Spiritual

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 019

Written by Mannai RVS

19. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
===============================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்

அதுவரை கண்கள் மூடி விறைப்பாக நின்ற என் தேகம் லேசாக தள்ளாடியது. அங்கங்கள் மெதுவாக இப்படியும் அப்படியும் அசைந்தன. மற்றபடி தேகத்தின் ஏனைய இயக்கங்கள் நின்றுபோய் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தன. ஆரஞ்சு நிறத்தில் ஆடாமல் நிற்கும் பிரமிட் விளக்கு போல் உட்கார்ந்திருந்த ஸ்ரீ மஹாஸ்வாமியின் திருமேனியிலிருந்து மீண்டும் “நான்” என்பது என்னால் உணரப்பட்டது. பெரிய விளக்கிலிருந்து தன்னை மூட்டிக்கொள்வது போல அவரது ஆடையில் அந்த இரவு விளக்கின் சிறிய தீபவொளி முட்டி ஆடியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஸ்ரீ மஹாஸ்வாமி எழுந்து நின்றார். தீர்க்கமான முகத்தோடு தனது தண்டத்தை இரு கைகளாலும் எடுத்துக்கொண்டு திரும்பவும் கிழக்கைப் பார்த்தார். இரவு கவிந்துவிட்டதால் கண்ணுக்குத் தெரியாத கூரைகளின் மீதேறி நக்ஷத்திரங்களை நோக்கி சென்றிருந்தவைகளை ஆராதிக்கத் துவங்கினார். தன்னுடைய கட்டளைகளை வட்டங்கள் மற்றும் சில விசித்திர வடிவங்களினால் பரந்து விரிந்த வெளியின் பத்து திசைகளிலும் காட்டினார். பின்னர் தனது இருகரங்களையும் உயரே தூக்கி பெரும் விடைகொடுக்கும் சைகளைகளை தன் சிரசுக்கு முன்னால் காட்டினார்.


அந்த சமயத்தில் நான் எதையும் கேட்கவில்லை. ஒன்றையும் பார்க்கவில்லை. ஆனால் அதுவரை செங்குத்தாக ஆடாமல் எரிந்துகொண்டிருந்த அந்த இரவு விளக்கின் தீபங்கள் திரியின் நுனிவரை படபடவென்று அடித்துக்கொண்டு அந்த நீர்த்தேக்கத்தின் படிகளையும் மேற்கு திசையையும் நோக்கி தனது தலையைக் குனிந்து மரியாதை செய்தது. அந்தக் குளத்தின் அலையடிக்கும் வேகத்தில் அது தள்ளப்பட்டது போலிருந்தது. அதுவரை கலங்காமல் அமைதியாய் இருந்த அந்த நீரின் மேற்புறத்தில் வட்டம் வட்டமாக அலைகள் தோன்றின.


சில நிமிஷங்கள் அங்கேயே உறைந்து போய் நின்றிருந்த எனது இதயம் முழுக்க நீல வர்ண மத்தாப்புகள் பூப்பூவாய்த் தெறித்தன. அங்கங்களின் இத்தகையப் போக்கினை ஆத்மா மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. உள்ளே அதன் அகவிளக்கை பார்ப்பதற்கு பதிலாக அது தனது சக்திகளினால் வெளியுலகைப் பார்க்கத் திரிந்தது. அது தன்னை புலன்களில் ஊற்றிக்கொண்டு வெளியே பறந்தது. சாதாரண மனிதர்களின் பாஷையில் நான் மீண்டும் வாழ ஆரம்பித்தேன். முனிவர்கள் அல்லது துறவிகளின் மொழியில் நான் இறக்க ஆரம்பித்தேன்…..


ஸ்ரீ மஹாஸ்வாமிக்கு எனக்கு என்ன நடந்தது என்பது புரிந்துவிட்டது. அவர் மேலும் இந்த பக்தனின் நரம்பு மண்டலத்தை, இந்த சதைப் பிண்டத்தின் இதயத்தை, திசுக்களால் ஆன அங்கங்களை மற்றும் சுத்தமாகவும் உறுதியாகவும் ஆக்கப்பட வேண்டிய எண்ணங்களையும் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். இல்லையென்றால் அவரது உருகிய தங்கம் போன்ற ஆசீர்வாதமானது நம்மைப் போன்ற இளகிய தேக அமைப்புகளைக் கொண்டவர்களை நொறுக்கிச் சிதைத்துவிடும்.


