சின்ன காஞ்சீபுரத்தில் வியாஸ பூஜை உற்சவத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டேன். காலை 9 மணிக்கு மடத்தில் இருந்தேன். பல வர்ண உற்சவக் குடையின் கீழே இளைய சங்கராச்சாரியார் நின்றிருந்தார். அவர் அப்போதுதான் பாலாற்றாங்கரையிலிருந்து திரும்பியிருந்தார். அவருக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானையும் நாகஸ்வர மேளதாளங்களும் கச்சேரியாக வந்தது. பின்னால் இருநூறு பக்தர்கள் ஊர்வலமாக வந்தார்கள். மடத்தின் வாசலில் சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது. அது யானை முகத்தோன் கணபதி கடவுளுக்காக விக்னம் இல்லாமல் எல்லாம் நடப்பதற்காக பக்தியுடன் படைக்கப்பட்டது. அந்தணர்கள் கோஷ்டியாக வேதகோஷம் முழங்கினார்கள்.
நானும் இரண்டு வாழைப்பழங்கள் அந்த பெண்யானைக்கு நீட்டினேன். அதன் காலில் அடிபட்டிருந்தது. பாவம். அதனால் வேறு எந்த வேலையும் செய்யமுடியாததால் மடத்துக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இடையே தனது பாகனுக்கு தலைப்பாகையை எடுத்துக் கொடுத்தது. அவ்வப்போது அதன் துதிக்கையில் வைக்கப்படும் தட்சிணைகளை பாகனிடத்தில் கொடுத்துவிட்டு ஆசீர்வாதமாக தனது துதிக்கையை எதிரில் குனிந்து நிற்பவர்களின் தலையில் மிருதுவாக வைக்கிறது.
கணபதியின் ஆசீர்வாதமாக மக்கள் இதை பணிவோடு ஏற்றுக்கொள்கிறார்கள். துதிக்கையினால் இவ்விலங்குகள் செய்யும் வேலைகள் ஆச்சரியப்படவைக்கின்றன. முன்னோர்கள் இந்தத் துதிக்கையை கரம் என்றே குறிப்பிட்டார்கள். சம்ஸ்க்ருதத்தில் ஹஸ்தம் என்பது கரத்தைக் குறிக்கிறது. யானையின் துதிக்கைக்கும் ஹஸ்தின் என்றே சம்ஸ்க்ருதம் பெயர்சூட்டுகிறது. கையிருக்கும் மிருகம் என்பது அதன் அர்த்தம்.
வெளிநாட்டவர்களுக்கு மடத்தின் உள்ளே அனுமதி இல்லை என்று நான் கதவருகே காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டேன். கூட்டத்தினால் அடித்துக்கொண்டு போய்விடக்கூடாது என்றஞ்சி கதவுக்கு அருகில் இருந்த ஒரு கம்பத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். இந்த சமயத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமியும் பாலாற்றாங்கரையிலிருந்து இன்னொரு வழியாக மடத்துக்கு வந்து சேர்ந்தார்.
நான் ஸ்ரீ மஹாஸ்வாமியை நன்றாகப் பார்க்கும் தூரத்தில் இருந்தேன். கிட்டத்தட்ட அவரை நெருக்கியடிப்பது போலக் கூட்டம் முண்டியடித்தது. அது அவருக்கு தொந்தரவாக இருக்கவில்லை. அவர் வித்யாசமானவர்! அங்கே அவர்தான் ஸ்தூலமாக என் கண்ணுக்குத் தெரிந்தார், மற்றவர்கள் எல்லாம் வெறும் சாயைகள்!
ஸ்ரீ மஹாஸ்வாமி முகம் தலை என்று சகலத்தையும் வபனம் செய்திருந்தார். அவரது உருவம் இப்போது திருத்தமாகத் தெரிந்தது. அவரது அங்கங்களில் ஒரு மென்மை இருந்தது. ஒரு பலசாலி போல ஆச்சரியப்படத்தக்க சக்தியுடன் இருந்தார். எதையும் செய்யக்கூடிய ஆற்றல்படைத்த அவர் அனாவசிய இறுக்கங்கள் இல்லாமல் சாதாரணமாக இருந்தார். அவர் முன்னால் தொப்பென்று விழுந்து நமஸ்கரித்தார்கள். குனிந்து பவ்யமாக மரியாதை வணக்கம் செய்தார்கள். ஆரத்தி எடுத்தார்கள். இவை எல்லாவற்றையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு கருணையோடு தலையசைத்து அவர்களுக்கு கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்தார்.
