Personal Blogging

கதை சொல்லுங்கள்-சீடர்கள்

ஐயன்மீர் ……எங்கள் குருவான பகவத் ராமாநுஜருக்கு முக்தி உண்டா? இல்லையா? என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்!” என்ற சீடர்கள் – விளக்கும் எளிய கதை
மேலக்கோட்டையில், பகவத் ராமாநுஜர் வாழ்ந்த காலத்தில் ஏழிசை எம்பிரான் என்ற அரையர் வாழ்ந்து வந்தார்.
அவர் ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடினால், மேலக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் செல்வப்பிள்ளை
என்றழைக்கப்படும் பகவான் எம்பெருமான் நடனமாடுவான்.
இறைவனுடன் நேருக்கு நேர் பேசக் கூடியவராக அந்த அரையர் திகழ்ந்தார். தன் பாட்டுக்கு இறைவனே நடனமாடுகிறான் என்ற ஆணவம் அந்த அரையருக்கு வந்துவிட்டது.
அதனால் பகவத் ராமாநுஜரயே பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தினார். இறைவனிடமே பேசக்கூடிய பேறு பெற்றவர், நம்மை அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்வதே சிறந்தது என்றெண்ணிப் பொறுமை காத்தார் பகவத் ராமாநுஜர்.
எனினும் ராமாநுஜரின் சீடர்களான கூரத்தாழ்வான், நடாதூராழ்வான், முதலியாண்டான் ஆகியோர் தங்கள் குருவை
ஏழிசை எம்பிரான் அரையர் அலட்சியப்படுத்துவதைக் கண்டு மிகவும் வருந்தினார்கள்.
அரையருக்குப் பாடம் புகட்ட வேண்டுமென முடிவு செய்தார்கள்.
அவர்கள் அந்த அரையரிடம் சென்று, “எங்களுக்கு ஒரு சந்தேகம். பகவான் செல்வப்பிள்ளையிடம் நீங்கள் அதை விண்ணப்பித்து
விடைகேட்க முடியுமா?” என்று கேட்டார்கள். “சொல்லுங்கள்!” என்றார் அரையர்.
ஐயன்மீர் ……“எங்கள் குருவான பகவத் ராமாநுஜருக்கு முக்தி உண்டா? இல்லையா? என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்!” என்றார்கள்.
“நாளை கேட்டுச் சொல்கிறேன்!” என்றார்.
மறுநாள் ஆழ்வார் பாடல்களைப் பாடி இறைவனை மகிழ்வித்துவிட்டு, ராமாநுஜரின் சீடர்கள் உள்ளத்தில் உள்ள சந்தேகத்தைச்
செல்வப்பிள்ளையிடம் விண்ணப்பித்தார் ஏழிசை எம்பிரான்.
அதற்கு எம்பெருமான், “ராமாநுஜர் மட்டுமல்ல, அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் முக்தியுண்டு. இதில் சந்தேகமே இல்லை!” என்றான்.
அதை அப்படியே ராமாநுஜரின் சீடர்களிடம் கூறினார் அரையர்.
உடனே சீடர்கள், “அரையரே! உங்களுக்கு முக்தி உண்டா இல்லையா என்று கேட்டீர்களா?” என்று வினவினார்கள்.
அரையர், “எனக்கு நிச்சயமாக முக்தியுண்டு! இதிலென்ன சந்தேகம்?” என்று கேட்டார்.
“இருந்தாலும் ஒருமுறை பெருமாளிடம் கேட்டுப் பாருங்களேன்!” என்றார்கள்.
அடுத்த நாள் செல்வப்பிள்ளையிடம், “எனக்கு நீ நிச்சயமாக முக்தியளிப்பாய் என்று எனக்கே தெரியும்.
இருந்தாலும் ராமாநுஜரின் சீடர்கள் உன்னிடம் கேட்கச் சொன்னார்கள். எனக்கு முக்தி உண்டல்லவா?” என்று கேட்டார் அரையர்.
“இதற்கான விடையைத் தான் நேற்றே சொல்லி விட்டேனே!” என்றான் எம்பெருமான். “என்ன?” என்று வியப்புடன் கேட்டார் அரையர்.
“ராமாநுஜருக்கும் அவருடன் தொடர்புடையவருக்கும் தான் முக்தியளிப்பேன். அந்த ராமாநுஜரையே இகழும் உங்களுக்கு முக்தி கிடையாது!” என்றான்.
“என்ன இப்படிச் சொல்கிறாய்? இத்தனை நாள் உனக்காக நான் பாட்டு பாடினேனே!” என்று கேட்டார் அரையர்.“அதற்காகத் தான் நானும் ஆட்டம் ஆடிவிட்டேனே! நீங்கள் பாட்டு பாடியதற்காக நான் முக்தியளிக்க மாட்டேன்.
ராமாநுஜர் பரிந்துரைத்தால் மட்டுமே நான் முக்தி வழங்குவேன்!” என்றான் எம்பெருமான்.தான் பாடிய பாட்டினால் மட்டுமே
முக்தி கிட்டிவிடும் என்று எண்ணியிருந்த அந்த அரையர், குருவின் அருளால் மட்டுமே முக்தி கிட்டும் என்பதை உணர்ந்து
ராமாநுஜருக்குச் சீடராகி, அவருடைய அருளால் முக்தியும் பெற்றார்.
ஏழிசை எம்பிரானுக்கு முக்தி அடைய வழிகாட்டும் வழிகாட்டியாகச் செல்வப்பிள்ளை விளங்கினான்.
இப்படி முக்தியடைவதற்கான சரியான வழியைக் காட்டி அவ்வழியில் நம்மை இயக்கி வழி நடத்திச் செல்வதால்
‘யோகவிதாம் நேதா’ என்று எம்பெருமான் அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பத்தொன்பதாவது திருநாமம்.
யோகவிதாம் நேதாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு எம்பெருமானே வழிகாட்டியாக இருந்து
நல்வழியில் அவர்களை நடத்திச் செல்வான்.

About the author

Palakarai Sakthivel

Leave a Comment