இந்தியாவுக்கு எப்போது வந்தாய்? என்று என்னைக் கேட்ட ஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு நான்……
“16 டிசம்பர் 1967ம் வருஷம் விடியற்காலை ஐந்து மணி வாக்கில் பாம்பே சாந்தா க்ரூஸ் விமானநிலையத்தினில் ‘இந்த வாழ்க்கை’க்கு (In this life…) வந்தேன்” என்று பளிச்சென்று சொன்னேன். நான் வந்திறங்கிய போது பருவமே இல்லாமல் மழை பொழிந்தது என்பதைச் சொல்லவில்லை.
ஸ்ரீ மஹாஸ்வாமி கூர்ந்து கவனித்துவிட்டு ஆங்கிலத்தில் “In this life…” என்பதை சொல்லிப் பார்த்துக்கொண்டார். அதுவரை மும்முரமாக உம்மென்று இருந்தவரின் முகத்தினை இவ்வார்த்தைகள் புன்னகையை மூட்டிவிட்டன. சிரித்தார். எங்கள் குழுவில் இருந்தவர்களும் “In this life…” என்று சொல்லிச் சிரித்தார்கள். என்னுடைய வார்த்தைகளை தெலுங்கில் மொழிபெயர்த்து தங்கள் மனைவியிடம் சொன்னார்கள்.
எனக்குப் பின்னால் அந்த நிறுவனத்தின் பணியாளர்களில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இந்த வார்த்தைகளை தெலுங்காக்கம் செய்து ஆங்கிலம் தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய முதல் பதில் அவருடைய கவனத்தை ஈர்த்துவிட்டது. மஹாஸ்வாமியுடன் பேசுவதற்கான நுழைவுச்சீட்டு கிடைத்துவிட்டது. ஆனால் நான் அமைதியாக இருந்தேன். எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீ மஹாஸ்வாமி கேள்விக்கலையின் மாமன்னர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
“எனக்கு எப்போதுமே இந்தியாமீதும் அதன் கலாசாரம் மீதும் ஆர்வம் உண்டு. பதினேழு வயதில் ரொமேனியாவில் இருந்த போது பால் பிரண்டன் எழுதிய A Search in Secret India புத்தகத்தைப் படித்தவுடன் ஆசை இன்னும் அதிகமானது”
“ஆமாம். மூன்று முறை படித்தேன். செங்கல்பட்டில் பால் பிரண்டனுக்கு ஸ்ரீ மஹாஸ்வாமி தரிசனம் அளித்ததையும் பின்னர் பிரண்டனுக்கு திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மஹரிஷியின் மீது பக்தி மேலிட்டதையும் படித்து அசந்துபோனேன்”
“அப்போதே உடனே இந்தியா வரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உலகயுத்தம் என்னை கட்டிப்போட்டுவிட்டது. இந்த நாளுக்காக இருபத்தேழு வருஷங்கள் காத்திருக்கவேண்டியதாயிற்று”
”உயர்நிலைப் பள்ளியில் மருத்துவம் படித்தேன். பின்னர் புச்சாரெஸ்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றேன். நாற்பது வயது வரை மருத்துவராக இருந்தேன். பின்னர் திடீரென்று எதிர்பாராதவிதமாக இந்திய கலாசாராத்தைப் பற்றி ஆர்வத்துடன் எழுத ஆரம்பித்துவிட்டேன்”
நான் எழுதிய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், புத்தகங்கள் ஆகியவைகளைப் பட்டியலிட்டேன். சில பிரசுரமானவை. சில யுத்தத்தினால் அச்சாகாமல் இருந்தன. பின்னர் என்னுடைய முதல் புத்தகத்தைப் பற்றிப் பேசினேன். இந்திய இலக்கியங்களைப் பற்றிய பெரும் ரோமானியக் கவிஞனின் தொகுப்பைப் பற்றியப் புத்தகம் அது. அது அச்சில் இருப்பதாகத் தெரிவித்தேன். சர்வாதிகாரத்தினால் எல்லைகளில் பலத்த பந்தோபஸ்த்து போடப்பட்டிருந்த ரோமானியாவிலிருந்து கட்டுக்காவல்களை மீறி ஒரு சிறிய ப்ரௌன் கலர் புத்தகத்தைக் கடத்திக் கையில் வைத்திருந்தேன்.
படிக்கட்டுகளின் அடியில் வைத்திருந்த மரத் தட்டில் அதை மரியாதையாக வைத்தேன். சந்நியாசியின் கரங்களுக்கு எதையும் யாரும் நேரடியாகத் தரக்கூடாது என்பதினால் யாரோ ஒருவர் அந்த மரத்தட்டை ஸ்ரீ மஹாஸ்வாமி புத்தகத்தை எடுத்துக்கொள்ள தோதாக மேலே உயர்த்திக்காட்டினார். கையில் எடுத்து கண்களுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டு சத்தமாகப் படித்தார்.
