாளர்கள் எல்லோரையும் கௌரவப்படுத்தும் வேளை வந்தது. நாலைந்து தேங்காய் உறிமட்டையில் குங்குமம், விபூதி, பல வர்ண பூவிதழ்கள், அரிசி ஆகியவை அங்கே அழைக்கப்பட்டவர்களுக்காக நிரப்பியிருந்தார். அவற்றையெல்லாம் கலக்காமல் ஒரு மழை போல அந்த குளத்திற்குள் தூவினார். அக்குளம் மரியாதையாக அதை ஏற்றுக்கொண்டது.


அனுஷ்டானம் பூர்த்தியாகப்போகிறது. ஸ்ரீ மஹாஸ்வாமி அவரது ஒளிமிகுந்த கண்களினால் என்னைத் துளைத்தார். சில சமயங்களில் அது ஒரு கருப்பு மின்னல் போலவும் சில சமயங்களில் மின்மினிப் பூச்சி போலவும் பளிச்சிட்டது. பின்னர் அவர் வடக்கு நோக்கி திரும்பினார். நான் அவருக்குப் பின்னால் இருந்தேன். அவர் தியானத்தில் ஆழ்ந்தார். சுயமாக எதுவும் செய்யமுடியாமல் இருந்த என்னுடைய உடம்பு அவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. இதுதான் கடந்த நான்கு மணி நேரமாக “நான்” என்பதைப் பற்றி நான் லயித்திருந்தேன் போலிருந்தது.


ஸ்ரீ மஹாஸ்வாமி இந்த “நான்” என்ற உணர்வை மொத்தமாக அழிப்பதில் வித்வானாக இருந்தார். இப்போது அவர் என்னுடைய ஊனில் குடிகொண்டுவிட்டார். இப்போது என்னை முற்றிலுமாக அவராக மாற்றிவிட்டார். இப்போது அவர் என்னிலும் அவருடையதுமாக இரண்டு சரீரத்திலும் வசிக்கிறார். இதன் விளைவு என்ன? நான் முற்றிலும் நேர்த்தியாக, எல்லாப் புலன்களும் அதன் உச்சபட்ச ஞானத்தை அடைந்து சந்தோஷத்தில் திளைத்திருக்கிறேன். கடைசியில் எல்லா துன்பங்களிலிருந்து விடுதலை.. விடுதலை.. விடுதலை.. அந்த ஒருவர் தாமாகவே எங்கும் வியாபித்து இருந்தார், அந்த ஒருவர் ஸ்ரீ மஹாஸ்வாமி, அந்த ஒருவரே அனைவரும். எதை எப்படி விளக்குவது?


இதன் பிறகு வெளிச்சக் கீற்றாக இருந்த “என்” இருதயம் இன்னும் சக்திவாய்ந்ததாகவும் உறுதியாகவும் ஆகி ஸ்வாமிஜி நான் என்று வித்தியாசமெல்லாம் இல்லாமல் வெளிர்நீல தூணாகி விண்ணுக்கு உயர்ந்து வார்த்தைகளால் விளக்கமுடியாத ஒளிரும் தன்மையுடன் ஜொலித்தது. வைரத் தூளானது புகையில்லாமல் வெப்பமில்லாமல் அப்படியே நெடும் தழலாக மாறியது போலிருந்தது.


இப்போது வேறெந்த சப்தமும் காதில் விழாமல் ஒரேயொரு ஒலி மட்டும் கேட்கிறது. அது கேட்கிறது என்பதை விட ஏதோ ஒரு முறையில் தொடர்ந்து ”உணர்ந்து”ம் “பார்க்க”வும் கூடியதாக இருந்தது. இதற்கு முன்னால் மானசீகமாக கடவுளின் திருநாமத்தையோ அல்லது ஓம்காரத்தையோ உச்சரித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நானும் ஜெபிக்கவில்லை சுற்றிலும் யாரும் வாயைத் திறக்கவில்லை. யார் உச்சரித்திருப்பார்கள்? அதனுள் சுயமாய் லயித்திருக்கும் இருக்கும் ஒன்று அதன் பெயரையே விவரிக்கத் தேவையில்லை… அது ஒன்றுதான் தனித்திருக்கிறது… எல்லைகளற்று….. எங்கும்…


தனக்குள் இருக்கும் ஒன்றை.. அந்த சுயத்தை.. உணர்ந்து கண்டடையும் சந்தோஷம் பேரானந்தம் எனப்படுகிறது. அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் அல்பமான சிற்றின்பங்களை விளக்குவதில் யாருக்கு மனோதிடம் இருக்கும்? மேலும் இப்படி பேரின்ப நிலையை வார்த்தைகளால் விவரிக்க யாருக்கு தைரியம் வரும்!


பழைய வாழ்வின் இறுதித் தடயங்கள், கிட்டத்தட்ட மறந்துபோன வாழ்க்கை சட்டென்று அறுபட்டு மாயமாக தயாராகும்போது…. திடீரென்று ஒரு வலி ஏற்படும்…. ஆனால் இவையெல்லாம் இந்த இருப்பு முழுமையாக இருப்பதற்காகத்தான்….


கொஞ்சம் கொஞ்சமாக அந்த எல்லையில்லாமல் நீண்டிருந்த வெளிர்நீல வைரம் போன்றது மஞ்சள் வர்ணமாகியது. இரு தேகங்களில் இருந்த ஸ்ரீ மஹாஸ்வாமியின் உருவமும் “நான்” என்ற உணர்வும் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது. பின்னர் என்னை எப்படியாவது தேற்றும் பொருட்டு தொடர்ச்சியான தெய்வ நாமாக்களும் சாந்தோக்கிய உபநிஷதத்திலிருந்து ஒரு ஸ்லோகமும் அப்போது தன்னிச்சையாக அங்கே தோன்றியது.

யோ வை பூமா தத் ஸுகம், நால்பே ஸுகமஸ்தி,
பூமைவ ஸுகம், பூமாத்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி,
பூமானம் பகவோ விஜிஜ்ஞாஸ இதி||
–சாந்தோக்கிய உபநிஷத் – 23.1

“எது அளவுகடந்ததோ அதுவே சுகம்; அல்பத்தில் சுகமில்லை. அளவு கடந்ததே (பூமா) சுகம்; அளவு கடப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்”

தொடரும்…

About the author

Mannai RVS

Leave a Comment