Spiritual

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 012

mahaswamigal
Written by Mannai RVS
12. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
===============================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்
காவி உடைக் குவியல்: கார்வெட்டிநகர், ஏப்ரல், 1971
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒருநாள் ஸ்ரீ மஹாஸ்வாமி தான் தங்கியிருந்த இடத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக வெகுதூரம் நடந்து சென்றார். வேணுகோபால ஸ்வாமி கோவிலுக்குப் பின்னால் மேற்குத் திசையில் சென்றுவிட்டு மதியம் முடிந்து மாலை ஆரம்பிக்கும் நேரத்திற்குதான் திரும்பிவந்தார். இம்முறை அவர் பின்னால் ஒரு பெருங்கூட்டம் சென்றது. அந்தக் கூட்டத்தினர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பரவசமாகக் காணப்பட்டார்கள். ஜனங்கள் ஸ்ரீ மஹாஸ்வாமியை தெரியாமல் கீழே தள்ளிவிட்டுவிடும் அருகில் நெருக்கியடித்துக்கொண்டு சென்றார்கள். அவரது உதவியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பாதுகாப்பு வளையம் அமைத்துச் சென்றார்கள். நான் இந்தக் கூட்டத்தின் பின்னால் வந்துகொண்டிருந்தேன்.

திடீரென்று இந்த கூட்டம் அப்படியே ஸ்தம்பித்து நின்று அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தது. மிகவும் கஷ்டப்பட்டு நான் கூட்டத்தின் மத்திக்குச் சென்று என்ன நடந்தது என்று அறிய முற்பட்டேன். ஸ்ரீ மஹாஸ்வாமியின் உதவியாளர்களும் இன்னும் சிலருமாக எட்டு பத்து பேர் தோளோடு தோள் இடிக்க பாதுகாப்பு வளையம் அமைத்து நின்றிருந்தார்கள். ”பாதுகாவலர் பிராணனை விட்டாலும் விடுவான் ஆனால் ஒரு போதும் சரணடையவே மாட்டான்” என்று ஸ்ரீ மஹாஸ்வாமியைப் பாதுகாக்கும் பணியில் இருப்பவர்களின் முகபாவங்கள் உறுதியைக் காட்டின. நான் நுனிக்காலில் எக்கி நின்று அந்த வளையத்துக்கு உள்ளே பார்த்தேன். வழக்கமாக அதனுள் ஸ்வாமிஜி நின்றுகொண்டிருப்பார். ஆனால் இப்போது அவரையும் காணவில்லை.

“அவர் பெரிய யோகிதான், ஆனால் அப்படியே பறந்து மறைந்து போயிருக்கும் சாத்தியம் இருக்கிறதா?” என்று நான் எண்ணினேன்.

அந்த உதவியாளர்களை நெருங்கினேன்.

“ஸ்ரீ மஹாஸ்வாமி எங்கே?” என்று கேட்டேன்.

கூட்டத்தைச் சமாளிக்கும் பணியில் இருந்த அந்த உதவியாளர் தலையை மட்டும் கீழ் நோக்கி பார்க்கும்படி ஆட்டினார். பாதுகாப்பு வளையமிட்டிருந்த வெற்று மார்புகளின் இடைவெளியில் என் கண்களுக்கு காவி உடைக் குவியல் ஒன்று தரையோடு தரையாக நிலத்தில் கிடப்பது தெரிந்தது. ஆனால் தண்டம் ஆகாயம் பார்க்க நின்றிருந்தது. அதுதான் அவர் அங்கே இருப்பதை உறுதிசெய்தது. ஆமாம். அவர் அந்தப் புழுதியில் குந்தியவாக்கில் ஸ்ரீ மஹாஸ்வாமி இருந்தார்!

உடனே நான் பின்னால் இருப்பவர்களுக்கு உதாரணமாக அப்படியே நிலத்தில் அமர்ந்துகொண்டேன். அவர்களும் அப்படியே குந்திய வாக்கில் தரையில் உட்கார்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தின் அடர்த்தி குறைய ஆரம்பித்தது. ஸ்ரீ மஹாஸ்வாமி எழுந்து நின்றார். எவ்வித சலனமுமின்றி தாமரைக் குளத்தைப் பார்த்து மெதுவாக நடக்க ஆரம்பித்தார். அவரை முற்றுகையிட்டவர்களும் கொஞ்சம் விலகி பின் தொடர்ந்தார்கள்.

பின்னர் நான் ஸ்ரீ மஹாஸ்வாமியின் இந்த செய்கையைப் பற்றி நினைத்துப்பார்த்தேன். இறந்தது போல உறைவது நம்மை வெகுவாகப் பாதிக்கிறது. ஏனென்றால் அது நிஜமான மரணத்தை நமக்கு நினைவூட்டுகிறது. சில மிருகங்கள் பிரேதங்களை தவிர்த்துவிடும். சில மிருகங்கள் இன்னொரு மிருகம் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தால் அதை விட்டு விலகி பயந்து ஓடிவிடுகின்றன.