அவர் ஓரடி இரண்டடி எடுத்துவைப்பதற்குள் இதுபோல அடிக்கடி நிறுத்தப்பட்டார். நிறைவாக கதவை அடைந்தார். பாரம்பரிய சங்கீதக்குழுக்களால் மிருதங்கம் வாசிக்கப்பட்டது. கருப்பு நிற பெரும் குழலான நாகஸ்வரங்கள் காதைக் கிழிப்பது போல இசைக்கப்பட்டது. அதன் உச்சஸ்தாயி காதுகளுக்கு எதிரான போர் என்பேன். அத்தகைய பெரும் சப்த இசைக்கு ஒருவர் பழக்கப்படவேண்டும். இவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டும் நான் என்னுடைய இடத்தை விட்டு விலகாமல் நின்றிருந்தேன். இவ்வளவு உறுதியாக நான் நின்ற காரணம் வீண்போகவில்லை. ஸ்ரீ மஹாஸ்வாமி என் முன்னே இரண்டடி தூரத்தில் கடந்துபோனார்.
அவரது முகத்தின் ஒரு துளியை நான் கண்டேன். புருவ கேசம் நீண்டிருந்தது. என்ன இருந்தாலும் அவரது வாய்தான் என்னை கவர்ந்திழுத்தது. அவரது இதழ்கள் எப்போதும் அற்புதமான புன்னகையை உதிர்க்கும். இப்போது அவை சண்டைக்கு முன்னர் தீவிரமாக இருப்பது போல இழுத்து மூடியிருந்தது. ஏதோ ஒரு முடிவுடன் மடத்துக்குள் நுழைவதைப் போல இருந்தாரே ஒழிய மதசம்பந்தப்பட்ட விழாகொண்டாட நுழைவதைப் போலில்லை என்பதை அவர் முகத்தைப் பார்த்தவர்கள் நினைத்துக்கொள்ளலாம்.
என்னுடைய புஷ்பங்களையும் பழங்களையும் ஒருவரிடம் கொடுத்து உள்ளே சேர்ப்பிக்கச் சொன்னேன். வாசல் பாதுகாவலர்கள் தடுத்த இடத்திலிருந்து நகராமல் வெளியே நின்றிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக இடதுபுறம் வாத்திய கோஷ்டியினர் வாசித்துக்கொண்டிருந்த பக்கம் ஒதுங்கியிருந்தேன். வெள்ளையடிக்கப்பட்ட தட்டி இருபுறமும் மறைக்க நடுவில் மேடை இருந்தது. நான் நிற்குமிடத்திலிருந்து அந்த முற்றம் இருபது மீட்டர் தூரத்தில் இருந்தது. அங்கே வீற்றிருக்கும் ஸ்ரீ மஹாஸ்வாமியை நான் அடிக்கடித் தரிசித்துக்கொண்டிருந்தேன். அந்த மேடையை எப்போதாவது திரை மறைக்கும். அவர் பூஜையை நடத்துவார்.
ஸ்ரீ மஹாஸ்வாமி வீற்றிருந்து பூஜை செய்யும் மேடைக்கு முன்னால் தரையில் இரண்டு வரிசைகளில் நிறைய சந்நியாசிகள் வயது வித்திசாயமில்லாமல் காவி உடையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இரண்டு மரத்தடுப்புகள் போடப்பட்டிருந்தன. அந்த தடுப்புகளுக்குள் சில பக்தர்கள் நெருக்கியடித்துக்கொண்டு பூஜையை அருகில் பார்க்க ஒருவர் கால் மேல் இன்னொருவர் போட்டு அமர்ந்திருந்தார்கள்.
