பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாக போற்றப்படுகிறது.. ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து, புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.
புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.
மஹாபிரசாதம் கிடைக்கும் இடத்துக்குச் சென்றேன் – ’ஆனந்த பஜார்’ என்று பெயர். பிரசாதத்தை உண்ணும் முன் அதை எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்க்கலாம்
உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பது தான். ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3 x 4 அளவில் 752 மண் அடுப்புகள் கொண்டது.
விரகு, மண் சட்டி பானைகள், எந்த விதமான யந்திரமோ உலோகமோ கிடையாது ! கிணற்றிலிருந்து நீரை இராட்டினம் இல்லாமல் கயிற்றால் 30 பேர் இடைவிடாமல் இழுத்துக் கொட்டுகிறார்கள்.முழுவதும் ஈக்கோ ஃபிரண்டிலி! மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற காய்கறிகள் உபயோகிப்பதில்லை.
சுமார் 400 பேர் உணவைச் சமைக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக இன்னொரு 400 பேர் வேலை செய்கிறார்கள். இதைத் தவிர . காய்கறி திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளார்கள். தினமும் 7200 கிலோ பிரசாதம் தயாரிக்கிறார்கள். விஷேச நாட்களில் 9200 கிலோ!. எப்போது சென்றாலும் 1000 பேர் சுலபமாக உணவு அருந்தலாம்.
எல்லாப் பிரசாதமும் பானையில் ஏறப்பட்டு மூங்கில் கம்புகளில் கட்டி சுமந்து சென்று பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது ! இதற்கு மட்டும் 60 பேர் வேலை செய்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் செய்யப்படுகிறது. 9 சித்ரான்னம், 14 வகை கறியமுது, 9 வகை பால் பாயசம், 11 வகை இனிப்பு. 13 வகை திருப்பணியாரங்கள்..
புரியில் பிரசாதத்தை உண்ண சில முறைகள் இருக்கிறது. பிரசாதத்தைப் பூமியில் அமர்ந்து தான் உண்ண வேண்டும். மேசை நாற்காலி கூடாது. விநியோகம் செய்ய கரண்டி முதலானவற்றை உபயோகப்படுத்தக்கூடாது. உடைந்த சட்டிப்பானை சில்லு, அல்லது இலையை மடித்து வைத்துத் தான் பரிமாறுவார்கள்.
சாப்பிடும் போது ஜகன்ந்நாதரை நினைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்த பின் வாய் கொப்பளிக்கும் போது முதல் வாய் தண்ணீரை துப்பாமல் விழுங்க வேண்டும். சாப்பிட்ட இடத்தை கைகளால் தான் சுத்தம் செய்ய வேண்டும். அந்த ஊரில் கல்யாணம், விழா என்றால் தனியாக சமையல் கிடையாது இங்கே தான் சாப்பாடு.
மத்தியானம் இந்த மஹா பிரசாதத்தை ஒரு கை பார்ப்பது என்று முடிவு செய்து கிளம்பினேன். ஒரு கை போதாது என்று கூட ஐந்து பேரை அழைத்துக்கொண்டு பத்து கைகளாகச் சென்றேன்.
முதலில் கண்ணில் பட்டது பாதுஷா மாதிரி ஒரு பிரசாதம். சுற்றி ஈக்கள் இல்லாமல் தேனிக்கள் ! சுட சுட இலையில் கொடுத்தார்கள்.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே பார்த்த போது பக்கத்துக் கடையில் திரட்டுப்பால் மாதிரி இருக்க இதை வேகமாக முடித்துவிட்டு அங்கே சென்றேன். அதையும் ஒரு கை பார்த்துவிட்டு பால் மாதிரி ஏதோ இருக்க ”என்ன ?” என்றேன். ஏதோ கீர் என்று காதில் விழ டாப் கீயரில் அதை முடித்துவிட்டு பக்கத்து கடைக்காரர் வேடிக்கை பார்க்க அவர் கோவித்துக்கொள்ள போகிறாரே என்று அவரிடத்தில் கோதுமை போளியை கொதறிவிட்டு மூச்சு விடுவதற்குள் இந்தாங்க என்று கோதுமை லட்டு டேஸ்டுக்கு கொடுத்தார். எல்லாம் வெறும் ஸ்வீட்டாக இருக்கிறதே என்று காரமாக தேட ஓரமாக ஒரு கடையில் பொங்கல் மாதிரி ஒன்று இருக்க அதைக் கேட்ட போது ஒரு காலி சட்டி பானையை உடைத்து அதன் சில்லில் பொங்கல் மற்றும் தால் (இஞ்சி தூக்கலாக) பரிமாறப்பட்டது. கை சுத்தம் செய்ய போகும் வழியில் தயிர்ச்சாதம் கண்ணில் பட ’penultimate’டாக சாப்பிட்டு வைத்தேன். Penultimate ஆனால் utimate! கடைசியாக மோர் இருக்க அதைக் குடித்த போது அது உள்ளே என்ன போடுகிறார்கள் என்று யோசிக்க வைத்தது. நாக்கை வாயினுள் தடவி, சீரகம் மற்றும் என்ன மசாலா பொடிகள் உள்ளே இருக்கு என்று மூளை வேலை செய்ய … முதல் முறை கண்ணன் மீது பொறாமை ஏற்பட்டது !
பெருமாளின் கல்யாண குணங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அதை இந்த மஹா பிரசாத சந்தையில் அனுவவித்தேன்.
சுஜாதா தேசிகன்
31-8-2021
ஸ்ரீஜெயந்தி
Leave a Comment
You must be logged in to post a comment.