“பியரி டெய்ல்ஹார்ட் டி சார்டின் பிரசித்தி பெற்ற தொல் உயிரியல் (palaeontologist) வல்லுநர். 1950 இறந்துவிட்டார். அவர் தான் பின்பற்றிய அடிப்படைத் தகவல்களை அலசி ஆராய்ந்தார். இந்திய தத்துவவியலை அவர் படிக்காதவராக இருந்தும் அவரது முடிவுகள் வேதாந்த தத்துவங்களுக்கு அருகில் ஒப்புநோக்கும்படி இருந்தது. கிருஸ்துவ திருச்சபையின் தந்தையாக இருந்த அவர் கிருஸ்துமதத்தை பின்பற்றுபவர். இவரது வாழ்க்கையும் பணிகளும் என்னுடைய ஆராய்ச்சிக்கான நல்வித்து. அவரது ஆன்மிக மற்றும் இயற்கை அறிவியல் மீதான விஞ்ஞான ஆராய்ச்சிகளும் ஒன்றுக்கொன்று கைக்கோர்த்துச் செல்லக்கூடியது”
ஸ்ரீ மஹாஸ்வாமி என்னுடைய மெட்ராஸ் ஸ்நேகிதர் மொழிபெயர்த்ததைக் கூர்ந்து கவனித்தார். அவர் திரும்பத் திரும்ப சில வாக்கியங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டார். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவர்..
நேராக இலக்கில் அடித்தது போன்ற பளிச் கேள்வி. இந்த விஞ்ஞானியுடன் என்னை நான் ஒப்புமைப்படுத்திக்கொண்டது உண்மைதான். ஆன்மிக வாழ்க்கையை நடைமுறையில் பேணிக்கொண்டிருக்கும் போது தத்துவவாதியானவர். இப்போது நான் பொதுவெளியில் அதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
“ஆமாம். இந்தப் பிரபஞ்சத்தின் உருவாக்கமும் மனிதசமுதாயத்தின் தோற்றம் ஆகியவற்றை விளக்குவதற்கு ஒரு சமயம்சார்ந்த ஆளாக இருந்த அவரது வழியில் சில காலம் ஈர்க்கப்பட்டேன்.”
“இருந்தாலும் இப்போது ஆன்மிக ஆராய்ச்சியே என்னிடம் கையோங்கி இருக்கிறது. இந்த சமயத்தில் ஒரு ஞானகுருதான் என்னை வழிநடத்த முடியும்”
ஸ்ரீ மஹாஸ்வாமி அமைதியாக இருந்தார். அதுவரை இரகசியமாக வைத்திருந்த எனது கடைசி எண்ணத்தையும் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
“இந்தியாவிற்கு நான் வந்ததே என்னுடைய வழிகாட்டியைக் கண்டடைவதற்குதான்……” என்று இழுத்தபோது ஒரு நிம்மதிப் பெருமூச்சு என்னுள் எழுந்தது.
“நான் நிறைய பிரசித்தி பெற்ற இடங்களுக்குச் சென்றேன். அந்த இடங்களின் புனிதத்தில் நெக்குருகினேன்” என்பதை மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டேன். என்னுடைய மதிப்பீடுகளைப் பற்றி பெரிதாக பிரஸ்தாபிக்கவில்லை.