அவர்களுக்குப் பின்னாலும் நான் நிற்கும் கதவிருக்கும் திசையில் இரண்டு மூன்று வரிசைகளில் வயதானவர்களின் தலைகள் தெரிந்தன. பின்னர் பன்னிரெண்டு மீட்டர் இடைவெளியில் பொதுஜனங்கள் அமர்ந்திருந்தார்கள். பின்னால் இருப்பவர்களின் தரிசனத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று தெரியாமல் முன்னால் நின்ற சிலரை உட்காரச் சொன்னேன். நான் என் கால் நுனியில் நின்று எக்கி எக்கி பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லாத் திசைகளிலும் தலையை நீட்டி பூஜையைப் பார்க்கப் பிரயர்த்தனப்பட்டேன்.
அப்போது ஒரு தமிழ் பக்தரைப் பற்றிய புராதனமானக் கதையொன்று ஞாபகம் வந்தது. கீழ்ஜாதியினால் சிவன் கோயிலுக்குள் வரக்கூடாதென்று அவரைத் தடுத்துவிட்டார்கள். சிவனே அவரது இஷ்ட தெய்வம். வெளியில் நிற்கிறார். சிவனுக்கு முன்னால் நிற்கும் நந்தி பெருமானைக் காண விடாமல் மறைக்கிறது. அதை சற்றே விலகும்படியும் தனக்கு சிவபெருமானைத் தரிசிக்கவேண்டும் என்றும் துதிக்கிறார். அது விலகிவிடுகிறது. பின்னாளில் அவர் பெரிய நாயன்மாராகப் போற்றப்பட்டார். இந்தக் கதையில் அந்தப் பெரியவரை ஸ்வாமியைப் பார்க்கவிடாமல் தடுத்தவர்களுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் இல்லை. நாம் இந்தியாவில் இருக்கிறோம். ஆகையால் நல்லவைகளையே நினைக்கவேண்டும்…..
பூஜையைப் பார்ப்பதில் நானும் உறுதியோடு இருந்திருக்கிறேன். இறுதிவரையில் ஐந்து மணி நேரம் நின்றிருக்கிறேன். எளிதல்ல. வாத்திய கோஷ்டியினர் ஒரு வெளிநாட்டுக்காரர் இவ்வளவு நேரமாக தங்கள் கச்சேரியை ரசித்திருக்கிறார் என்ற சந்தோஷத்தில் கடந்துபோனார்கள். என்னுடைய செவிப்பறை அன்று கிழியாமல் இருந்தது என்றால் அதற்கு ஸ்ரீ மஹாஸ்வாமிகள்தான் காரணம். அதுமட்டுமல்லாமல் சாப்பிடவோ அல்லது எதுவும் குடிக்கக்கூட எனக்கு எந்த எண்ணமும் தோன்றவில்லை. சிலசமயங்களில் சூழ்நிலை கூட ஒருவனை இப்படித் துறவியாக்கிவிடுகிறது. கடைசி மணி நேரத்தில் கூட்டம் குறையத்துவங்கியவுடன் பூஜை முழுவதையும் கண்ணாரக் காண்பதற்கு ஒரு இடம் கிடைத்தது. அங்கிருந்து எல்லாம் முழுமையாகத் தெரிந்தது.
மெய்யான பூஜை என்றால் என்ன என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். ஸ்ரீ மஹாஸ்வாமி தனது கரங்களினால் சில முத்திரைகளை தலைக்கு மேலே பிடித்த போது என்னுடைய முதுகுத்தண்டில் மின்சாரம் ஓடியது. அந்த மொத்த இடமும் பரிசுத்தமான காற்றினால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் மூலம் அதோ அங்கே மேடையில் ஸ்ரீ மஹாஸ்வாமிகளாக வீற்றிருக்கிறது. வழக்கம்போல எனக்கு அங்கே அவர் ஒருவர்தான் உயிர்ப்புடன் இருந்தார். பூஜைகளின் போது அவர் சிவபெருமான் போலவே இருப்பார் என்று சிலர் பேசிக் கேட்டிருக்கிறேன். இம்முறை அவர் சிவலிங்கம் போல இருந்தார். அவர் ஒரு ஜோதிப் பிழம்பு, சந்தேகமில்லாமல்!
Leave a Comment
You must be logged in to post a comment.