மதியநேரத்தில் எனக்குச் சில உடல் உபாதைகள் இருந்தது. ஆனாலும் இந்த ஏகாதசி இரவில் ஸ்ரீ மஹாஸ்வாமியின் பிரபஞ்ச பூஜையைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.
தனது ஆஸ்ரமக் குடிலுக்கு வெளியே உட்கார்ந்து பலதரப்பட்ட பார்வையாளர்களுடன் மூன்று மணிநேரங்கள் தொடர்ந்து ஏகப்பட்ட விஷயங்களை ஸ்வாமிஜி பேசி முடித்தபோது மணி இரவு 9.
எனக்குத் தெரிந்த அரிச்சுவடி தமிழ் மொழி ஞானத்தினால் நான் புரிந்துகொண்டது என்னவென்றால் ஸ்ரீ மஹாஸ்வாமி பல விஷயங்களைப் பற்றி மக்களிடம் பேசும் போது அவர் நேரடியாக சில உத்திகளைக் கையாளும்படி சொல்லிக்கொடுப்பது இல்லை. அவர் அப்படி யோசனை கூறினார் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அவர்களையும் அறியாமல் அவரது பேச்சினால் கவரப்பட்டு சொற்களுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தங்களை தாங்களாகவே எடுத்துக்கொள்கிறார்கள். இப்படியாக அவர்களுடைய கெட்ட நடத்தைகள் கூட அவரது வார்த்தைகளினால் மாறிவிடுகிறது.
நான் அவரைத் தொட்டுவிடும் அருகில் இருந்தேன். என்னுடைய மனதையும் உடம்பையும் அழுத்தும் சில வெளியுலகக் காரணிகள் எப்படி அவரது குரல் மூலம் மட்டுமே அழிந்தது என்பதை உணர்ந்தேன். நான் ஏற்றுக்கொள்ளும் யோக்யதையை வளர்த்துக்கொண்டுவிட்டேன், இன்னும் என்னால் நிறைய சங்கதிகளை ஏற்றுக்கொள்ளமுடியும் என்றாகிவிட்டால் ஸ்ரீ மஹாஸ்வாமி தயக்கமில்லாமல் பொழிய ஆரம்பிப்பார். அவர் எப்பொழுதுமே அவசரப்பட்டது கிடையாது. அதாவது எப்பொழுதுமே அவரது நேரத்தை மிகவும் சரியாகக் கவனித்து துல்லியமாக உபயோகப்படுத்துவார்.
தாமரைக்குளத்தில் பதினைந்து படிகள் விடுவிடுவென்று இறங்கினார். அவரது ஓலைப்பாய் அங்கே விரிக்கப்பட்டிருந்தது. கிழக்கிலிருக்கும் குளத்து நீரைப் பார்க்க அந்தப் பாயில் அமர்ந்தார். இரவு விளக்கொளியின் பெரிய நிழல் குளத்தில் பட்டு அவரது காவி உடலில் நெளி நெளியாக நடனமாடியது. அவரது வலதுபுறத்தில் ஐந்து மீட்டர் இடைவெளியில் கடைசிப் படியில் குளத்து நீர் காலைத் தழுவ நின்றுகொண்டிருந்தேன்.
எப்போதுமே எனக்கு எதாவது கட்டளையிட அவர் விரும்பினால் என்னை மட்டும் குறிபார்த்து மற்றவர்களை மானசீகமாக விலக்கிவிடுவார். முழுவிளக்கு வெளிச்சத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அனுஷ்டானங்கள் செய்யும் போது அவரது வலது கண் எவ்வளவு பிரகாசமாக இருந்தது என்பதை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தேன். அவரது தலை கேசமும் தாடியும் அவரது சக்தி மிகுந்த முகத்தைச் சுற்றி வெள்ளையாய் ஒரு “ஓம்” போட்டிருந்தது.