பிறப்பும் இறப்பும் மனித வாழ்வில் இரு முக்கிய நிகழ்வுகள். நம்முடன் நெருங்கிப் பழகியவர்கள் இறந்துவிட்டால் நாம் மிகவும் துன்பமடைகிறோம். துயரத்தில் உழல்கிறோம். பிறப்பை எண்ணி மகிழ்ச்சியடையும் நாம் இறப்பில் நமது இருத்தலைப் பற்றிய எல்லைகளின் மர்மத்தை எண்ணி அமைதியாய் பீதியில் உறைந்துபோகிறோம். ஸ்ரீ மஹாஸ்வாமியின் இந்தத் தோற்றம் எனக்குள் பயபக்தியை உண்டாக்கியது. அவரது சலனமில்லாத அந்த ஒத்திகை எதற்கும் அஞ்சாமல் எப்படிச் சரணடைவது என்பதை எனக்குக் காட்டியது.

ஹரிக்கேன் விளக்கு: கார்வெட்டிநகர், மே, 1971
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
May be a black-and-white image of 1 person and outdoors

இன்றிரவு விசேஷமாக எதுவும் இருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். நான் தாமரைக்குளத்தின் படிக்கட்டில் வானம் பார்க்கப் படுத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் குடிசைக்கு நேரெதிரே குளத்தின் பாதி படிகள் இறங்கி அங்கே ஒரு படியின் நடுவில் பாயை விரித்தேன். என் தலைமாட்டில் ஒரு ஹரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டேன். நாயோ அல்லது வேறெந்த மிருகமோ அருகில் வரப் பயப்படுவதற்கும் யாராவது நிலவில்லாத இந்த இரவில் வந்தால் நான் படுத்திருப்பது தெரிவதற்கும் அந்த விளக்கு துணையாக இருக்கும். நன்றாகத் தூங்கினேன்.

சட்டென்று விழிப்பு வந்தது. யாரோ என் தலைக்குப் பின்னால் நிற்பது போலிருந்தது. எனக்கு மேல் படியில் இருக்கிறார். ஹரிக்கேன் விளக்கை எடுப்பதற்காகக் குனிகிறார். அந்த விளக்கை எடுத்த அந்த மனிதர் தலையிலிருந்து கால் வழியாக என்னை கடந்து மெதுவாகச் செல்கிறார். பின்னர் சட்டென்று திரும்பி மறைந்துவிட்டார். இவ்வளவு நடக்கும் வரையிலும் சட்டென்று விழித்தெழுந்த நான் பாயிலிருந்து எழுந்திருக்காத வண்ணம் ஏதோ பிரகாசமான ஒன்று என்னை ஆணியடித்தாற்போல பாயோடு கட்டிப்போட்டிருந்தது. அந்த மனிதர் என்னுடைய கால்மாட்டைக் கடந்து சென்றபிறகு தான் என் புலன்கள் வேலை செய்ய ஆரம்பித்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஆம்! அது ஸ்ரீ மஹாஸ்வாமிதான்! அவர்தான் என்னுடைய விளக்கை தன் கையில் எடுத்துக்கொண்டு படியேறிச் செல்கிறார். துள்ளிக்குதித்து எழுந்தேன். அவர் குடிசையினுள் புகுவதற்குள் எனக்கு நமஸ்கரிக்க நேரம் இருந்தது. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். அந்த சந்தோஷம் கொடுத்த அதிர்ச்சியில் தூக்கம் வரவில்லை. அந்த இரவின் பாதி நேரம் ஸ்ரீ மஹாஸ்வாமி தங்கியிருந்த குடிசையை பிரதக்ஷிணம் செய்துகொண்டிருந்தேன். பின்னர் களைப்படைந்து மீண்டும் படிக்கட்டில் நான் பாய்விரித்திருந்ததில் படுத்து காலை வரை நிம்மதியாகத் தூங்கினேன்.

அடுத்த நாள் மதியம் உதவியாளர் ஒருவர் நேற்றிரவு நடந்த எதைப் பற்றியும் வாயைத் திறக்காமல் ஹரிக்கேன் விளக்கை மட்டும் என்னிடம் கொடுத்துச் சென்றார்.

[ இந்த இடத்தில் இளம் கபீர்தாஸரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. முகம்மதியராகப் பிறந்ததால் பனாரஸிலிருந்த இந்து சாமியாரால் கபீரைப் பாரம்பரிய முறைப்படித் தொட்டு மந்திரம் சொல்லி தீக்ஷை தர இயலவில்லை. இதற்கு கபீர் ஒரு தந்திரம் செய்தார். தனது குரு தினமும் காலையில் கங்கைக்கு ஸ்நானம் செய்ய வருவார் என்று தெரிந்து அவர் வரும்வழியில் ஒரு படியில் படுத்துக்கொண்டார். அதுபோலவே விடியற்காலையில் கபீரின் குரு கங்கைக்கு ஸ்நானம் செய்ய வந்தார். கபீர் படியில் படுத்துக்கிடந்தது தெரியாமல் அவரை மிதித்துவிட்டார். யார் மீதோ ஏறிவிட்டோமே என்ற பதைபதைப்பில் “ராமா” என்றார் குரு. கபீர் இதை தனக்கு தீக்ஷையாக எடுத்துக்கொண்டார். அடுத்தநாள் தனது குருவிடம் சென்று உண்மையை ஒப்புக்கொண்டார் கபீர். அவரது சத்தியத்தினைக் கண்டு பிரமித்த அந்த குரு கபீரை தனது சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார். பின்னாளில் கபீர் பெரும் துறவியாகவும் குருவாகவும் போற்றப்பட்டார். ]

தொடரும்….

About the author

Mannai RVS

Leave a Comment