இரண்டாயிரம் வருடத்து குருபரம்பரையாக வந்த ஒரு மடத்தின் பீடாதிபதியினால் முதன் முறையாக ரோமேனியன் மொழி படிக்கப்பட்டது என்பதை சர்வ நிச்சயமாகச் சொல்லலாம். “Sanskrit” என்ற வார்த்தையோடு சேர்த்து முக்கியமான ரோமேனிய கவிஞன் பெயரையும் அவர் படித்ததில் நான் மிக்க சந்தோஷமடைந்தேன். மெட்ராஸிலிருந்து வந்த என் நண்பர்களும் இதில் திருப்தியடைந்தார்கள். இத்தனைக்கும் ஸ்ரீ மஹாஸ்வாமிக்கு இந்தப் புத்தகம் பரிசளிக்கப்போகிறேன் என்று அவர்களுக்கு நான் முன்னரே தெரிவிக்கவில்லை. அறிவார்ந்த பண்டிதர்களும் தொழிலாளர்களும் குழுமியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் பெருமையாக இதைப் பேசிக்கொண்டார்கள்.
“ஆமாம். ஃப்ரெஞ்ச் மற்றும் ரோமேனியன் மொழிகள் லத்தீனிலிருந்து பிறந்தவை. லத்தீன் மொழி கூட இந்திய-ஐரோப்பிய சங்கம மொழிதான். சம்ஸ்க்ருதத்துக்கு நெருக்கமான மொழி”
சம்ஸ்க்ருதத்துக்கும் பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளுக்கு பொதுவாக இருக்கும் சில மொழியியல் ஒற்றுமைகளை உதாரணமாகச் சுட்டிக்காட்டினேன்.
பின்னர் கடைசிப் பக்கத்திலிருந்து அந்தப் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தார். பொருளடக்க பக்கத்தினை கண்களுக்கு அருகில் கொண்டு வந்து ரோமேனியன் மொழியினை வரி வரியாக பொறுமையாக பல நிமிஷங்கள் படித்தார். ராமாயணம் பற்றி இருந்ததைப் பார்த்துவிட்ட் அதுபற்றிப் பேசினார். உயர்ந்த இராமாயண காவியமானது சமஸ்க்ருதத்திலிருந்து இந்திய துணைக்கண்டத்தின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
“இந்திய கலாசாரத்தைப் படிக்கும் மக்களிடையே ஆர்வம் வளர்கிறது. இந்தியாவிற்குப் புறப்படுவதற்கு முன்னால் நானே சி. ராஜகோபாலாசாரியார் எழுதின இராமாயணத்தை ஆங்கிலத்திலிருந்து ரோமேனியன் மொழிக்கு மொழியாக்கம் செய்தேன். இப்போதுதான் அது ரொமேனியாவில் வெளியாகியிருக்கிறது. என் கை வசம் பிரதிகள் இல்லை” என்று கைகளைப் பிசைந்தேன்.
”ராமாயணம்” என்ற புனித வார்த்தை அங்கே இருந்த பண்டிதர்கள் மற்றும் குழுமியிருந்த தொழிலாளர்களிடையேயும் ஆச்சரியத்தை உண்டுபண்ணியிருந்தது. சிலர் இதைப் பற்றியக் கருத்துக்களை குசுகுசுவென்று தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருந்தார்கள். மெட்ராஸிலிருந்து என்னுடன் வந்த நண்பர்கள் இதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் “ஒரு சாதாரண ஆளை நாம அறிமுகப்படுத்தி வைக்கலை…” என்று மிகவும் மன திருப்தியடைந்திருந்தார்கள்.
நான் அமைதியாக எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு தனியனாக இருந்தேன். அதுதான் எனக்கு பொருத்தமாகவும் இருந்தது. ஸ்ரீ மஹாஸ்வாமி என்னுடைய பேச்சை பாராட்டினார்கள். இப்படி பெருமையாகப் பேசுவது என்னை முகஸ்துதி செய்யவா? இல்லை. அவர் அதற்கு மேலும் என்னிடம் எதிர்பார்த்தார்./p>
“சமகால பிரஞ்ச்சு சிந்தனாவாதியான பியரி டெயில்ஹார்ட் டி சார்டின் (Pierre Teilhard de Chardin) என்பவரது தத்துவங்களை வேதாந்தத்தின் கண்கொண்டு ஆராய்கிறேன்” என்றேன்.
Leave a Comment
You must be logged in to post a comment.