இந்த வருஷத்தின் ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒரு விசித்திர எண்ணமானது பின்னர் தீர்மானமானது. ஸ்தூல சரீரமாக நாம் பார்க்கும் ஸ்ரீ மஹாஸ்வாமி அந்த கட்டுக்குள் மட்டும் இல்லை என்பது தர்க்கத்திற்கு இடமில்லாத அறிகுறிகள் மூலம் தெரியவந்தது. உதாரணத்திற்கு ஆசி வழங்கும் போது ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் உருவம் மெதுவாய்க் கரைந்து போய் தேகத்தின் ஓரங்கள் மட்டும் ஒளிக்கோடாய் பளீரென்று மின்னலடிப்பது போலிருக்கும். பின்னர் அவர் மசமசவென்று தெளிவில்லாததொரு நீலமேகமாகி அந்த மேகத்தைச் சுற்றி வெளிச்சம் பாதி ஊடுருவும் மெல்லிய புகைமூட்டம் போல காணப்படுவார்.
காலை நேரங்களில் சூரிய வெளிச்சத்தில் தரையில் அமர்ந்து ஈஸ்வரனின் நாமாக்களை ஜபித்துக்கொண்டிருக்கும் போது அவரது தேகத்திலிருந்து தெய்வீக ஒளி கசியும். அவரது அங்கங்கள் எளிய உருவாகி, மென்மையடைந்து அவரது முகம் மிருதுவாகி இன்னும் தேஜஸோடு சுடர்விடும். அவர் இந்த நிலைமாறும் உலகில் இல்லாதவராகவும் அடிப்படையாகவே இன்னொரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டு யாரிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவராகவே மாறிவிட்டது போலவும் எண்ணங்கள் நிச்சயமாக நமக்குள் பெருகும்.
இப்படி ஸ்ரீ மஹாஸ்வாமியின் அரூபமானத் தன்மை என்பது அடிக்கடி நிகழ்வது அல்ல. நீண்ட நேரமும் இப்படியே இருப்பதில்லை. எழுந்து அவர் நடந்து செல்வது ஒரு கனவு போலத் தோன்றும். பூமியின் மேல் பாதங்கள் லேசாகத் தொட கண்ணுக்குப் புலப்படாதவைகளின் மீதுள்ள கரிசனத்தோடு அப்படியே மிதந்து போவது போலதான் அவரது நகர்வுகள் அமையும். இந்த வெளியில் அவர் ஸ்தூலமாக இருக்கிறார். அவ்வளவுதான். தேவருலகத்தினரின் அமைப்பு போன்ற அவரது உடலின் அசைவுகள் வெகுகாலமாக தான் கட்டுண்டு கிடக்காத இவ்வுலக வஸ்துகளின் விதிப்படி தொடர்கிறது.
சில சமயங்களில் அவர் பக்தர்களுக்குப் பாதம் காட்டும் தோரணையில் சாய்ந்திருப்பார். அவர் எடையில்லாமல் காற்றையே கால்களுக்குத் தலையணையாக்கி நடந்து செல்பவர் என்று கண்களில் நுணுக்கமான பார்வையுள்ளவர்களுக்கு அந்த திருப்பாதங்கள் மூலம் தெரியும். ஆயிரமாயிரம் கிலோ மீட்டர்களை, எப்போதாவது பாதக் குறடுகள் அணிந்து, பெரும்பாலும் வெறும் காலால் பூமியைத் தொட்டு நடந்தவரது திருவடிப் பாதங்கள் சின்னக் குழந்தையின் உள்ளங்கை போல பிஞ்சாக, சுத்தமாக, வெள்ளையாக இருக்கும்.
எதுவும் முக்கியமில்லாத இந்நிலையில், அவசியமில்லாமல் எங்கும் போவதில்லை என்று அவரது நகர்வுகள் குறைத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தன்னை சைககள் மூலம் கூட வெளிக்காட்டிக்கொள்வதேயில்லை. பொதுவாக தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வுக்கு அவரது ஆசீர்வாதங்களை பெற வரும் போது மட்டும் மெதுவாக தூய அன்புடன் சில மென்மையான சைகளை கரங்களைக் காட்டிப் புரிகிறார்.
ஒன்று ரத்தமும் சதையுமாக நம்மைப் போலவே இன்னொரு சக மனிதர் போன்ற தோற்றமும் இன்னொன்று மெல்லிய பிரகாசமான மேகம் போலவும் என்று ஸ்ரீ மஹாஸ்வாமிக்கு இரண்டு தேகங்கள் உள்ளது போல தோன்றுகிறது. எது பிரதானமான ஒன்று? எது இரண்டாம்பட்சமானது? இவ்விரண்டிற்குமிடையே என்ன தொடர்பு?
சாதரணமான ஸ்தூல சரீரமானது மேகம் போன்ற ஒன்றால் கரைந்துபோகும் என்றால் இரண்டாவதையே நாம் நிஜமென்று கொள்ளலாமா? நாம் காணும் பௌதீக சரீரம் என்ற திரையினுள் நம்முடைய அறிவுக்கு எட்டாத திறனுள்ள ஏதேனும் தெய்வீகமான இயந்திரம் ஒன்று சுரந்து அந்த சரீரத்தைக் காட்டுகிறதோ? ஏதோ சுரக்கிறது என்பதைவிட அவரது பௌதீக உருவம் மறைவதற்கு உறிஞ்சப்படும் இயக்கத்தைக் கூட விளக்கமாகக் கூறலாம். காலத்தால் அழியும் இந்த பௌதீக உடல் மாற்றங்களைதான் நாம் எதிர்கொள்கிறோம். இன்னொரு உடல் இருக்கிறது. நுணுக்கமாக, மிகவும் தூய்மையாக ஒரு எல்லை வரை மாறுவதுதான் மெய்யான உடலாகத் தோன்றுகிறது. கேள்வி என்னவெனில்: இதுதான் கடைசியா?