அடிக்கடி அவர் இப்படி ரக்ஷகராக செயல்படுகிறார். அதனால்தான் அவர் முன்னால் நான் எப்போதுமே தலைவலி அல்லது மயக்கம் என்றெல்லாம் “சாதாரண நிலை” என்றழைக்கப்படும் ஸ்திதிக்கு வருவதே இல்லை. மனதின் தேவையற்ற அதிகப்படியான செயல்கள் பௌதீக ரீதியாகவும் வாய்மொழியாகவும் உண்மையான ஆன்மிக அனுபவத்தை அபகரித்துக் கொண்டுவிடும் என்பதால் புலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் கிளர்ச்சியூட்டும் உணர்ச்சிகளுக்கு அங்கே துளிக்கூட இடமில்லை.


ஸ்ரீ மஹாஸ்வாமி மீண்டும் அந்த நீர்த்தேக்கத்தில் படிகளில் உட்கார்ந்து பல்வேறு பார்வையாளர்களுடன் அதிக நேரம் உரையாடினார். அவர் எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர் தனது குரலின் அதிர்வுகளால் வெளிப்படுத்தும் எல்லா சொற்களுமே ரகசியமான உபதேசங்கள்தான் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் நான் அவரது குரலை என் இருதயத்தில் உணர்கிறேன். அதற்கு நானே சாட்சியாகவும் இருக்கிறேன். இருந்தாலும் அவ்வப்போது அவர் சில யோசனைகள் சொல்லும்போதும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தும் போதும் ஆலோசனைகளைத் தெரிவிக்கும் போதும் அதை புரிந்துகொள்ளக்கூடிய தகுதியானவர்கள் அவ்விதமே அறிந்துகொள்கிறார்கள். அதைவிட இப்படிச் சொல்லலாம். யாருக்கெல்லாம் அவர் சொல்வதை புரிந்துகொள்ளும் திறனை அவரே அருளியிருக்கிறாரோ அவர்களே அதைச் சரியாகப் புரிந்துகொள்கிறார்கள்.


இறுதியாகப் பேசிக்கொண்டே தனது குடிலை நோக்கிச் செல்கிறார். அவர் தனது குடிலுக்குள் சென்றுவிடுவார் என்று யூகித்து என்னுடைய தங்குமிடத்திற்கு சென்றேன். ஒரு தம்பளர் பாலும் அவலும் என்னுடைய இரவு உணவு. விரைவாக அதை முடித்துக்கொண்டு பாய்படுக்கையோடு இரவு தூங்குவதற்கு தாமரைக்குளத்துக்கு ஓடி வந்துவிட்டேன். தரையில் ஈரப்பதமிருந்ததால் அதைத் தாங்குவதற்கு தகுந்தாற்போல தடிமனானக் கோரைப் பாய், ஒரு கம்பளி விரிப்பு அப்புறம் தலை வரை இழுத்துப் போர்த்திக்கொள்ள கொசுவலை போல ஒரு காட்டன் போர்வை சகிதம் அங்கே இருந்தேன். என் உடைமைகள் எதுவும் களவாடப்படாமல் இருப்பதற்காக என்னுடைய பையையே எனது தலையணையாக்கிக்கொண்டேன். தெருநாய்களை விரட்டுவதற்காக தலைக்கு மேல் என் ஹரிக்கேன் விளக்கு காவல் காத்தது.