ஸ்ரீ மஹாஸ்வாமிகள் இப்போது நிமிர்ந்து அந்த குளத்தின் எதிர்திசையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அங்கே அந்த நீர்ப் பரப்பிலிருந்தோ அல்லது அக்கரையிலிருந்தோ எதோ தோன்றுவதற்கு காத்திருப்பது போலிருந்தது. ஒவ்வொரு இரவும் திரள் திரளாக வட்டமிடும் பூச்சிகள் குளக்கரையைச் சுற்றியிருந்த புதர்களில் அடங்கியது. பூச்சிகள் சாப்பிடும் தட்டான்கள் தங்களது குறுக்கும்நெடுக்குமான உலாத்தலை விட்டுவிட்டு துளிர்விடும் தாமரை இலைகளில் தஞ்சமடைந்தன. வௌவால்கள் மாமுனியின் ஆஸ்ரம முகாமிற்கு பின்னால் இருக்கும் நெடிய மரங்களிலிருக்கும் தங்கள் கூடுகளை அடைத்து “ச்சீப்..ச்சீப்” என்ற அதன் ஒலிகளை எழுப்பாமல் அமைதியடந்தன.
குளத்திலிருந்த மீன்களும் தவளைகளும் தண்ணீரில் குதிக்காமல் இருந்ததால் நீர்ப்பரப்பு அலையெழும்பாமல் அமைதியாகக் கிடந்தது. அப்போது நக்ஷத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வானத்தின் கீழே அந்தக் குளமானது பளபளக்கும் கருப்பு வண்ணக் காகிதமான ஒரு மேடை போல தரையில் தென்பட்டது. இயற்கை எதற்கோ காத்திருப்பது போலத் தெரிந்தது. அந்த இருள் கவியத் துவங்கிய மாலை நேரத்தில் குளத்தின் கரையிலிருந்த மரங்களின் உச்சியில் அரைவட்டமான கருப்பு நிற பள்ளங்களைப் பார்ப்பதற்குதான் ஒருவரின் கண்களுக்கு உற்சாகமாக இருக்கலாம். ஆனால் அந்த கண்கள், ஆயிரக்கணக்கான ஜோடிக் கண்கள், ஸ்ரீ மஹாஸ்வாமி என்னும் ஒரு வெளிச்சப் புள்ளியில் நிலைக்குத்தியிருந்தன.
தேகத்தையும் தண்டத்தையும் புனிதப்படுத்தும் விதமான பாரம்பரியச் சடங்குகளை கூரிய நோக்குடன் ஆரம்பித்தார். அதுவே புனிதம்! அதைப் புனிதப்படுத்த வேண்டுமா? சிறிது நேரம் பூஜித்தார். சட்டென்று ஸ்ரீ மஹாஸ்வாமி உள்ளங்கைகளை ஒன்றாகச் சேர்த்து விரல்களைப் பின்னி கைகளை ஆகாசத்தை நோக்கி உயரத் தூக்கினார். இது போல பத்து முறைகள் இந்து பாரம்பரியத்தில் இருக்கிறது. கைகளை ஆகாசத்துக்கும் பூமிக்குமாக உயர்த்தியும் தாழ்த்தியும் செய்துகொண்டிருக்கும் போது அந்தந்த திசையை நோக்கி அவரது தலையும் சென்றுகொண்டிருந்தது.
எல்லாத் திசைகளிலிருந்து அவர் மட்டுமே பார்த்த அவருக்குத் தெரிந்தவர்களையும், சில விருந்தாளிகளையும் அழைத்து அவர் பக்கத்தில் உட்காரச் சொல்வது போலிருக்கிறது என்று அதைக் காணும் ஒருவர் சொல்லலாம் என்று நான் நினைக்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தக் குளத்தைச் சுற்றி இருந்த பிரதேசமே நிரம்ப சக்திபெற்றது போலிருந்தது. மிகவும் நெருக்கடியாக மூச்சு விடக்கூடச் சிரமப்படும்படியாக எல்லா இடங்களிலும் “யாரோ” இருப்பது போல தோன்றியது.