நான் ஸ்ரீ மஹாஸ்வாமியை இங்கே சந்திப்பதற்கு முன்னால் என்னுடைய தேடல் பயணங்களில் இங்கே அங்கே என்று ஒரு பெரிய குருவின் சிஷ்யர்களைக் கடந்திருக்கிறேன். எனக்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகமோ? அதிதீவிரமாகத் தேடவில்லையோ? எனக்கான குருவைப் பற்றி இப்போது மிகவும் அழுத்தம் தரக்கூடாது என்று முடிவு செய்தேன். நான் இந்தியாவிற்கு வந்ததே இது பற்றி நிறைய படிக்க வேண்டும் என்பதற்குதான். தேவைப்பட்டால் இந்தியாவிலேயே தங்கிவிடுவதற்கும் சித்தமாயிருந்தேன். எனக்கு வேறு எங்கும் தொடர்புகள் இல்லை. இங்கு நிலவும் பொதுவான அமைதிததும்பும் சூழல் எனக்குப் பிடித்திருந்தது. எனக்கு ஸ்ரீ மஹாஸ்வாமிகளிடம் பிரத்யேக நேரம் இன்னும் இருப்பதாகப் பட்டது. என்னைப் பற்றிய சுயவிவரங்களை பகிர்ந்துகொண்டேன்.
“சுத்த சைவம்…” என்று என்னுடைய மெட்ராஸ் நண்பர் இடையில் புகுந்தார். “அவரே தனியா சமைச்சுச் சாப்பிடறார்…” என்ற கூடுதல் விவரத்தையும் ஸ்ரீ மஹாஸ்வாமிக்குக் கொடுத்தார்.
ஸ்ரீ மஹாஸ்வாமியின் முகம் சிரிப்பில் தாமரை போல மலர்ந்தது. அங்கே குழுமியிருந்த பண்டிதர்களும் எனக்குப் பின்னால் சுற்றி நின்றிருந்த தொழிலாளர்களும் என்னைப் பற்றிய இந்த விவரத்தில் ஒருவரோடு ஒருவர் முகம்பார்த்து ஆச்சரியமடைந்தார்கள். ஒரு ஐரோப்பியர் ராமாயணத்தை பண்டைய அயல்மொழிக்கு மொழிபெயர்த்திருக்கிறார்; இந்தியாவின் ஆன்மிக கலாசாரத்தில் தீவிர பற்றுடையவராக இருக்கிறார்; பிரம்மச்சாரி; சைவராகவும் அவரே தனியாகச் சமைத்துச் சாப்பிடுபவராகவும் இருக்கிறார் – இதுபோல அன்றாடம் நாம் எங்கும் கண்டதில்லையே! என்று சிறு சிரிப்பொலிகளுடன் ஆச்சரியமாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். சிலர் எக்கிப் பார்த்தார்கள். சிலர் முன்னால் குனிந்து என்னை நன்றாக ஒருமுறைப் பார்த்தார்கள். பின்னால் இருந்தவர்கள் தங்கள் நண்பர்களைக் கூப்பிட்டு ஒரு அதிசயப் பறவை போல என்னைச் சுட்டிக்காட்டி அவர்கள் அங்கே கேட்ட விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
ஸ்ரீ மஹாஸ்வாமி மீண்டும் ஒரு முறை என்னை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். நானும் அந்தப் பார்வையை தைரியமாக எதிர்கொண்டேன். ஆனால் அது மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் ஈடுகொடுக்க முடியாமல் என்னுடைய பார்வையை தழைத்துக்கொண்டேன். அவர் மீண்டும் ஒருமுறை தனது வலதுகையைத் தூக்கி என்னை ஆசீர்வதித்தார். என்னை ஆமோதிப்பது போல தலையை அசைத்து உட்காரும்படி சைகை செய்தார். அவர் அடுத்த அடுத்த பக்தர்களைப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு இடதுபுறத்தில் நின்றிருந்த என்னுடைய மெட்ராஸ் நண்பர்களிடம் தமிழில் பேச ஆரம்பித்தார். இந்த நகரத்தில் நடக்கும் ஒவ்வொரு கலாசார நிகழ்வையும் அவர் அறிந்திருந்தார்.
நான் மீண்டும் என்னுடைய இருதயத்தில் ஏற்றிவைத்திருந்த ஸ்ரீ மஹாஸ்வாமியின் சிந்தனையில் லயிக்க ஆரம்பித்தேன்.
Leave a Comment
You must be logged in to post a comment.