தாமரைக்குளத்துக்கு வந்தபோது ஸ்ரீ மஹாஸ்வாமி இன்னமும் ஓய்வெடுக்க போகவில்லை என்பதைக் கவனித்தேன். குடிலுக்குள் தென்னை ஓலையால் முடையப்பட்ட படுக்கையில் உட்கார்ந்து நாலைந்து பேர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து இரண்டு மூன்று மீட்டர்கள் தொலைவில் குடில் வாசலில் நான் பவ்யமாக நின்றிருந்தேன். பாரம்பரிய விதிகளுக்கு உட்பட்டு மரியாதை நிமித்தமாக அந்த அறைக்குள் நான் எப்போதும் நுழைவதேயில்லை. எவ்வித இடையூறுகளுமின்றி இரவு பதினொன்றிலிருந்து ஒரு மணி வரை அங்கேயே நின்று அவர் சிந்தனையில் ஊறியிருந்தேன். எனக்கிருந்த ஒரளவு சுமாரான தமிழ் மொழி அறிவும் அவரது சிறிதே மொழிமாறியிருக்கும் பேச்சு வழக்கும் என்னை கொஞ்சம் அந்த உரையாடலிலிருந்து திசைதிருப்பியதே தவிர மற்றபடி அது ஒரு சுவாரஸ்யமான பேச்சுவார்த்தையாக இருக்கிறது என்று புரிந்தது.


கேள்வி – பதில் கலையில் மற்றவர்களைக் காட்டிலும் ஸ்ரீ மஹாஸ்வாமி விற்பன்னராக இருக்கிறார். நிறைய சந்தர்ப்பங்களில் கேட்பர்களை வாய்விட்டு சிரிக்கச் செய்யும் அவர் எப்போதுமே தான் அப்படிச் சிரிக்கமாட்டார். அவர் லேசாக ஒரு புன்னகையை மட்டுமே சிந்துவார். அது அவரது திருமுகமண்டலத்தை அப்படியே தேஜஸுடன் பிரகாசிக்கச் செய்யும். எப்போதுமே கவனத்துடனும் முன்யோசனைகளுடன் கொஞ்சம் தீவிரமான முகத்துடனே காணப்படுவார். சில சமயங்களில் அவரிடமிருந்து அறிவுரைகள் கேட்டுக்கொள்பவர்கள் வாயடைத்துப் போன தருணங்களையும் அவர்களே ”ஏன் இவர் நம்மை அவரது இவ்வளவு அருகில் வைத்திருக்கிறார்?” என்பதைக் கூட தங்களுக்குள் கேட்டுக்கொள்ள நேரமில்லாமல் திண்டாடுவதையும் கவனித்திருக்கிறேன்.


இன்று எனக்கு மறக்கமுடியாத ஒரு அனுபவம் கிடைத்தது. என்னுடைய சக்தியை முழுவதும் சேமித்துக்கொண்டேன். இதுவும் அவரது சித்தம்தான் போலும். ஆகையால் இன்னொரு தரம் தனியாகத் தியானம் எதுவும் கிடையாது. அவரது கண்களைப் பருகுவதையும் அவரது மொத்த இருத்தலை ரசிப்பதோடும் மன நிறைவு கொண்டேன். அவரைப் பற்றி நான் நிறைய தெரிந்துகொள்ள அவர் அற்புதங்களின் மூலமாக எனக்குப் புரியவைக்கிறார்.


அவரது தேகத்தின் ஒவ்வொரு அணுவும் அபாரத் துடிப்புள்ளது. எதுவும் வீணாக விடப்படவில்லை. எதுவும் புனிதமில்லாமல் இல்லை. அவர் எதையும் எந்த நேரத்திலும் எளிதாகச் சாதிப்பார். அவரது படுக்கையிலிருந்து எனக்குப் பல முறை திருவடி தரிசனம் கொடுத்திருக்கிறார். அது புனித மலரடி. கடவுளின் திருப்பாதங்கள். பளிங்குப் படகு. அம்மெய்யினால் கவரப்பட்ட புலவர்கள் பலரின் வார்த்தைகளில் சொன்னால், அருளைப் பொழிவதில் அளவிடமுடியாமல் இருக்கும் அவரிடம் சரணாகதி அடைந்தவருக்கு நல்வழிகாட்டும் திருப்பாதங்கள் அவை!

தொடரும்….

#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி
#மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி19

About the author

Mannai RVS

Leave a Comment