இந்த மேகம் போன்ற மெய்யினை நிறுவும் இன்னொரு பொருள் இதைவிட ஆழமான தெய்வத்தன்மையோடு இருந்தால்? இந்த அற்புதமான மகானின் இதயத்தினுள், அவர் இப்படி தோற்றமளிக்கும்படி இன்னொன்று வஸ்து மறைந்திருந்தால்? யோசிக்கிறேன்.
ஒரு முனிவரின் அனுமதியின்றி அவரது இதயத்தினை ஒரு சாதாரணன் தனது இதயத்தினால் ஊடுருவிப் பார்ப்பது மிகவும் கஷ்டமான வலிமிகுந்த காரியமாகும். எப்படி அதனுள்ளே செல்வது? அகத்தினுள் செல்லும் சிறிய துவாரமான அதன் வாசலை எங்கே பார்ப்பது? மிகவும் முதிர்ந்த யோசனைக்குப் பின்னர் நம்பத்தக்கதொரு தீர்வு தோன்றுகிறது. கண்ணோடு கண்ணாக.. அவரது கண்களை.. அந்த அழகிய தீர்க்கமான கண்களை விசாரித்துப் பார்த்தால் என்ன நடக்கும்? ஆன்மாவிற்கு அவைதான் ஜன்னல்களல்லவோ? கடந்த மூன்று வருஷங்களாக ஸ்ரீ மஹாஸ்வாமி திருஷ்டி அனுக்ரஹம் அல்லது திருஷ்டி தீக்ஷை எனப்படும் கண்களால் எனக்கு பல சந்தர்ப்பங்களில் ஆசீர்வாதமளித்திருக்கிறார். அதுவே மெய்யான உண்மையைத் திறக்கும் சக்திவாய்ந்த வினையூக்கி!
>நான் இதை மேலும் விசாரணை செய்ய அவரது அனுமதியைப் பெற வேண்டும். இப்படி ஒரு வேண்டுகோளுடன் ஸ்ரீ மஹாஸ்வாமியின் முன்னால் வந்து நின்றால் அது அவருக்கு அதிர்ச்சியை அளிக்கக்கூடும். இப்படியாக இவ்வுலகத்து திரையின் பின்னால் நடப்பவை பற்றிய விசாரணையை மேற்கொள்ள ஒருவருக்கு ஆர்வமிருக்கிறது என்பதை துபாஷாக இருக்கும் உதவியாளர்களோ அல்லது பொதுஜனமான பக்தர்களுக்கோ தெரிந்தால் பீதியடைவார்கள்.
ஆனால் அவரது நடவடிக்கைகளையும் சாதாரண தோற்றத்திற்கும் பின்னால் இப்படியொன்று இருப்பது அப்பட்டமான உண்மை. முன் ஜாக்கிரதையோடு திரையிட்டது போல பூடகமாகக் கூட இந்திய பாரம்பரியத்தில் ஊறிய என் நண்பர்களிடம் இதை சந்தேகமாகக் கேட்பது ஆபத்துபோல தோன்றியது. ஆகையால் நான் தனியாகவே செயல்பட எண்ணினேன். ஸ்வாமிஜியையே தனிப்பட்ட சாட்சியாக எடுத்துக்கொண்டேன். இந்தப் புதிய சோதனையை ஆரம்பிக்கும்முன் அவருக்கு மானசீகமான எனது அபிப்ராயங்களைத் தெரிவித்தேன்.
“இது ஒத்துவராது என்று அவருக்குத் தோன்றினால், அவரே இதைத் தெரியப்படுத்தும் வழியைக் கண்டுபிடித்து எனக்குக் காட்டவேண்டும்”
என்னுடைய ஆராய்ச்சியை எதுவும் தடுக்காது/எதிர்க்காது என்று நினைத்த நான் படிப்படியாக அவரது கண்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். கடைசி ஆறு வாரகாலமாக எனக்கேற்பட்ட வாய்ப்புகள் பொய்க்கவில்லை. எனக்கு அமைந்த சந்தர்ப்பங்கள் கச்சிதமாகப் பொருந்தியது. அவருக்குச் சில செண்டிமீட்டர்கள் அருகாமையில் பலவித கோணங்களில் பலவித வெளிச்சங்களில் நெருங்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய ஒரு “வேலை” [’அனுக்ரஹ நாளில்’ என்பது சரியாக இருக்கும் – ஆர்.வி.எஸ்] நாளில் அவர் செய்யும் மதரீதியான சடங்குகள், கணக்கிலடங்கா கேள்விகளுக்கான பதில்கள், பக்தர்களின் வேண்டுகோள்கள் என்ற பல சந்தர்ப்பங்களில் அவருடைய விதம்விதமான செய்கைகளையும் அணுகுமுறைகளையும் நடத்தைகளையும் அணுஅணுவாகக் கூர்ந்து கவனித்தேன்.
Leave a Comment
You must be logged in to post a comment.