இவையெல்லாம் எதற்காகச் செய்யப்பட்டது என்பதைச் சொல்ல நேரம் வந்துவிட்டது. அவரது உள்ளங்கைகளைத் திறந்து அமானுஷ்யமாக அங்குக் கூடியிருந்த எல்லோரிடமும் சைகைகள் மூலம் பேச ஆரம்பித்துவிட்டார். ஆகாயத்தில் கைகளை வட்டமிட்டுக் காட்டி ஏதோ ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போலவும் அது சௌக்கியமாக இருக்கிறதா என்பதை விஜாரிப்பது போலவும் இருந்தது. பின்னர் அதன் பக்கத்திலிருந்த அடுத்ததைப் பார்க்கப் போனார். பின்னர் மூன்றாவதிற்கு தாவினார். இப்படி நிறைய தூரம் சென்றுவிட்டு கடைசியாக திரும்பவும் முதலாவதிடம் வந்தார்.
அங்கே ஒரு வார்த்தைச் சொல்ல வேண்டியிருந்தது. இப்படியாக அவரால் மட்டுமே பார்க்க முடிந்த நூற்றுக்கணக்கான ஆன்மாக்களை அழைத்து தனது சைகைகளினால் பெரிதாகவும் விளக்கமாகவும் ஆக்கினார். அவைகளை எதற்காக அங்கே வர உத்தரவிட்டிருக்கிறார் என்பதை சொல்வது போலிருந்தது. சிலவற்றுக்குப் புரியவில்லை. அவர் திரும்பவும் செய்தார். சிலவற்றுக்கு சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டியிருந்தது. பின்னர் அவை எல்லாவற்றுக்கும் இது என்ன என்பதைப் பற்றி தெரிவிக்கப்பட்டது.
இப்போது உரையாடல் பொதுவாகிப்போனது. ஸ்ரீ மஹாஸ்வாமியின் பெரிய அழகிய விரல்கள் எல்லோரையும் ஒரு வார்த்தையுமின்றி பேசவைத்தது.
“உனக்கு?” என்று அந்த கண்ணுக்குத் தெரியாத சபையில் இன்னொரு பக்கம் திரும்பிக் கேட்கிறார். “உன்னோட முறைக்குக் காத்திரு” என்கிறார்.
“பின்னாடி இருக்கும் குழுவினரைப் பற்றி உன் கருத்து என்ன?… ஆமாம்… உன்னுடைய கேள்வியைக் கொஞ்சம் தெளிவாக்கலாமோ?”
அங்கே ஒரு சிம்பொனியின் ஆர்கெஸ்ட்ராவை அவருக்கு மட்டுமே தெரிந்த இசையமைப்பில் தனது விரலசைவுகளால் நடத்திக்கொண்டிருப்பது போலிருந்தது. இறுதியாக ஓங்கி ஒலிக்கும் ஒரு நிறைவான இசைக்கு தயாராகிக்கொண்டிருந்தார்.
இப்போது ஸ்ரீ மஹாஸ்வாமி திடீரென்று கட்டளைகள் பிறப்பிக்க ஆரம்பித்தார். மிகவும் வேகமான கை அசைவுகளின் மூலம் எல்லாவற்றையும் கவர்ந்து கொள்வது போல இருந்தது. அவர் பிரார்த்திப்பதின் சைகைகளாக அவை அறியப்பட்டது. அவர் கண்களுக்கு மட்டுமே புலப்பட்ட ஒரு பொருளை, நிஜத்தில் அது இருக்கிறதா என்ற கேள்விக்கே இடமில்லை, பிடிப்பது போன்ற சைகைகள். அவரது கரங்களை பல இடங்களை நோக்கி விரித்து நீட்டிய விரல்களை அங்குமிங்கும் காட்டி மௌனமான விளக்கங்களை அளித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது தெளிவு வேண்டுபவர்களுக்காக திருப்தியடைந்தது போல சில சைகைகளைக் காட்டினார்.
இப்படி அவரது மெல்லிய விரல்கள் மூலமாகக் காட்டப்படும் சைகைள் சத்தமில்லாத இடிமின்னல் போல எனக்குத் தோன்றியது. அவரது வெள்ளையான உள்ளங்கைகளிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தை எதிரில் இயற்கையாகச் சூழ்ந்திருந்த மரங்களுக்கு மேலே நிழல்போலே கருமையாக்கப்பட்டு நட்சத்திரம் வரை நீண்ட அந்த ஆகாயவெளி பிரசாதமாகப் பெற்றுக்கொண்டது.
Leave a Comment
You must be logged in to post a comment.